இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற போட்டிகளில் அக்குரனை அஸ்ஹர் கல்லூரி வெற்றியை பதிவுசெய்ததுடன், யாழ். இந்துக் கல்லூரி தோல்வியை தழுவியுள்ளது.
அதேநேரம், டிவிஷன் – II அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிறி பியரத்ன மத்திய மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.
சிறி பியரத்ன மத்திய மகா வித்தியாலயம் எதிர் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி
சிறி பியரத்ன மத்திய மகா வித்தியாலயத்துக்கு எதிரான போட்டியில் 186 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி பதிவுசெய்துள்ளது.
தங்களுடைய சொந்த மைதானத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆரம்ப விக்கெட்டுக்காக 135 ஓட்டங்களை சச்சின் கணபதி மற்றும் உதயன் அபிஜோய்சாந்த் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அணிக்காக அதிகபட்சமாக அபிஜோய்சாந்த் 67 ஓட்டங்களையும், சச்சின் கணபதி 46 ஓட்டங்களையும், அருல்நேசன் கவிஷான் 21 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ஹிருஷ பிரனீத 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிறி பியரத்ன மத்திய மகா வித்தியாலய அணிக்கு, குகதாஸ் மதுலன் மற்றும் யோகதாஸ் விதுசன் ஆகியோர் கடுமையான நெருக்கடியை கொடுக்க, வெறும் 70 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சுதீஷ நெத்மின அதிகபட்சமாக 17 ஓட்டங்களை பெற, குகதாஸ் மதுலன் 5 விக்கெட்டுகளையும், யோகதாஸ் விதுசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- சென். ஜோன்ஸ் கல்லூரி – 256/8 (50), அபிஜோய்சாந்த் 67, சச்சின் கணபதி 46, ஹிருஷ பிரனீத 45/4
- சிறி பியரத்ன மத்திய ம.வி. – 70/10 (21.2), சுதீஷ நெத்மின 17, குகதாஸ் மதுலன் 24/5, யோகதாஸ் விதுசன் 1/3
- முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி 186 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
பண்டாரவளை புனித தோமையார் கல்லூரி எதிர் அஸ்ஹர் கல்லூரி அக்குரனை
பண்டாரவளை புனித தோமையார் கல்லூரியை தங்களுடைய சொந்த மைதானத்தில் எதிர்கொண்ட அக்குரனை அஸ்ஹர் கல்லூரி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
அஸ்ஹர் கல்லூரி அணியானது களத்தடுப்பை தெரிவுசெய்து, முதலில் பந்துவீசிய நிலையில், புனித தோமையார் கல்லூரி அணி மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் 43 ஓவர்களில் 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணித்தலைவர் எசித்த கிம்ஹான அரைச்சதம் கடந்து 52 ஓட்டங்களையும், பிரவீஷ நதீன் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மொஹமட் றியாஷ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அஸ்ஹர் கல்லூரிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் இமாஸ் அரைச்சதத்தை பெற்றுக்கொடுக்க, மத்தியவரிசையில் மொஹமட் பிஸ்ரி மற்றும் அணித்தலைவர் மொஹமட் ரிம்ஷாட் ஆகியோர் தங்களுடைய பங்களிப்புகளை வழங்கி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.
மொஹமட் இமாஸ் 54 ஓட்டங்களையும், மொஹமட் பிஸ்ரி 42 ஓட்டங்களையும், மொஹமட் ரிம்ஷாட் 28 ஓட்டங்களையும் பெற 8 விக்கெட்டுகளை இழந்து 40.4 ஓவர்களில் அஸ்ஹர் கல்லூரி அணி வெற்றியை அடைந்துக்கொண்டது. பந்துவீச்சில் ரஹால் கருணாரத்ன 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- புனித தோமையார் கல்லூரி பண்டாரவளை -203/9 (43), எசித்த கிம்ஹான 52, பிரவீஷ நதீன் 37, மொஹமட் றியாஷ் 25/4
- அக்குரனை அஸ்ஹர் கல்லூரி – 206/8 (40.4), மொஹமட் இமாஸ் 54, மொஹமட் பிஸ்ரி 42, மொஹமட் ரிம்ஷாட் 28, ரஹால் கருணாரத்ன 16/2
- முடிவு – அக்குரனை அஸ்ஹர் கல்லூரி 2 விக்கெட்டுகளால் வெற்றி
Embed video – https://www.youtube.com/watch?v=eFkGeuTMGbE&t=65s
விக்ரமபாகு மத்தியக் கல்லூரி எதிர் யாழ். இந்துக் கல்லூரி
விக்ரமபாகு மத்தியக் கல்லூரிக்கு எதிரான போட்டியில், எஸ்.சுபர்ணனின் சகலதுறை பிரகாசிப்பையும் தாண்டி, யாழ். இந்துக் கல்லூரி அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, விக்ரமபாகு மத்தியக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியது.
விக்ரமபாகு மத்தியக் கல்லூரி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் மத்தியவரிசை வீரர் சம்பத் பண்டார, ஷாமிக்க அஷேன் வீரகொடி மற்றும் கீத் மாலிங்க ஆகியோரின் ஓட்டக்குவிப்புக்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அரைச்சதம் கடந்த சம்பத் பண்டார 83 ஓட்டங்களை குவிக்க, அஷேன் வீரகொடி 41 ஓட்டங்களையும், கீத் மாலிங்க 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் எஸ்.சுபர்ணன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் கடினமான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி அணிக்கு சுபர்ணன் அரைச்சதம் கடந்து அணிக்கு வலுவளித்தாலும், ஏனைய சாதகமான துடுப்பாட்ட பங்களிப்புகள் இல்லாமை காரணமாக 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
சுபர்ணன் அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும், டி.கஜனாத் 37 ஓட்டங்களையும், கே.பரெஷித் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள இந்துக் கல்லூரி அணி 212 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் நிம்னந்த சொய்ஷா 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- விக்ரமபாகு மத்தியக் கல்லூரி – 258/9 (50), சம்பத் பண்டார 83, அஷேன் வீரகொடி 41, கீத் மாலிங்க 34, எஸ்.சுபர்ணன் 52/4
- யாழ். இந்துக் கல்லூரி – 212/10 (45.4), எஸ்.சுபர்ணன் 69, டி.கஜனாத் 37, கே.பரெஷித் 34, நிம்னந்த சொய்ஷா 28/4
- முடிவு – விக்ரமபாகு மத்தியக் கல்லூரி 46 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<