UEFA சம்பியன் கிண்ணச் சுற்றுப்போட்டியில் றியல் மட்றிட் அணியுடன் பலப்பரீட்சை நடாத்திய ப்ரீமியர் லீக் கழகமான டொடென்ஹம் அணி, அதிரடியாக ஆடி 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது. கடந்த சில வாரங்களாக றியல் மட்றிட் அணி அதிர்ச்சி தோல்விகளை தனது மோசமான ஆட்டத்தினால் சந்தித்து வருகிறது.
டொடென்ஹம் (Tottenham) கால்பந்து கழகத்தின் அரங்கமான வெம்ப்லீ (Wembley) அரங்கில் நடைபெற்ற UEFA சம்பியன் கிண்ணச் சுற்றுப்போட்டியில், கடந்த பருவகாலத்தின் UEFA கிண்ண சம்பியனான றியல் மட்றிட் அணியுடனான போட்டியில் டொடென்ஹாம் கால்பந்து கழகம் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னர் றியல் மட்றிட் அரங்கில் பலப்பரீட்சை நடாத்திய இவ்விரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியை ஆரம்பித்த றியல் மட்றிட் அணி ஆரம்பம் முதலே எதிரணியின் எல்லைக்குள் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது. எனினும் முதலாவது சிறந்த வாய்ப்பை போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் டொடென்ஹம் அணியின் முன்கள வீரரான ஹரீ கேய்ன் (Harry Kane) பெற்றார். எதிரணியின் பின்களத்தில் விடப்பட்ட தவறை பயன்படுத்தி பந்தை கோலை நோக்கி உதைந்த போதும், போதிய வேகம் காணப்படாமையினால் றியல் மட்றிட் அணியின் கோல்காப்பாளர் பந்தை இலகுவாகக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து போட்டியின் 20 ஆவது நிமிடத்தில் மார்சலோ மூலம் பெனால்டி எல்லையின் வலது மூலையில் தடுத்தாடப்பட்ட பந்தானது பெனால்டி எல்லையிலிருந்த டொடென்ஹம் அணி வீரரான விங்க்ஸை (Winks) வந்தடைந்தது. எனினும் அந்த வாய்ப்பின் மூலம் தனது அணிக்கான கோலைப் பெற முடியவில்லை.
டொடென்ஹம் அணி போட்டியின் 26 ஆவது நிமிடத்தில் டெலே அலி (Dele Ali) மூலம் முதல் கோலைப் பெற்றது. மத்தியகளத்திலிருந்து தூரப் பந்து பரிமாற்றம் மூலம் பெனால்டி எல்லையின் வலது பக்கத்திற்கு வழங்கப்பட்ட பந்தை டிரிபர் (Tripper) தரை வழியாக பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பியதன் மூலமே இக்கோல் பெறப்பட்டது.
இலங்கைக்கு எதிராக கோல் மழை பொழிந்த உஸ்பகிஸ்தான்
டொடென்ஹம் அணியால் விடுக்கப்பட்ட சவாலைத் தொடர்ந்து றியல் மட்றிட் அணியால் பல வெற்றிகரமான முயற்சிகள் தொடராக மேற்கொள்ளப்பட்டன. எனினும் அந்த முயற்சிகள் எவற்றிலும் அவர்கள் வெற்றி காண முடியவில்லை.
போட்டியின் 41 ஆவது நிமிடத்தில் தனது அணியை இரண்டு கோல்களால் முன்னிலைப்படுத்தும் வாய்ப்பு ஹரீ கேய்னுக்கு கிடைக்கப்பெற்றது. எனினும் சிறப்பாக செயற்பட்ட பின்கள வீரரான ஸர்ஜீயோ ராமோஸ் மூலம் பந்து தடுக்கப்பட்டது. அவ்வேளையில் டொடென்ஹம் அணி வீரர்களால் பெனால்டிக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும் நடுவர் அதனை வழங்க மறுத்தார்.
