மலேஷியாவில் நடைபெற்று வருகின்ற 19 வயதின்கீழ் மகளிருக்கான ஆசியக் கிண்ண T20 தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி, 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
முதல் போட்டியில் இலங்கை இளையோர் மகளிர் அணி 94 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிது. எனினும் பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் குறித்த பிரிவில் இருந்து அரை இறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இலங்கை இளையோர் மகளிர் அணிக்கு கிடைத்துள்ளது.
கோலாலம்பூரில் உள்ள பயூமாஸ் கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக 17 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி, 17 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது.
அந்த அணியின் துடுப்பாட்டத்தில் சாடியா அக்தர் 31 ஓட்டங்களையும், ஆபிகா ஆஷிமா ஈரா 25 ஓட்டங்களையும், சுமய்யா அக்தர் சுபோர்னா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
>>மனுதி, லிமன்சா அதிரடியில் இலங்கை மகளிருக்கு முதல் வெற்றி
பந்துவீச்சில் ரஷ்மிக்கா செவ்வந்தி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ப்ரமுதி மெத்சரா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அசெனி தலகுனே 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
123 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் மகளிர் அணி, 17 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சஞ்சனா காவிந்தி 21 ஓட்டங்களையும், ரஷ்மிக்கா செவ்வந்தி 20 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
பங்களாதேஷ மகளிர் அணியின் பந்துவீச்சில் சுமய்யா அக்தர் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், பர்ஜானா ஈஸ்மின் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், நிஷிட்டா அக்தர் நிஷி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகி விருதை நிஷிட்டா அக்தர் நிஷி தட்டிச் சென்றார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<