புனித தோமையார் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

287
Kaveesh

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியுடனான போட்டியில், புனித தோமையார் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டது.

அதேவேளை, இன்று ஆரம்பமான போட்டிகளில் தர்ஸ்டன் கல்லூரி மற்றும் தர்மாசோக கல்லூரி அணிகள் வலுவான நிலையில் உள்ளன.

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி எதிர் புனித தோமையார் கல்லூரி

‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘C’ இற்கான போட்டியொன்றில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியும், புனித தோமையார் கல்லூரியும் மோதிக் கொண்டன. நேற்றைய தினம் நாணய சுழற்சியில் வென்ற டி.எஸ். சேனநாயக்க கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய புனித தோமையார் கல்லூரி 78.2 ஓவர்களில் 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மொஹமட் இஷாக் அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் குவித்தார். பந்து வீச்சில் விஹான் குணசேகர 50 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, பவித் ரத்நாயக்க (4/33) மற்றும் டெலோன் பீரிஸின் (4/42) பந்து வீச்சை எதிர்கொள்ள இயலாத நிலையில் 116 ஓட்டங்களுக்கே சுருண்டது. அவ்வணி சார்பாக தசுன் பெரேரா ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

67 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித தோமையார் கல்லூரி 34 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் மன்தில விஜேரத்ன 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், பந்து வீச்சில் முதித லக்ஷான் 4 விக்கெட்டுக்களை பதம்பார்த்தார்.

155 என்ற இலக்கை நோக்கி ஆடுகளம் பிரவேசித்த டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 59 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமையார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 183 (78.2) – மொஹமட் இஷாக் 39, விஹான் குணசேகர 5/50, முதித லக்ஷான் 2/47

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 116 (45) – தசுன் பெரேரா 45*, பவித் ரத்நாயக்க 4/33, டெலோன் பீரிஸ் 4/42

புனித தோமையார் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 87/6d (34) – மன்தில விஜேரத்ன 42, தின்னுர குணவர்தன 31*, முதித லக்ஷான் 4/29, விஹான் குணசேகர 2/39

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 59/3 (27) – தசுன் பெரேரா 21*, டெலோன் பீரிஸ் 2/34

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித தோமையார் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.

ஜனாதிபதிக் கல்லூரி எதிரி தர்ஸ்டன் கல்லூரி

இன்று ஆரம்பமான குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் ஜனாதிபதிக் கல்லூரியை எதிர்த்து தர்ஸ்டன் கல்லூரி போட்டியிட்டது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தர்ஸ்டன் கல்லூரி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஜனாதிபதிக் கல்லூரி 45.1 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக ஹஷான் பிரியதர்ஷன அதிகபட்சமாக 34 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் சரண நாணயக்கார, சந்தரு டயஸ் மற்றும் துஷான் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

தொடர்ந்து களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி, இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 66 ஓட்டங்களை பெற்றிருந்தது. றிபாஸ் மௌரூஸ் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதிக் கல்லூரி – 119 (45.1) – ஹஷான் பிரியதர்ஷன 34, சரண நாணயக்கார 2/17, சந்தரு டயஸ் 2/20, துஷான் மதுஷங்க 2/33

தர்ஸ்டன் கல்லூரி – 66/3 (22) – றிபாஸ் மௌரூஸ் 2/22

தர்மாசோக கல்லூரி எதிர் ராஹுல கல்லூரி

இன்று ஆரம்பமான மற்றுமொரு போட்டியில் தர்மாசோக கல்லூரி மற்றும் ராஹுல கல்லூரி அணிகள் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற தர்மாசோக கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்காத போதிலும், தனி ஒருவராக அபாரமான ஆட்டத்தை வெளிக்காட்டிய கவீஷ் குமார 107 ஓட்டங்களை குவித்தார். இதன்படி தர்மாசோக கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சிறப்பாக பந்து வீசிய பசன் சமரதுங்க 5 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய ராஹுல கல்லூரி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. லக்கிந்து சமோத் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தர்மாசோக கல்லூரி – 215 (62.3) – கவீஷ் குமார 107, பசன் சமரதுங்க 5/52

ராஹுல கல்லூரி – 83/4 (39) – லக்கிந்து சமோத் 34*