இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபற்றும் அகில இலங்கை ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்து சுற்றுப் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) கிண்ணியாவில் ஆரம்பமானது.
திருகோணமலை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இணைப்பாளர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், விசேட விருந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், கௌரவ விருந்தினராக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை உள்ளடங்களாக பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண கால்பந்தாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கிண்ணியா பாடசாலைகள்
20 வயதுக்கு கீழ் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ..
இன்று ஆரம்பமாகியுள்ள இந்தப் போட்டித் தொடர் தொடர்ந்து 3 நாட்களுக்கு இடம்பெறும். இதில், ஆண்களுக்கான போட்டிகள் கிண்ணியா எழில் அரங்கு மைதானம் மற்றும் பைசல் நகர் அல் – இர்பான் மைதானம் என்பவற்றிலும், பெண்களுக்கான போட்டிகள் சின்னம்பிள்ளைச் சேனை அல் – புர்க்கான் வித்தியாலய மைதானம் மற்றும் கருமலையூற்று ராடோ விளையாட்டு மைதானம் என்பவற்றிலும் நடைபெறவுள்ளன.
இம்முறைப் போட்டித் தொடரில் தேசிய மட்டத்தில் உள்ள 25 மாவட்டங்களிலிருந்து 54 பாடசாலை அணிகள் பங்குபற்றுகின்றன. கடந்த வருடத்தைப் போல இவ்வருடமும் பல முன்னணி பாடசாலைகள் இம்முறை போட்டித் தொடரில் பங்குபற்றுகின்றன.
இதில் கொழும்பிலிருந்து ஸாஹிரா கல்லூரி மற்றும் ஹமீத் அல் – ஹுசைனி கல்லூரியும், யாழ்ப்பாணத்திலிருந்து புனித ஹென்ரியரசர் மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரியும், திருகோணமலையிலிருந்து அல் – அக்ஸா வித்தியாலயமும் இம்முறை போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.