சகலதுறையிலும் அசத்திய லங்கன் கழகத்துக்கு சம்பியன் பட்டம்

235
SSC vs Lankans CC

இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை இனங்காணும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட முதல்தர கழங்களுக்கு இடையிலான 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்து பலம்வாய்ந்த ஷம்மு அஷான் தலைமையிலான SSC கழகத்தை 59 ஓட்டங்களால் வெற்றிகொண்ட லங்கன் கிரிக்கெட் கழகம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இதன்படி, 38 வருட காலப்பகுதியில் லங்கன் கிரிக்கெட் கழகம் வெற்றி கொண்ட ஓரிரு சம்பியன் பட்டங்களில் ஒன்றாக இது இடம்பிடித்தது. இறுதியாக அந்த அணி முதல்தர கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் Tier B சம்பியன் பட்டத்தை வென்று Tier A பிரிவுக்கு தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>> இலங்கை T20 அணியின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ்

முன்னதாக, கடந்த 26ஆம் திகதி பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான கோல்ட்ஸ் கழகத்தை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தி முதல்தர கழங்களுக்கு இடையிலான 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு லங்கன் கிரிக்கெட் கழகம் தெரிவாகியிருந்தது. 

SSC மைதானத்தில் நேற்று (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லங்கன் கிரிக்கெட் கழக அணி  49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை எடுத்தது

துடுப்பாட்டத்தில் கசுன் அபேரட்ன 51 ஓட்டங்களையும், கெவின் பெரேரா 40 ஓட்டங்களையும், தமித் சில்வா 30 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக எடுத்தனர்.   

SSC கழகத்தின் பந்துவீச்சில் அணித் தலைவர் ஷம்மு ஷான் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், திலும் திலக்கரட்ன 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பின்னர், 224 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய SSC கழகம், 44.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

>> Video – Dimuth, Dasun இன் கேப்டன்சியில் சாதிக்குமா இலங்கை அணி? | Sports RoundUp – Epi 150

இதன்படி, 59 ஓட்டங்களால் வெற்றியீட்டிய லங்கன் கிரிக்கெட் கழகம் முதல்தர கழகங்களுக்கிடையிலான 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடரின் சம்பியனாகத் தெரிவாகியது.

துடுப்பாட்டத்தில் SSC அணித் தலைவர் ஷம்மு ஷான் 50 ஓட்டங்களையும், நிப்புன் தனன்ஜய 38 ஓட்டங்களையும், கிரிஷான் சஞ்சுள 31 ஓட்டங்களையும் எடுத்தனர்.

லங்கன் கிரிக்கெட் கழக பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சவன் கங்காணம்கே 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், யசிரு ரொட்றிகோ 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சந்துன் சத்சர 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை லங்கன் கிரிக்கெட் கழகத்தின் கசுன் பேரட்ன தட்டிச் சென்றதுடன், தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதை NCC கழகத்தின் லஹிரு உதாரவும், தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் விருதை BRC கழகத்தின் துவிந்து திலக்கரட்னவும் பெற்றுக் கொண்டனர்

>> இலங்கை கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் இயக்குனராக டொம் மூடி

இதேநேரம், தொடர்நாயகன் விருதை கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் ஷான் பிரியஞ்சன் பெற்றுக் கொண்டதுடன், அவருக்கு ஒரு மில்லியன் ரூபா பணப்பரிசுடன் மோட்டார் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது

இதனிடையே சம்பியன் பட்டம் வென்ற லங்கன் கிரிக்கெட் கழகத்துக்கு 5 மில்லியன் ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட SSC கழகத்துக்கு 3 மில்லியன் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் 223/10 (49.2)கசுன் அபேரட்ன 51, கெவின் பெரேரா 40, தமித சில்வா 30 (ஷம்மு ஷான் 31/3, திலும் திலகரட்ன 35/3, கலன பெரேரா 50/2)

SSC 164/10 (49.2)ஷம்மு ஷான் 50, நிபுன் தனன்ஜய 38, க்ரிஷான் சன்ஜுல 31 (துனித் வெல்லாலகே 29/3, சவன் கங்காணம்கே 9/2, யசிரு ரொட்றிகோ 23/2, சந்துன் சத்சர 29/2) 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<