ஐரோப்பியக் கிண்ணம் இன்று பிரான்சில் ஆரம்பம்

422
UEFA Euro cup 2016

உலகக் கிண்ண கால்பந்து (FIFA) போட்டிக்கு அடுத்து மிகவும் பிரபலம் பெற்றது ஐரோப்பியக் கிண்ணப் போட்டியாகும். மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் இந்தத் தொடரில் ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே கலந்து கொள்ளும்.

உலகக் கிண்ணத்தைப் போலவே இந்தத் தொடரும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 1960ஆம் ஆண்டு இந்தப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2012ஆம் ஆண்டு போலந்தும், உக்ரைனும் இணைந்து போட்டியை நடத்தியது. இதில் ஸ்பெயின் சம்பியன் பட்டம் பெற்றது.

கால்பந்து திருவிழா

15ஆவது ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்சில் இன்று நள்ளிரவு தொடங்குகிறது. ஜூலை 10ஆம் திகதி வரை ஒரு மாத காலம் இந்த கால்பந்து திருவிழா நடைபெறுகிறது. மொத்தம் 54 போட்டிகள்  இடம்பெறுகிறது. ஐரோப்பிய கால்பந்து தொடரை பிரான்ஸ் நடத்துவது இது 3ஆவது முறையாகும். அறிமுகத் தொடர் 1960ஆம் ஆண்டிலும், அதன் பின்னர் 1984ஆம் ஆண்டி லும் பிரான்சில் போட்டிகள் நடைபெற்றது.

எப்போதும் இல்லாத வகையில் இம்முறை 24 நாடுகள் பங்கேற்கின்றன. இவை 6 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. நடப்பு சம்பியனான ஸ்பெயின்டிபிரிவில் உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.

நொக் அவுட் சுற்று

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக நொக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் 16 அணிகள் மோதும். லீக் சுற்றில் 6 பிரிவுகளிலும் 3ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகளின் புள்ளிகள் அடிப்படையில் மீதமுள்ள 4 அணிகள் தெரிவாகும்.

இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு செயின்ட் டெனிஸ் நகரில் உள்ள ஸ்டேடு டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதலாவது போட்டியில் போட்டியை நடத்தும் பிரான்ஸ், ருமேனியாவுடன் மோதுகிறது. இந்த கால்பந்து தொடரை சோனி சிக்ஸ் மற்றும் சோனி இஎஸ்பிஎன் சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

22ஆம் திகதி  வரை லீக் போட்டிகள் நடைபெறுகிறது. 25ஆம் திகதி நொக் அவுட் சுற்று தொடங்கும். காலிறுதி ஆட்டங்கள் ஜூன் 30, ஜூலை 1 மற்றும் 3, 4ஆம்  திகதிகளிலும், ஜூலை 6 மற்றும் 7ஆம்  திகதிகளில் அரையிறுதியும், 10ஆம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.

முக்கிய வீரர்கள்

உலகின் சிறந்த கால்பந்து வீரரான போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இந்த சீசனில் 51 போட்டிகளில்  51 கோல்கள் அடித்துள்ளார்.

ஜெமர்மனியின் தோமஸ் முல்லர், பிரான்சின் பவுல் போகாபா, போலந்தின் லெவர் ஸ்டோஸ்கி, வேல்ஸின் காரத் பாலே, சுவீடனின் இப்ராகிமோவிக், ஸ்பெயினின் இனியஸ்டா, இங்கிலாந்தின் ரூனி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்தப்போட்டியில் முத்திரை பதிக்கக் காத்திருக்கின்றனர்.

வரலாறு

ஐரோப்பியக் கிண்ணத்தை ஜெர்மனி, ஸ்பெயின் அதிகபட்சமாக தலா 3 முறை வென்றுள்ளன. பிரான்ஸ் 2 முறையும், சோவியத் யூனியன், இத்தாலி, செக்கோஸ்லோவாக்கியா, நெதர்லாந்து, டென்மார்க், கிரீஸ் ஆகிய அணிகள் தலா 1 முறையும் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. உலகக் கிண்ண  சம்பியனான ஜெர்மனி, ஐரோப்பிய கிண்ணத்தை சுவீகரிக்கப் போராடுகிறது. நடப்பு சம்பியனான ஸ்பெயின் தொடர்ச்சியாக 3ஆவது முறையாகப் பட்டம் வெல்லும் கனவுடன் தொடரை சந்திக்கிறது. போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, போர்த்துகல், பெல்ஜியம் போன்ற அணிகளும் சவாலாக விளங்கும்.

பாதுகாப்பு அதிகரிப்பு

பிரான்சில் கடந்த நவம்பர் மாதம் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. மேலும் ஐரோப்பிய கால்பந்து தொடரின் போது தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் பிரான்சில் போட்டி நடைபெறும் நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியின் மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடியாகும். சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.64 கோடியும், 2ஆவது இடம்பெறும் அணிக்கு ரூ.37 கோடியும் பரிசாகக் கிடைக்கும். இதுதவிர பங்கேற்பு கட்டணம், ஒவ்வொரு வெற்றிக்கும் பல கோடி பரிசு மழை அணிகளுக்குக் கிட்டும்.

இதுவரை நடந்த ஐரோப்பிய கிண்ண சம்பியன்கள்

1960 – சோவியத் யூனியன்
1964 – ஸ்பெயின்
1968 – இத்தாலி
1972 – மேற்கு ஜெர்மனி
1976 – செக்கோஸ்லோவக்கியா
1980 – மேற்கு ஜெர்மனி
1984 – பிரான்ஸ்
1988 – நெதர்லாந்து
1992 – டென்மார்க்
1996 – ஜெர்மனி
2000 – பிரான்ஸ்
2004 – கிரீஸ்
2008 – ஸ்பெயின்
2012 – ஸ்பெயின்

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்