கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக உமர் குல்

Lanka Premier League – 2021

245

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரில் (LPL) களமிறங்கவுள்ள கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் முகாமையாளர் அசாம் கான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண LPL தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மொயின் கான் பணியாற்றியிருந்தார்.

அவரது பயிற்றுவிப்பின் கீழ் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி LPL தொடரின் முதல் அத்தியாயத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறியதுடன், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியைத் தழுவி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதனிடையே, இந்த ஆண்டு LPL தொடர் நடைபெறுகின்ற காலப்பகுதியில் மொயின் கானின் மகன் அசாம் கானுக்கு திருமணம் நடைபெற உள்ளதால், இம்முறை LPL போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக மொயின் கான் பணியாற்ற மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பணியாற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் உமர் குல்லை நியமிக்க அந்த அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு LPL தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் Icon வீரராக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் மொஹமட் ஹபீஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை வீரர்களான இசுரு உதான, பானுக ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LPL தொடரின் இரண்டாவது பருவம் டிசம்பர் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<