மனுதி, லிமன்சா அதிரடியில் இலங்கை மகளிருக்கு முதல் வெற்றி

Women’s U19 Asia Cup 2024

86

அங்குரார்ப்பண 19 வயதின்கீழ் மகளிருக்கான ஆசியக் கிண்ண T20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை இளையோர் மகளிர் அணி 94 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.  

கோலாலம்பூரில் உள்ள பயூமாஸ் கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் நேற்று (15) நடைபெற்ற இப்போட்டியில், போட்டியை நடாத்தும் மலேஷிய இளையோர் மகளிர் அணி, இலங்கை அணியிடம் தோல்வியடைந்தது. 

இலங்கை மகளிர் அணியின் வெற்றியில் அணித்தலைவி மனுதி நாணயக்கார மற்றும் லிமன்சா திலகரட்ன ஆகிய இருவரது சத இணைப்பாட்டம் முக்கிய பங்காற்றின. 

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணியினர், 4 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்றனர் 

இலங்கை சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவி மனுதி நாணயக்கார அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும், லிமன்சா திலகரட்ன ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் குவித்தனர். இவர்கள் இருவரும் 5 விக்கெட்டுக்காக 109 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

மலேஷியாவின் பந்துவீச்சில் நூர் டானியா சியுஹாடா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 154 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மலேஷிய வீராங்கனைகள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர். 

Nஷிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக நூர் ஐன் ரொஸ்லான் 12 ஓட்டங்களையும், சுவாபிகா மணிவண்ணன் 11 ஓட்டங்களையும், நுரிமான் ஹாலித் 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.   

இலங்கை பந்துவீச்சில் ஹிருனி ஹன்சிகா 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் 

போட்டியின் ஆட்டநாயகியாக இலங்கை இளையோர் மகளிர் அணித்தலைவி மனுதி நாணயக்கார தெரிவானார் 

இலங்கை இளையோர் மகளிர் அணி, தமது 2ஆவது போட்டியில் பங்களாதேஷை இன்று (16) எதிர்கொள்கின்றது. 

போட்டியின் சுருக்கம் 

இலங்கை இளையோர் மகளிர் கிரிக்கெட் அணி – 153/4 (20.0) மனுதி நாணயக்கார 74, லிமன்சா திலகரட்ன 41, நூர் டானியா சியுஹடா 2/21 

 

மலேஷிய இளையோர் மகளிர் கிரிக்கெட் அணி – 59/6 (20.0) நூர் ஐன் ரொஸ்லான் 12, சுவாபிகா மணிவண்ணன் 11, நுரிமான் ஹாலித் 11, ஹிருனி ஹன்சிகா 2/02 

 

முடிவு – இலங்கை இளையோர் மகளிர் கிரிக்கெட் அணி 94 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<