இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று புதன்கிழமை (21) நடைபெற்ற போட்டியில், பிலியந்தலை மத்தியக் கல்லூரிக்கு எதிரான போட்டியில், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென். ஜோன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
உலகக்கிண்ணம் பயணிக்கும் மீனவ தந்தையின் மகன் ; டில்ஷான் மதுசங்கவின் கதை!
அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெறத்தவறியதுடன், அணித்தலைவர் கமலபாலன் சபேஷன் துடுப்பாட்ட ஆரம்பத்தை பெற்றுக்கொண்டபோதும் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும் சகலதுறை வீரர் அண்டன் அபிஷேக் தனியாளாக ஓட்டங்களை குவிக்க, அவருக்கு மோகனராசா கமல்ராஜ் மற்றும் யோகதாஸ் விதுசன் ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கினர். இறுதிவரை போராடி ஓட்டங்களை குவித்த அண்டன் அபிஷேக் 77 பந்துகளில் 76 ஓட்டங்களை பெற, 48.4 ஓவர்கள் நிறைவில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் டிலாஷ் சச்சிந்த 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிலியந்தலை மத்தியக் கல்லூரி அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மறுமுனையில் சென். ஜோன்ஸ் அணி ஓட்டங்களை கட்டுப்படுத்தியதுடன், சீறான இடைவெளிகளில் விக்கெட்டுகளையும் சாய்த்தது.
எனினும், பிலியந்தலை மத்தியக் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர் செதிக டில்மித்தின் 52 ஓட்டங்கள் மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் 46.3 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து பிலியந்தலை மத்தியக் கல்லூரி அணி வெற்றியை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஜெயச்சந்திரன் அஸ்னாத் 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தங்களுடைய குழுவில் மொத்தமாக 4 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளதுடன், இரண்டு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி – 173/10 (48.4), அண்டன் அபிஷேக் 76, கமலபாலன் சபேசன் 27, டிலாஷ் சச்சிந்த 22/3
பிலியந்தலை மத்தியக் கல்லூரி – 174/7 (46.3), செதிக டில்மித் 52, டிலாஷ் சச்சிந்த 29, ஜெயச்சந்திரன் அஸ்னாத் 44/3
முடிவு – பிலியந்தலை மத்தியக் கல்லூரி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<