பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் டிவிசன் 3 பிரிவு A கிரிக்கெட் தொடரில் ஆனந்தன் கஜனின் அபார சதத்துடன் யாழ். மத்தியக் கல்லூரி அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
பெந்தோட்டை காமினி தேசிய கல்லூரிக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யாழ். மத்தியக் கல்லூரி அணி அபார வெற்றிபெற்றது.
>> விறுவிறுப்பான மோதலில் வெற்றிபெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி!
காலிறுதிக்கு முந்தைய சுற்றாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்தியக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து களமிறங்கியது.
அவ்வணிக்கு ஜெகதீஷ்வரன் விதுசன், மதீஷ்வரன் சன்சஜன் மற்றும் போல் பரமதயாளன் ஆகியோர் ஏமாற்றம் கொடுத்து குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
எனினும் மறுபக்கம் சதாகரன் சிமில்டன் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து நம்பிக்கையளிக்க, நிசாந்தன் அஜய் சிறந்த ஓட்ட வேகத்துடன் 44 பந்துகளுக்கு 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
>> Photos – Jaffna Central College vs St. John’s College l 116th Battle of the North – Day 3
இதற்கு மத்தியில் அணித்தலைவர் ஆனந்தன் கஜன் அற்புதமான இன்னிங்ஸ் ஒன்றை ஆட தொடங்கினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிக்கப்பட்டாலும் வேகமாக ஓட்டங்களை குவித்த இவர் காமினி தேசிய கல்லூரி அணியின் பந்துவீச்சாளர்களை தன்னுடைய துடுப்பாட்ட மட்டையின் மூலம் மிரட்டியிருந்தார்.
அதன்படி 112 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 12 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 153 ஓட்டங்களை கஜன் பெற்றுக்கொடுக்க, பின்வரிசையில் சகாதேவன் சயந்தன் 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். எனவே, 9 விக்கெட்டுகளை இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மத்தியக் கல்லூரி ஆட்டத்தை இடைநிறுத்தியது. பந்துவீச்சில் மலக பபோதன 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மத்தியக் கல்லூரியின் மிகப்பெரிய முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கைக்கு பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய காமினி தேசிய கல்லூரி விக்னேஷ்வரன் பருதியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் தடுமாற தொடங்கியது.
அந்த அணியின் சலக சமதி அதிகபட்சமாக 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேற தொடங்கினர். அபாரமாக பந்துவீசிய பருதி 37 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும், ரஞ்சித்குமார் நியூட்டன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற காமினி தேசிய கல்லூரி 85 ஓட்டங்களுக்கு தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து 273 ஓட்டங்கள் பின்னடைவில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை பலோவ் ஒன் முறையயில் காமினி தேசிய கல்லூரி அணி தொடர்ந்தது. இந்த இன்னிங்ஸிலும் ஆரம்பத்தில் தடுமாறிய காமினி தேசிய கல்லூரி அணிக்காக மலக பபோதன மற்றும் கனிந்து தினெத் ஆகியோர் ஓரளவு போராட்டத்தை காண்பித்தனர்.
மறுபக்கம் சுதாகரன் அனுசாந்த் மற்றும் பருதி ஆகியோர் பந்துவீச்சில் சவால் கொடுக்க தொடங்கினர். இதன்காரணமாக மலக பபோதன 65 ஓட்டங்களுடனும், தினெத் 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க ஏனைய வீரர்கள் பந்து வீச்சாளர்களுக்கு எந்தவித சவாலும் கொடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனவே 42.3 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய காமினி தேசிய கல்லூரி அணி 162 ஓட்டங்களுக்கு தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்து, இன்னிங்ஸ் மற்றும் 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றிபெற்றுள்ள யாழ். மத்தியக் கல்லூரியானது தங்களுடைய காலிறுதிப் போட்டியில் புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலை அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
- யாழ். மத்தியக் கல்லூரி 358/9d (71.4) – கஜன் 153, அஜய் 51, பபோதன 33/3
- காமினி தேசிய கல்லூரி 85/10 (41.4) – சலக 24, பருதி 37/7, நியூட்டன் 20/3
- காமினி தேசிய கல்லூரி (F/O) 162/10 (42.3) – மலக பபோதன 65, அனுசாந்த் 31/4, பருதி 52/3
முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<