பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடர் ஐக்கிய எமிரேட்ஸ் நாடுகளில் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
அந்த அடிப்படையில் இந்த மாதம் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி அதிரடி மத்தியதர வரிசை துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் சேர்க்கப்பட்டுள்ளார்.
உமர் அக்மல் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண போட்டிகளின் போது பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்தார். அதன்பின் பாகிஸ்தான் இங்கிலாந்து செல்வதற்காக பயிற்சி முகாம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக உமர் அக்மல் மீது புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி பிரகாசித்துள்ளதால் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ளார்.
26 வயதான உமர் அக்மல் 2009ஆம் ஆண்டு கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியின் போது டி20 கிரிக்கட்டில் காலடி எடுத்து வைத்து தற்போது வரையான 7 வருட காலப்பகுதியில் 79 டி20 போட்டிகளில் விளையாடி 26.80 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1689 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் அதிகபட்ச ஓட்டம் 94 ஓட்டங்களாகும். பந்தை வேகமாகவும் நேர்த்தியாகவும் அடிக்கும் திறன் கொண்ட உமர் அக்மலின் டி20 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரெட் 122.92ஆக உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1.சர்பிராஸ் அஹமத் (தலைவர்), 2. காலித் லத்தீப், 3. ஷர்ஜீல் கான், 4. சுஹைப் மலிக், 5. மொகமத் ரிஸ்வான், 6. பாபர் அசாம், 7. மொகமத் நவாஸ், 8. இமாத் வசிம், 9. மொகமத் ஆமீர், 10. வஹாப் ரியாஸ், 11. ஹசன் அலி, 12. சுஹைல் தன்வீர், 13. ரம்மான் ரயீஸ், 14. உமர் அக்மல், 15. சாத் நசீம்.
பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் தொடரின் காலநேர அட்டவணை
- 1ஆவது டி20 : செப்டம்பர் 23 (துபாய்)
- 2ஆவது டி20 : செப்டம்பர் 24 (துபாய்)
- 3ஆவது டி20 : செப்டம்பர் 27 (அபுதாபி)
- 1ஆவது ஒருநாள் போட்டி : செப்டம்பர் 30 (சார்ஜாஹ்)
- 2ஆவது ஒருநாள் போட்டி : ஒக்டோபர் 02 (சார்ஜாஹ்)
- 3ஆவது ஒருநாள் போட்டி : ஒக்டோபர் 05 (அபுதாபி)
- 1ஆவது டெஸ்ட் : ஒக்டோபர் 13 – 17 (துபாய்)
- 2ஆவது டெஸ்ட் : ஒக்டோபர் 21 – 25 (அபுதாபி)
- 3ஆவது டெஸ்ட் : ஒக்டோபர் 30 – நவம்பர் 03 (சார்ஜாஹ்)
இதேவேளை பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முகாமையாளராக இருந்தவர் இன்திகாப் ஆலம். இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. மேலும், இவரது ஒப்பந்தத்தை நீடிக்க பாகிஸ்தான் கிரிக்கட் சபை விரும்பவில்லை. இதனால் முன்னாள் விக்கட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான வசிம் பாரியை புதிய முகாமையாளராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கட் சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “அலாமின் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. பாகிஸ்தான் கிரிக்கட் சபைக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பிற்கு, கட்டாயம் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தாக வேண்டும். பாகிஸ்தான் அணி இங்கிலாந்து தொடரில் எந்தவொரு சிக்கலிலும் சிக்காமல் இருக்க இவரது பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அணியின் வெற்றிக்கு இவரது செயற்பாடு மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளது.