இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – II பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற போட்டியில், யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
அம்பலாங்கொடையில் நடைபெற்ற இந்தப்போட்டியில் ஸ்ரீ தேவானந்த கல்லூரியை எதிர்த்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
பாகிஸ்தானின் தோல்வியை பொறுப்பேற்ற சதாப் கான்
சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஆரம்பம் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும், மத்திய ஓவர்களில் விக்கெட்டுகள் விட்டுக்கொடுக்கப்பட்டமை மற்றும் குறைந்த ஓட்டவேகத்தின் காரணமாக அவ்வணி 46 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சென்.ஜோன்ஸ் அணிசார்பாக அதிபட்சமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சச்சின் கணபதி 34 ஓட்டங்களையும், கமலபாலன் சபேசன் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், ஸ்ரீ தேவானந்த கல்லூரி சார்பாக சிதும் விதானகே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென். ஜோன்ஸ் அணி துடுப்பாட்டத்தில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தபோதும், பந்துவீச்சில் அற்புதமான முறையில் செயற்பட்டிருந்தது. ஆரம்ப பந்துவீச்சாளர்களான அணித் தலைவர் அண்டன் அபிஷேக், யோகதாஸ் விதுசன் மற்றும் கிருபானந்தன் கஜகர்ணன் ஆகியோர் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். அதுமாத்திரமின்றி ஜெயச்சந்திரன் அஸ்நாத் மற்றும் மோஹனராசா கமல்ராஜ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தங்களுடைய பங்களிப்பை வழங்கினர்.
இந்தநிலையில் சென்.ஜோன்ஸ் அணியின் சிறந்த பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஸ்ரீ தேவானந்த கல்லூரி அணி 30.1 ஓவர்கள் நிறைவில் 99 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஸ்ரீ தேவானந்த கல்லூரி சார்பாக சிதும் விதானகே 28 ஓட்டங்களையும், காஞ்சன டி லிவேரா 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் அண்டன் அபிஷேக், யோகதாஸ் விதுசன் மற்றும் கிருபானந்தன் கஜகர்ணன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதேவேளை, யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி கடந்த 8ம் திகதி நடைபெற்றிருந்த முதல் போட்டியில் களுத்துறை வித்தியாலயத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய களுத்துறை வித்தியாலய அணி, 49.2 ஓவர்கள் நிறைவில் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. களுத்துறை அணிசார்பாக சமோத் தனன்ஜய 37 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் யோகதாஸ் விதுசன் மற்றும் ஜெயச்சந்திரன் அஸ்நாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரி சார்பாக அண்டர்சன் சச்சின் கணபதி 50 ஓட்டங்களையும், அண்டன் அபிசேக் 58 ஓட்டங்களையும் பெற 6 விக்கெட்டுகள் கைவசமிருக்க 38.2 ஓவர்கள் நிறைவில் சென்.ஜோன்ஸ் அணி வெற்றியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி – 144/10 (46), சச்சின் கணபதி 34, கமலபாலன் சபேசன் 27, சிதும் விதானகே 25/4
ஸ்ரீ தேவானந்த கல்லூரி அம்பலாங்கொடை – 99/10 (31.1), சிதும் விதானகே 28, காஞ்சன டி லிவேரா 25, அண்டன் அபிசேக் 24/3, யோகதாஸ் விதுசன் 25/3, கிருபானந்தன் கஜகர்ணன் 26/3
முடிவு – யாழ். சென்.ஜோன்ஸ் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<