அதனைத் தொடர்ந்து ஓரு நிமிடத்தின் பின்னர் பென்ஸமா (Benzema) மற்றும் ரொனால்டோ ஆகியோரிற்கிடையில் நடைபெற்ற சிறந்த பந்து பரிமாற்றம் மூலம், பென்ஸமா வலது பக்க பெனால்டி எல்லையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை ரொனால்டோ கோலை நோக்கி உதைந்தபோதும், பந்தானது பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டது. அத்துடன் முதல் பாதி டொடென்ஹம் அணி பெற்ற கோலுடன் நிறைவுற்றது.
முதல் பாதி: டொடென்ஹம் 1 – 0 றியல் மட்றிட்
இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பமாகி வெறும் 10 நிமிடங்கள் கழிந்திருந்த நிலையில் டெலே அலீ மூலம் இரண்டாவது கோலும் பெறப்பட்டது. பெனால்டி எல்லைக்கு வெளியேயிருந்து உதையப்பட்ட பந்தானது பின்கள வீரரான ஸர்ஜீயோ ராமோஸின் கால்களில்பட்டு வலது பக்க மூலையால் கோலினுள் சென்றது.
61 ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பபின் போது உள்ளனுப்பப்பட்ட பந்து தரையை அடைந்தபோது பல றியல் மட்றிட் வீரர்கள் கோலாக்க முயன்றனர். அதேவேளை மிக அருகிலிருந்த ராமோஸ் பந்தை சிறப்பாக பெற்று கோலை நோக்கி உதைந்தபோது, தனது அணியின் சக வீரரான ரொனால்டோவின் கால்களில்பட்டதன் மூலம் அவ்வாய்ப்பும் வீணானது.
மாலைதீவுடனான விறுவிறுப்பான ஆட்டத்தை சமப்படுத்திய இலங்கை
அதனைத் தொடர்நது 64 ஆவது நிமிடத்தில் டெலே அலி மூலம் டொடென்ஹம் அணியின் மத்திய களத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு எதிரணியின் மத்தியகளத்தின் வலதுபக்கத்திற்கு வழங்கப்பட்ட பந்தை பெற்ற ஹரீ கேய்ன், விரைவாக செயற்பட்டு இடதுபக்கம் வழியாக கோலை நோக்கி சென்று கொண்டிருந்த எரிக்ஸனிற்கு (Eriksen) பந்தை வழங்கினார். சிறப்பாக பரிமாறப்பட்ட இந்த பந்து பரிமாற்றம் மூலம் டொடென்ஹம் அணி மூன்றாவது கோலை எரிக்ஸன் மூலம் பெற்றது.
டெலே அலீ தனக்கான சிறந்த ஹட்ரிக் வாய்ப்பை போட்டியின் 77 ஆவது நிமிடத்தில் தவறவிட்டார். இவ்வாய்ப்பின் போது எந்த பின்கள வீரரின் சவாலுமின்றி டெலே அலீ, ஹெடர் மூலம் அனுப்பிய பந்தானது கோல் கம்பங்களிற்கு வெளியால் சென்றது.
போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பின் மூலம் றியல் மட்றிட் அணி முதல் கோலைப் பெற்றது. கோணர் வாய்ப்பின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தானது தரையை அடைந்த போது ரொனால்டோ பந்தை வேகமாக உதைந்து கோலாக்கினார். எனினும் கோலின் பின்னர் எந்தவொரு வீரரும் கோலிற்கான கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.
இறுதி பத்து நிமிடங்களிலும் இரு அணிகளும் கோலைப் பெறுவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அவை வெற்றியளிக்காத பட்சத்தில் டொடென்ஹம் அணி போட்டியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வென்றது.
முழு நேரம்: டொடென்ஹம் 3 – 1 றியல் மட்றிட்
மேலும் சில போட்டி முடிவுகள்
போர்டோ (Porto) 3 – 1 லீப்ஸீக்
டோர்ட்மன்ட் 1 – 1 அபோயில் நீகோஸீயா (Apoel Nicosia)
ஸக்தர் டோனட்ஸெக் (Shakhtar Donetsk) 3 – 1 பெயனுர்ட் (Feyenoord)
ஸெவில்லா 2 – 1 ஸ்பார்டக் மொஸ்க்வா (Spartak Moskva)
மென்சஸ்டர் சிடி 4 – 2 நெபோலி (Napoli)