ரொனால்டோவுக்கு இரட்டை கோல்; ஜெர்மனியை வீழ்த்திய பிரான்ஸ்

269
Hungary vs Portugal & France vs Germany

யூரோ 2020 கால்பந்து தொடரில் பலம் கொண்ட அணிகள் உள்ள குழு F இற்காக செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் போர்த்துகல் மற்றும் பிரான்ஸ் அணிகள் வெற்றிகளைப் பெற்றன. 

குறித்த தினம் இடம்பெற்ற இரண்டு போட்டிகளினதும் விபரம் கீழே… 

ஹங்கேரி எதிர் போர்த்துகல் 

ஹங்கேரி தலைநகர் படபெஸ்டில் அமைந்துள்ள பஸ்காஸ் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் பலம் மிக்க முன்களத்தைக் கொண்ட யூரோ நடப்புச் சம்பியன் போர்த்துகல் அணிக்கு எதிராக தடுப்பாட்டம் ஒன்றையே ஹங்கேரி வீரர்கள் மேற்கொண்டு வந்தனர். 

>> ஸ்பெயினை சமன் செய்த சுவீடன்; ஸ்லோவோக்கியா, செக் குடியரசுக்கு முதல் வெற்றி

இதன் பயனாக போட்டியின் 80ஆவது நிமிடம் வரை எந்தவித கோலும் பெறப்படவில்லை. எனினும், எஞ்சிய சில நிமிடங்களில் போர்த்துகல் வீரர்கள் எதிரணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.  

84ஆவது நிமிடத்தில் ரப்பேல் ஜெர்ரிரொ போர்த்துகல் அணிக்கான முதல்  கோலைப் பெற்றுக் கொடுக்க, அடுத்த 3 நிமிடங்களில் அவ்வணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை நட்சத்திர வீரரும், போர்த்துகல் அணியின் தலைவருமான ரொனால்டோ கோலாக்கினார். 

தொடர்ந்து போட்டியின் உபாதையீடு நேரத்தில் எதிரணியின் பெனால்டி பெட்டியில் வைத்து போர்த்துகல் வீரர்கள் மிக வேகமாக மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களின் பின்னர், ரொனால்டோ கோல் காப்பாளரையும் தாண்டி பந்தை எடுத்து வந்து தனது இரண்டாவது கோலைப் பெற்றார்.  

எனவே, இறுதி 10 நிமிடங்களில் அடுத்தடுத்து பெற்ற 3 கோல்களினால் யூரோ கிண்ண நடப்புச் சம்பியன் போர்த்துகல் அணி 3-0 என்ற வெற்றியுடன் இந்த தொடரை ஆரம்பித்தது. 

முழு நேரம்: ஹங்கேரி 0 – 3 போர்த்துகல் 

கோல் பெற்றவர்கள் 

  • போர்த்துகல் –  ரப்பேல் ஜெர்ரிரொ 84’, கிறிஸ்டியானோ ரொனால்டோ 87’(P) & 90+2’

பிரான்ஸ் எதிர் ஜெர்மனி 

ஜெர்மனியின் சொந்த மைதானமான முனிச் நகரில் அமைந்துள்ள அல்லியன்ஸ் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 20ஆவது நிமிடத்தில் பொக்பா வங்கிய பந்தை பிரான்ஸ் சக வீரர் ஹேர்னன்டெஸ் கோல் திசைக்கு செலுத்தும்போது ஜெர்மன் பின்கள வீரர் ஹம்மெல்ஸின் காலில் பட்டு பந்து கம்பங்களுக்குள் செல்ல, ஓன் கோல் முறையில் பிரான்ஸ் முதல் கோலைப் பெற்றது. 

அதன் பின்னர் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய நிலையில் எந்தவித கோல்களும் பெறப்படவில்லை. 

ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே சிறந்த முறையில் ஒரு கோலைப் பெற்றாலும், அது ஓப் சைட் என கூறப்பட்டு கோல் நிராகரிக்கப்பட்டது. 

மீண்டும் 85ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து பொக்பா வழங்கிய பந்தை கிலியன் எம்பாப்பே முன்னோக்கி எடுத்துச் சென்று, பென்சிமாவுக்கு வழங்க, அவர் அதனை கோலாக்கினார். இதன்போதும், எம்பாப்பே ஓப் சைட் இருந்ததாகக் கூறி கோல் நிராகரிக்கப்பட்டது. 

போட்டியின் இறுதி நேரங்களில் ஜெர்மனி வீரர்கள் தொடர்ச்சியாக எதிரணியின் கோல் திசையை ஆக்கிரமித்த போதும் அவர்களுக்கான முதல் கோல் பெறப்படவில்லை. 

எனவே, பலம் மிக்க இந்த இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி, யூரோ 2020 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது. 

முழு நேரம்: பிரான்ஸ் 1 – 0 ஜெர்மனி

கோல் பெற்றவர்கள்   

  • பிரான்ஸ் – மட்ஸ் ஹம்மெல்ஸ் 20’ (OG)

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<