இலங்கை பாடசாலைகள் ரக்பி சம்மேளனத்தால் நடத்தப்பட்டு வருகின்ற பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான அணிக்கு 15 பேர் கொண்ட ரக்பி லீக் போட்டித் தொடரை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு இலங்கை பாடசாலைகள் ரக்பி சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தென் மாகாணத்திலிருந்து காலி றிச்மண்ட் கல்லூரி, இத்தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட செய்தி வெளியாகி சில நிமிடங்களிலேயே இந்த ஒத்திவைப்பு தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டது.
இம்முறை போட்டித் தொடரின் காலிறுதிப் போட்டிகள் இம்மாதம் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் மைதானத்தில் நடைபெறவிருந்த நிலையில், பெரும்பாலான பாடசாலைகளின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டித் தொடரின் எஞ்சிய போட்டிகளை பிற்போடுவதற்கு பாடசாலைகள் ரக்பி சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்முறைப் போட்டித் தொடரில் பங்குபற்றிய வீரர்களில் பெரும்பாலானோர் உபாதைக்குள்ளாகியுள்ளனர். எனவே, காலிறுதிப் போட்டிகளை பிற்போடுவதற்கு தீர்மானித்தோம் என இலங்கை பாடசாலைகள் ரக்பி சம்மேளனத்தின் செயலாளர் டென்சில் டார்லிக் எமது இணையதளத்துக்கு தெரிவித்தார்.
இந்நிலையில், பிற்போடப்பட்ட போட்டிகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 3ஆம் தவணையின் போது மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.