சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு எதிரான 19 வயதின் கீழ் பாடசாலை அணிகளுக்கு இடையிலான மரபு ரீதியான கிரிக்கெட் போட்டியில் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் வெற்றியை பதிவுசெய்தது.
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இரண்டு நாட்கள் கொண்ட இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று ஸ்கந்தவரோதயா கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியது.
முதல் ஒருநாள் போட்டிக்கான திட்டம் என்ன? கூறும் தசுன் ஷானக!
சென். ஜோன்ஸ் கல்லூரியின் அபார பந்துவீச்சுக்கு தடுமாற்றம் காண்பித்த ஸ்கந்தவரோதயா அணி முதல் இன்னிங்ஸில் 52 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆரம்பம் முதல் இறுதிவரை எந்த துடுப்பாட்ட ஒரு வீரரும் அணிக்கு தேவையான ஓட்டங்களை பெற்றுக்கொடுக்காத நிலையில், அண்டன் அபிசேக் மற்றும் கிருபானந்தன் கஜகர்ணன் ஆகியோர் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை சாய்த்து அபாரம் காண்பித்தனர்.
தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் ஆடிய சென். ஜோன்ஸ் அணி சச்சின் கணபதியின் சராசரியான ஆரம்பம் (35 ஓட்டங்கள்), எபனீஷர் ஜெசிலின் நேர்த்தியான அரைச்சதம் (61 ஓட்டங்கள்) மற்றும் அண்டன் அபிசேக்கின் மத்தியவரிசை பிரகாசிப்பு (47 ஓட்டங்கள்) என்பவற்றின் ஊடாக 59.2 ஓவர்கள் நிறைவில் 226 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சை பொருத்தவரை சிறப்பாக பந்துவீசிய ஸ்கந்தவரோதய அணியின் நிதுசன் 5 விக்கெட்டுகளையும், கஜனன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து 174 ஓட்டங்கள் பின்னடைவில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருந்த ஸ்கந்தவரோதய கல்லூரி அண்டன் அபிசேக்கின் வேகத்துக்கு மீண்டும் ஒருமுறை தடுமாறிய நிலையில், 84 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றியை தமதாக்கிக்கொண்டது.
அண்டன் அபிசேக் அபாரமாக பந்துவீசி 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், மொத்தமாக இந்தப்போட்டியில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அண்டன் அபிசேக்கின் அபார பந்துவீச்சை தாண்டியும் ஸ்கந்தவரோதய அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடிய எஸ். துவிசனன் 92 பந்துகளில் 56 ஓட்டங்களை அதிகபட்சமாக குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
- ஸ்கந்தவரோதயா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 52/10 (28.5), எல்.கஜனன் 12, அண்டன் அபிசேக் 22/4, கிருபாணந்தன் கஜகர்ணன் 07/3
- சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 226/10 (59.2), எபனீஷர் ஜெசில் 61, அண்டன் அபிசேன் 47, சச்சின் கணபதி 35, கே.நிதுசன் 49/5, எல்.கஜனன் 64/3
- ஸ்கந்தவரோதயா கல்லூரி (2வது இன்னிங்ஸ்) – 84/10 (36), எஸ். துவிசனன் 56, அண்டன் அபிசேன் 40/6, அருள்நேசன் கவிஷன் 11/2
- முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<