டென்மார்க் இலகு வெற்றி; ஆஸ்திரியாவை போராடி வென்ற இத்தாலி காலிறுதியில்

UEFA EURO 2020

200
Wales vs Denmark & Italy vs Austria

யூரோ 2020 கால்பந்து தொடரின் நொக் அவுட் சுற்றான 16 அணிகள் மோதும் சுற்றின் முதல் போட்டியில் வேல்ஸ் அணியை இலகுவாக வீழ்த்தி டென்மார்க் அணியும், ஆஸ்திரியா அணியுடன் கடுமையாகப் போராடி மேலதிக நேரத்தில் பெற்ற கோல்களின் வெற்றியுடன் இத்தாலி அணியும் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

வேல்ஸ் எதிர் டென்மார்க் 

லீக் சுற்று முடிவில் A மற்றும் B குழுக்களில் இரண்டாம் இடங்களைப் பெற்ற இந்த இரண்டு அணிகளும் மோதிய 16 அணிகள் சுற்றுக்கான முதல் போட்டி டென்மார்க்கின் Johan Cruijff அரங்கில் சனிக்கிழமை (26) இடம்பெற்றது. 

>> யூரோ அடுத்த சுற்றுக்குள் நுழைந்த இங்கிலாந்து, குரோசியா அணிகள்

போட்டி ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களில் வேல்ஸ் அணித் தலைவர் கிரேத் பேல் கோலுக்கு உதைந்த பந்து இடது பக்க கம்பங்களை அண்மித்த வகையில் வெளியே செல்ல, அவ்வணிக்கான ஆரம்ப வாய்ப்பு வீணானர். 

ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து மிக வேகமாக பந்தை உதைந்து டென்மார்க் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்த 23 வயதுடைய Dolberg, இரண்டாம் பாதி ஆரம்பமாகி 3 நிமிடங்களுக்குள் தனது அடுத்த கோலையும் பதிவு செய்தார். 

சிறந்த முன்கள வீரர்களைக் கொண்ட வேல்ஸ் அணியின் முயற்சிகளை சிறப்பாகத் தடுத்து வந்த டென்மார்க் அணிக்கு போட்டியின் 88ஆவது நிமிடத்தில் Mæhle அடுத்த கோலையும் அடித்தார். 

அடுத்த நிமிடம் எதிரணி வீரரை முறையற்ற வித்தில் வீழ்த்தியமைக்காக வேல்ஸ் வீரர் ஹர்ரி வில்சன் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

பின்னர், 10 வீரர்களுடன் விளையாடிய வேல்ஸ் அணிக்கு எதிராக, போட்டி முடிவடையும் நேரத்தில் Braithwaite டென்மார்க் அணிக்கான நான்காவது கோலையும் பெற்றுக் கொடுத்தார். இந்த கோல் முதலில் ஓப் சைட் என தெரிவிக்கப்பட்டாலும், VAR மூலம் அது ஓப் சைட் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டது. 

Watch – 5 விநாடிகளில் சந்தையை மாற்றிய RONALDO  

எனவே, இரண்டாம் பாதியில் பெற்ற மேலதிக 3 கோல்களினால் போட்டி நிறைவில் 4-0 என வெற்றி பெற்ற டென்மார்க் அணி, 2020 யூரோ கிண்ணத் தொடரில் முதல் அணியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

முழு நேரம்: வேல்ஸ் 0 – 4 டென்மார்க் 

கோல் பெற்றவர்கள் 

  • டென்மார்க், – Dolberg 27’&48′, Mæhle 88′, Braithwaite 90’+4

இத்தாலி எதிர் ஆஸ்திரியா  

இங்கிலாந்தின் வெம்ப்லி அரங்கில் இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 இற்கு ஆரம்பமான இந்தப் போட்டியில், லீக் சுற்றில் குழு Aயில் சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த இத்தாலியும் குழு Cயில் இரண்டாம் இடம் பிடித்த ஆஸ்திரிய அணியும் மோதின. 

இம்முறை தொடரில் கிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்று என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இத்தாலிக்கு எதிராக முதல் பாதியில் சிறந்த முறையில் தடுப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட ஆஸ்திரிய வீரர்கள் எந்தவொரு கோலையும் விட்டுக் கொடுக்காமல் முதல் பாதியை கோல்கள் இன்றி முடித்தனர்.  

எனினும், இரண்டாம் பாதியில் தடுப்பாட்டத்தை மாத்திரமின்றி கோலுக்கான முயற்சிகளையும் ஆஸ்திரிய வீரர்கள் மேற்கொண்டனர்.  

அதன் பலனான, போட்டியின் 65 ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து உயர்த்தி வழங்கிய பந்தை ஆஸ்திரிய அணித் தலைவர் அலாபா ஹெடர் மூலம்  கோல் திசைக்கு அனுப்ப, அதனை கோலுக்கு அண்மையில் இருந்து Arnautović ஹெடர் செய்து கோலாக்கினார். எனினும், அது VAR முறையில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் Arnautović ஓப் சைட் இருந்ததாகக் கண்டறியப்பட்டு அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.  

>> உலக சம்பியன் பிரான்ஸ்யூரோ கிண்ணத்தை கைப்பற்றுமா?

அதன் பின்பும் இரண்டு அணிகளும் கோலுக்கான முயற்சிகளை எடுத்தாலும் போட்டியின் 90 நிமிட நிறைவில் எந்தவொரு கோலையும் இரு அணிகளாலும் பெற முடியாமல் போனது. எனவே, இரண்டு அணிகளுக்கும் மேலதிக நேரமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. 

மேலதிக நேரம் வழங்கப்பட்டு 5 நிமிடங்களில் Spinazzola வழங்கிய பந்தின்மூலம் Chiesa இத்தாலி அணிக்கான முதல் கோலைப் பெற்றார். அடுத்த 10 நிமிடங்களில் இரண்டாம் பாதியில் மாற்று வீரராக வந்த Pessina இத்தாலிக்கான அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்தார். இது இம்முறை யூரோ தொடரில் போடப்பட்ட 100வது கோலாக பதிவானது. 

தொடர்ந்து 114ஆவது நிமிடத்தில் ஆஸ்திரிய அணிக்கு கிடைத்த கோணர் வாய்பின்போது உள்வந்த பந்தை Kalajdzic பாய்ந்து ஹெடர் செய்து அந்த அணிக்கான முதல்  கோலைப் பெற்றார். இதனால் தொடர்ந்து 11 போட்டிகளில் எதிரணிக்கு கோல்களை விட்டுக் கொடுக்காத இத்தாலி அணியின் இந்த Clean Sheet வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது. 

எனவே, மேலதிக நேரத்தில் 3 கோல்கள் பெறப்பட்ட இந்தப் போட்டியின் நிறைவில் இத்தாலி அணி 2-1 என வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தெரிவாகியது. 

முழு நேரம்: இத்தாலி 2 – 1 ஆஸ்திரியா   

கோல் பெற்றவர்கள்   

  • இத்தாலி – Chiesa 95′, Pessina 105′ 
  • ஆஸ்திரியா – Kalajdzic 114′

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<