ஈரானின் ஆர்டபில் நகரில் நடைபெற ஏற்பாடாகியுள்ள 23 வயதிற்கு உட்பட்ட ஆடவருக்கான இரண்டாவது ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் D குழுவில் இலங்கை அணி உள்ளடக்கப்பட்டுள்ளது.
மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை இத்தொடர் நடைபெறவுள்ளதுடன், குழு D இல் இலங்கை அணியைத் தவிர ஜப்பான் மற்றும் தாய்லாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடரின் போது ஜப்பான் மற்றும் தாய்லாந்து அணிகள் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் இடங்களைப் பெற்றிருந்தன. இலங்கை அணியானது இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் முதல் தடவை இதுவாகும். அணிகளை குழுக்களாகப் பிரிக்கும் நிகழ்வு தாய்லாந்தில் உள்ள ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வின் போது தனது கருத்தை வெளியிட்ட தாய்லாந்து கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் சொம்போர்ன் சாய்பங்கியாங், “இவ்வருடம் ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் எட்டு முக்கிய சுற்றுப்போட்டிகள் இடம்பெற ஏற்பாடாகியுள்ள நிலையில் ஆசிய கண்டத்திலும் முக்கியமாக தாய்லாந்திலும் கரப்பந்தாட்டம் வளர்ச்சியடைவதை காணக்கூடியதாகவுள்ளது. ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைமையகம் தாய்லாந்தில் அமைந்துள்ளதையிட்டு தாய்லாந்து கரப்பந்தாட்ட சங்கம் என்ற வகையில் நாம் பெருமையடைகின்றோம். எதிர்வரும் காலங்களிலும் ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு எமது முழு ஆதரவையும் உதவிகளையும் வழங்குவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.
2015ஆம் ஆண்டிற்கான தொடரின் சம்பியன்ஷிப் பட்டத்தை ஈரான் வென்றதுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே தென்கொரியா மற்றும் சீன தாய்பேய் அணிகள் பெற்றுக் கொண்டன.
இம்முறை தொடரில் 12 அணிகள் பங்குபெறவுள்ளதுடன் அவ்வணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஈரான், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகள் குழு A இல் உள்ளடக்கப்பட்ட போதிலும், பிலிப்பைன்ஸ் அணி தொடரிலிருந்து விலகிக் கொண்டுள்ளது. நான்கு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் இரண்டாவது சுற்றிற்கு தெரிவு செய்யப்படவுள்ளன. இதன்படி இரண்டாவது சுற்றிற்கு எட்டு அணிகள் தகுதிபெறவுள்ளதுடன், இலங்கை அணியானது இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியையேனும் வெற்றிபெறுமேயானால் இரண்டாவது சுற்றிற்கு தகுதிபெறும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும்.
இத்தொடரில் முதல் இரண்டு இடங்களை சுவீகரிக்கும் அணிகள் 2017ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெறவுள்ள 23 வயதிற்கு உட்பட்ட உலகக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரிற்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
குழுக்கள்
குழு A – ஈரான், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான்
குழு B – சீன தாய்பேய், கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான்
குழு C – சீனா, அவுஸ்திரேலியா, மலேஷியா
குழு D – ஜப்பான், தாய்லாந்து, இலங்கை