வெற்றிவாகை சூடிய மென்சஸ்டர் யுனைடட், அட்லடிகோ மட்ரிட் அணிகள்

340
UEFA Champions League

UEFA சம்பியன் கிண்ண கால்பந்து போட்டிகளின் இரண்டாம் கட்ட (Second Leg) போட்டிகளில் இறுதி நிமிடங்களில் பெறப்பட்ட கோல்களின் மூலம் மென்சஸ்டர் யுனைடட் அணி ஜுவன்டஸ் அணியுடனான போட்டியை வென்ற அதேவேளை, பார்சிலோனா மற்றும் பரிஸ் செய்ண்ட் ஜேமைண்ட் (PSG) அணிகளின் போட்டிகள் சமநிலையில் நிறைவுற்றன.

  • நெப்போலி எதிர் PSG

தொடரில் C குழுவில் போட்டியிடும் இவ்விரு அணிகளும் ஏற்கனவே PSG அணியின் அரங்கில் நடைபெற்ற போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலையில் நிறைவு செய்திருந்தன. அதில் PSG அணி போட்டியின் மேலதிக நேரத்திலேயே சமநிலை கோலைப் பெற்றது.

பிரீமியர் லீக் முதலிடத்திற்கு போராடும் சிட்டி, லிவர்பூல், செல்சி அணிகள்

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் எட்டாவது…

எனினும், நெப்போலி அணியின் அரங்கில் நடைபெற்ற இரண்டாம் கட்ட போட்டியை இரு அணிகளும் வெற்றி பெறும் நோக்கோடு ஆரம்பித்த போதும் போட்டி நிறைவில் 1-1 என்ற கோல் வித்தியாசத்தில் போட்டி சமநிலைடைந்தது.

திறமையான முன்கள வீரர்கள் மூலம் முதல் பாதியில் அதிகமான வாய்ப்புக்களை பெற்ற PSG அணியானது போட்டியின் 45ஆவது நிமிடத்தில் முதல் கோலை பெற்றது.

கில்லியன் எம்பாப்பே வேகமாக கொண்டு சென்ற பந்தை எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் வலது மூலையினூடாக வழங்கிய போது ஜீவான் பேர்னாட் மூலம் கோல் பெறப்பட்டது.  

போட்டியை சமப்படுத்த வேகமாக எதிரணிக்கு இரண்டாம் பாதியில் சவால் விடுத்த நெப்போலி வீரர்களின் பல வாய்ப்புக்களை PSG கோல் காப்பாளர் கியான்லிகி புப்பன் சிறப்பாக தடுத்தாடினார்.

>> எப்.ஏ கிண்ண காலிறுதியில் மோதப்போகும் அணிகள்

எனினும் 61 ஆம் நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பின் போது முன்கள வீரர் இன்ஸீக்னே மூலம் நெப்போலி அணியால் போட்டி சமப்படுத்தப்பட்டது.

இரு அணிகளும் தொடர்ந்து வாய்ப்புக்களை பெற்ற போதும் நிறைவில் போட்டி சமநிலையானது.

  • இன்டர்மிலான் எதிர் பார்சிலோனா

பார்சிலோனா அரங்கில் மோதிய இவ்விரு அணிகளுக்குமிடையிலான முதற்கட்ட போட்டியில் பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள இரண்டாம் கட்ட போட்டியில் மீண்டும் இன்டர்மிலான் அணியின் அரங்கில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடாத்தின.

முதற் பாதியில் இரு அணிகளும் தமது அணிகளுக்கான கோலை பெறுவதற்காக கடுமையாக முயற்சித்த போதும் சிறந்த பின்களத்தடுப்பு மற்றும் இரு அணிகளினதும் கோல் காப்பாளர்களின் திறமையினாலும் எவ்வித கோலும் பெறப்படவில்லை.

எனினும், இரண்டாம் பாதியில் மாற்று வீரராக களமிறங்கிய பார்சிலோனா அணியின் முன்கள வீரர் மல்கம் மூலம் போட்டியின் 83 ஆம் நிமிடத்தில் பார்சிலோனா அணி ஓரு கோலைப் பெற்றது.

