அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் T20I தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதுடன், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், அவுஸ்திரேலியா அணிக்கெதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி விபரத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதில் ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப் தலைவராகவும், T20I அணிக்கு ரோவ்மன் பவெல் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் T20I அணியில் ஆண்ட்ரே ரஸல், நிக்கோலஸ் பூராண் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர அதிரடி வீரரான ஷிம்ரான் ஹெட்மயர் T20I மற்றும் ஒருநாள் தொடரில் மீண்டும் கழற்றிவிடப்பட்டுள்ளார்.
இதனிடையே, முன்வரிசை துடுப்பாட்ட வீரர் டெடி பிஷப் மற்றும் விக்கெட் துடுப்பாட்ட வீரர் டெவின் இம்லாச் ஆகிய இருவரும் அறிமுக வீரர்களாக ஒருநாள் அணிக்கு பெயரிடப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஜேசன் ஹோல்டர் மற்றும் கைல் மேயர்ஸ் T20I அணியில் மாத்திரம் சேர்க்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் தொடரில் விளையாட விருப்பமில்லை என்று கூறிவிட்டு, லீக் தொடரில் இருவரும் பங்கேற்று வருகின்றனர். அதேபோல, பிரண்டென் கிங் மற்றும் ஷெர்ஃபானே ரூதர்போர்ட் இருவரும் லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த T20I தொடரிலேயே அனுபவ வீரரான ஆண்ட்ரே ரஸஸ் மேற்கிந்திய தீவுகள் அணியில் சில ஆண்டுகளுக்கு பின் சேர்க்கப்பட்டார். தற்போது ஹோல்டர் மற்றும் மேயர்ஸ் உள்ளிட்டோரும் திரும்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் டெட்டி பிஷப், டெவின் இம்லாச், ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஹாட் மற்றும் ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் உள்ளிட்டோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (தலைவர்), அல்ஸாரி ஜோசப், அலிக் அதானாஸ், டெடி பிஷப், கேசி கார்டி, ரொஸ்டன் சேஸ், மெத்யூ ஃபோர்ட், ஜஸ்டின் க்ரீவ்ஸ், கவேம் ஹோட்ஜ், டெவின் இம்லாச், குடகேஷ் மோட்டி, க்ஜோர்ன் ஓட்டேலி, ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஓஷானே தோமஸ், ஹெய்டன் வோல்ஸ் ஜூனியர்.
மேற்கிந்திய தீவுகள் டி20 அணி: ரோவ்மேன் பவெல் (தலைவர்), ஷாய் ஹோப், ஜொன்சன் சார்லஸ், ரொஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூராண், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்போர்ட், ரோமரியோ ஷெப்ஃபர்ட், ஓஷானே தோமஸ்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<