19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமான போட்டிகளின் முதல் நாள் நிறைவில் புனித அலோசியஸ் கல்லூரி, திரித்துவக் கல்லூரி, ரிச்மண்ட் கல்லூரி மற்றும் தர்மாசோக கல்லூரி அணிகள் வலுவான நிலையிலுள்ளன.

புனித தோமஸ் கல்லூரி எதிர் புனித அலோசியஸ் கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘C’ இற்கான போட்டியொன்றில் புனித தோமஸ் கல்லூரியும் புனித அலோசியஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித தோமஸ் கல்லூரி மந்தமான கதியிலே ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக பந்து வீசிய ஹரீன் வீரசிங்க 5 விக்கெட்டுகள் வீழ்த்த, புனித தோமஸ் கல்லூரி அணியினரால் 78.1 ஓவர்களில் 162 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. துடுப்பாட்டத்தில் புனித தோமஸ் கல்லூரி சார்பாக குணவர்தன மாத்திரம் அதிகபட்சமாக 45 ஓட்டங்களைப் பறெ்றார்.

அடுத்து களமிறங்கிய புனித அலோசியஸ் கல்லூரி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 50 ஓட்டங்களை பெற்றிருந்தது. ரவிந்து சஞ்சன ஆட்டமிழக்காது 26 ஓட்டங்கள் பெற்றிருந்தார். நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமஸ் கல்லூரி – 162 (78.1) – குணவர்தன 45, ஹரீன் வீரசிங்க 43/5, ரவிந்து சஞ்சன 26/3

புனித அலோசியஸ் கல்லூரி – 50/2 (20) – ரவிந்து சஞ்சன 26*


திரித்துவக் கல்லூரி எதிர் புனித மேரிஸ் கல்லூரி

இத்தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் திரித்துவக் கல்லூரியும் புனித மேரிஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற திரித்துவக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அணித்தலைவர் ஷனோகீத் சண்முகநாதன் ஆட்டமிழக்காது 151 ஓட்டங்கள் விளாச, திரித்துவக் கல்லூரி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 308 பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய களன டி சொய்சா ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும் ஹசித போயகொட 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த புனித மேரிஸ் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 63 ஓட்டங்களை பெற்றிருந்தது.நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி – 308/2d (64.1) – ஷனோகீத் சண்முகநாதன் 151*, களன டி சொய்சா 67*, ஹசித போயகொட 46

புனித மேரிஸ் கல்லூரி – 63/4 (23) – லஹிரு குலசிறி 16, சந்தரு சிரியஷாந்த 15*, திசரு டில்ஷான் 10/2


நாலந்த கல்லூரி எதிர் ரிச்மண்ட் கல்லூரி

குழு ‘A’ இற்கான மற்றுமொரு போட்டியில் நாலந்த கல்லூரியை எதிர்த்து ரிச்மண்ட் கல்லூரி போட்டியிட்டது. நாணய சுழற்சியில் வென்ற ரிச்மண்ட் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய நாலந்த கல்லூரி 54.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கசுன் சந்தருவன் அதிகபட்சமாக 45 ஓட்டங்கள் குவித்தார். பந்துவீச்சில் கவிஷ்க விஜேசிறி மற்றும் தவீஷ அபிஷேக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீதம் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களை பெற்றிருந்தது. சமிகார ஹேவகே 35 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். சுரங்க விஜேவர்தன 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி – 190 (54.3) – கசுன் சந்தருவன் 45, டில்ஹார பொல்கம்பொல 27, கவிஷ்க விஜேசிறி 18/2, தவீஷ அபிஷேக் 33/2

ரிச்மண்ட் கல்லூரி – 112/5 (38) – சமிகார ஹேவகே 35, சுரங்க விஜேவர்தன 21/2


மொரட்டுவ மகா வித்தியாலயம் எதிர் தர்மாசோக கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘C’ இற்கான மற்றுமொரு போட்டியில் மொரட்டுவ மகா வித்தியாலமும் தர்மாசோக கல்லூரியும் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற தர்மாசோக கல்லூரி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

மதுஷ்க பெர்னாண்டோ அரைச்சதம் கடக்க, மொரட்டுவ மகா வித்தியாலயம் 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கவிந்து நதீஷான் 3 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து களமிறங்கிய தர்மாசோக கல்லூரி ஆட்டநேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை பெற்றிருந்தது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய ரவிந்து கிரிஷாந்த ஆட்டமிழக்காது 117 ஓட்டங்கள் பெற்று களத்திலிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

மொரட்டுவ மகா வித்தியாலயம் – 123 (33.3) – மதுஷ்க பெர்னாண்டோ 55, கவிந்து நதீஷான் 14/3

தர்மாசோக கல்லூரி – 219/6 (61) – ரவிந்து கிரிஷாந்த 117*, தினுக டில்ஷான் 34