>> வெற்றிப் பாதைக்கு திரும்பிய மன்செஸ்டர் யுனைடெட்

தனது சொந்த அரங்கில் நடைபெறும் போட்டியில் தோல்வியை சந்திக்க விரும்பாத இன்டர்மிலான் அணி வீரர்கள் மூலம் போட்டியானது 87 ஆம் நிமிடத்தில் சமப்படுத்தப்பட்டது. இதன்போது முன்கள வீரர் மயூரோ இக்கார்டீ கோலைப் பெற்றார்.

  • அட்லடிகோ மட்ரிட் எதிர் டோர்ட்மண்ட்

எதிரணியின் சொந்த அரங்கமான வெஸ்ட்பாலென்ஸ்டேனடியம் அரங்கில் டோர்ட்மண்ட் அணியை எதிர்கொண்ட அட்லடிகோ மட்ரிட் அணி கடந்த போட்டியில் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.

இவ்வாறான நிலைமையில் அட்லடிகோ மட்ரிட் அணியின் அரங்கில் நடைபெற்ற இந்த மோதலில் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் அட்லடிகோ மட்ரிட் அணி  ஆறுதல் வெற்றியை பெற்றுக் கொண்டது.

டோர்ட்மண்ட் வீரர்களின் ஆதிக்கமே போட்டியில் அதிகமாக தென்பட்ட போதும் இரு பாதியிலும் அட்லடிகோ அணி வீரர்களுக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி பெற்றுக்கொண்ட இரு கோல்களின் மூலம் அட்லடிகோ மட்ரிட் அணி போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்தது.

>> கால்பந்து புகைப்படங்களைப் பார்வையிட <<

அட்லடிகோ மட்ரிட் அணிக்காக போட்டியின் 30 ஆம் நிமிடத்தில் மத்திய கள வீரர் ஸாஹீல் நீகாஸ் மற்றும் 80 ஆம் நிமிடத்தில் முன்கள வீரர் அன்டோனியோ கிரீஸ்மன் மூலம் தலா ஓவ்வொரு கோல் பெறப்பட்டன.

A குழுவில் போட்டியிடும் டோர்ட்மண்ட் மற்றும் அட்லடிகோ மட்ரிட் ஆகிய இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 9 புள்ளிகளுடன் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • ஜுவன்டஸ் எதிர் மென்சஸ்டர் யுனைடட்

ஒல்ட் டரவுட் அரங்கில் நடைபெற்ற முதற்கட்ட போட்டியில் ஜுவன்டஸ் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சொந்த அரங்கில் எதிரணியிடம் முதற்கட்ட போட்டியில் தோல்வியுற்ற மென்சஸ்டர் யுனைடட் அணி வீரர்கள் இரண்டாம் கட்ட போட்டியில் ஜுவன்டஸ் அணியை இறுதி நிமிடத்தில் தோல்வியுறச் செய்தனர்.

தனது சொந்த அரங்கில் நடைபெறும் போட்டியில் ஜுவன்டஸ் அணிக்கு முதற்பாதியில் கிடைக்கப்பெற்ற அதிகமான வாய்ப்புக்களை எதிரணியின் கோல் காப்பாளர் சிறந்த முறையில் தடுத்தாடினார்.

அதேபோல், மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு வாய்ப்புக்கள் அரிதாகவே கிடைத்த போதும் அவற்றை சிறந்த முறையில் நிறைவு செய்ய அவ்வணி வீரர்கள் தவறினர்.

எனினும் போட்டியின் 65 ஆம் நிமிடத்தில் பின்களத்திலிருந்து எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் வழங்கப்பட்ட பந்தை வொலி முறையில் உதைந்து தனது அணியை கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்னிலைப்படுத்தினார்.

எனினும் 86ஆம் நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு அருகில் கிடைக்கப்பெற்ற ப்ரி கீக் வாய்ப்பின் போது மாற்று வீரராக களமிறங்கிய ஜீவான் மாடா மூலம் போட்டி சமநிலைப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து 89ஆம் நிமிடத்தில் வலது மூலையில் கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பின் போது எதிரணி வீரர் அலெஸ் ஸான்ட்ரோ மூலம் மென்சஸ்டர் யுனைடட் அணி இரண்டாவது கோலையும் பெற்றது.

இறுதி நிமிடங்களில் பெறப்பட்ட கோல்களின் மூலம் மென்சஸ்டர் யுனைடட் அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<