இங்கிலாந்து, டென்மார்க் அணிகள் யூரோ அரையிறுதியில்

UEFA EURO 2020

295

யூரோ 2020 கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றில் முறையே செக் குடியரசு மற்றும் உக்ரைன் அணிகளை வீழ்த்திய டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகள் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. 

செக் குடியரசு எதிர் டென்மார்க்  

இதற்கு முன்னர் இடம்பெற்ற காலிறுதிக்கு முன்னைய சுற்றில் நெதர்லாந்தை 2-0 என வெற்றி கொண்ட செக் குடியரசும், வேல்ஸ் அணியை 4-0 என வெற்றி கொண்ட டென்மார்க் அணியும் அசர்பிஜினில் உள்ள Baku Olympic அரங்கில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற காலிறுதி மோதலில் சந்தித்தன.  

பெனால்டியின் வென்ற ஸ்பெயின், பெல்ஜியத்தை வீழ்த்திய இத்தாலி அரையிறுதியில்

போட்டியின் 5ஆவது நிமிடத்தில் டென்மார்க் அணிக்கு கிடைத்த கோணர் வாய்ப்பின்போது உள்வந்த பந்தை Delaney கோலுக்குள் ஹெடர் செய்து டென்மார்க் அணியை முன்னிலைப்படுத்தினார். 

மீண்டும் முதல் பாதி நிறைவடைய சில நிமிடங்கள் இருக்கும்போது டென்மார்க் பின்கள வீரர் Mæhle மைதானத்தின் ஒரு பக்கத்தினால் பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்று எதிரணியின் பகுதியில் இருந்து கோல் திசைக்கு உயர்த்தி செலுத்திய பந்தினை Dolberg கோலுக்குள் செலுத்தினார். 

இரண்டாம் பாதி ஆரம்பமாாகி நான்காவது நிமிடத்தில் Coufal மத்திய களத்தில் இருந்து வழங்கிய பந்தின் மூலம் செக் குடியரசு வீரர் Schick அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார். இந்த கோல் Schick தொடரில் பெறும் 5ஆவது கோலாக அமைந்தது. இதனால் அவர் யூரோ 2020 தொடரில் அதிக கோல்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் ரொனால்டோவுடன் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். 

இந்தப் போட்டியின் எஞ்சிய நிமிடங்களில் எந்தவித கோலும் பெறப்படாத நிலையில், ஆட்ட நிறைவில் டென்மார்க் அணி 2-1 என வெற்றி பெற்று, 1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரையிறுதிச் சுற்றுப் போட்டியொன்றுக்குத் தெரிவாகியுள்ளது. 

“கிராமிய மட்டத்தில் கால்பந்தை அபிவிருத்தி செய்வதே முதல் இலக்கு” – ஜஸ்வர் உமர்

முழு நேரம்: செக் குடியரசு 1 – 2 டென்மார்க்

கோல் பெற்றவர்கள் 

  • செக் குடியரசு – Schick 49′ 
  • டென்மார்க் – Delaney 5′, Dolberg 42′

உக்ரைன் எதிர் இங்கிலாந்து 

உக்ரைன் வீரர்கள் சுவீடனை 2-1 எனவும் இங்கிலாந்து வீரர்கள் பலம் மிக்க ஜேர்மனியை 2-0 எனவும் முன்னைய சுற்றில் வெற்றி கொண்டு காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தனர். 

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள Olimpico அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (04) நள்ளிரவு இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகி 4ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து ரஹீம் ஸ்டேர்லிங் வழங்கிய பந்தின்மூலம் அணித் தலைவர் Harry Kane இங்கிலாந்து அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.  

அதன் பின்னர், முதல் பாதியில் உக்ரைன் வீரர்கள் பல முறை எதிரணியின் பெனால்டி பெட்டி வரை பந்தை எடுத்துச் சென்றாலும் அவர்களால் போட்டியின் முதல் கோலைப் பெற முடியாமல் போனது. 

இரண்டாம் பாதி ஆரம்பமாகி ஒரு நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பிரீ கிக்கின்போது Shaw உள்ளனுப்பிய பந்தினை Maguire ஹெடர் செய்து போட்டியின் இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

அடுத்த 4 நிமிடங்களில் மீண்டும் Shaw வழங்கிய பந்தினை Harry Kane ஹெடர் செய்து தனது இரண்டாவது கோலையும் பெற்றார். 

ஜேர்மனியை வெளியேற்றிய இங்கிலாந்து; இறுதி நிமிடத்தில் வெற்றி பெற்ற உக்ரைன்

மீண்டும் 63ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் வாய்ப்பின்போது உள்வந்த பந்தை Henderson ஹேடர் செய்ய இங்கிலாந்து அணி 4 கோல்களினால் முன்னிலை பெற்றது. இது Henderson இங்கிலாந்து அணிக்காக பெறும் முதல் கோலாகப் பதிவானது. 

அதன் பின்னர் போட்டியில் எந்த விதமான கோல்களும் பெறப்படாத நிலையில் 4-0 என இங்கிலாந்து அணி இலகு வெற்றியைப் பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறை முன்னணி தொடரொன்றின் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளது. இங்கிலாந்து அணி 2018 பிபா உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிக்கு தெரிவாகி குரோசிய அணியிடம் தோல்வியடைந்திருந்தமை நினைவு கூறத்தக்கது. 

எனவே, லண்டன் விம்ப்லி அரங்கில் எதிர்வரும் 8ஆம் திகதி (இலங்கை நேரம்) இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் டென்மார்க்கை சந்திக்கவுள்ளனர். 

முழு நேரம்: உக்ரைன் 0 – 4 இங்கிலாந்து

கோல் பெற்றவர்கள்    

  • இங்கிலாந்து – Harry Kane 4’&50′, Maguire 46′, Henderson 63′

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<