புனித. பத்திரிசியார் கல்லூரிக்கு முதல் வெற்றி ; தோல்வியடைந்த யாழ். மத்தி!

U19 Schools Cricket Tournament 2022/23

262

இலங்கையின் 19 வயதின் கீழ் பிரிவு – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற போட்டிகளில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி தோல்வியை தழுவியுள்ளது.

தங்களுடைய முதல் போட்டியில் மதுகம ஆனந்த சாஸ்த்ராலயா கல்லூரியை எதிர்கொண்டு புனித பத்திரிசியார் கல்லூரி விளையாடியதுடன், மத்தியக் கல்லூரி அணியானது வயம்ப றோயல் கல்லூரியை எதிர்த்தாடியது.

>> யாழ். மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக சுரேஸ் மோகன் நியமனம்!

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி எதிர் மதுகம ஆனந்த சாஸ்த்ராலயா கல்லூரி

தங்களுடைய சொந்த மைதானத்தில் ஆனந்த சாஸ்த்ராலயா அணியை எதிர்கொண்ட புனித பத்திரிசியார் அணியானது 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண வீரர்கள், 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

புனித பத்திரிசியார் அணி ஆரம்பத்தில் தடுமாறியிருந்த போதும், மத்தியவரிசை மற்றும் பின்வரிசை வீரர்களின் உதவியுடன் இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றது. நான்காவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய எஸ்.சமிந்தன் 69 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, அதனையடுத்து களமிறங்கிய டி. அபிலாஷ் மற்றும் ஆர்.ஷியன்சன் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் முறையே 53 மற்றும் 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் தீக்ஷன பீரிஸ் மற்றும் லகிந்து டினு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 232 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆனந்த சாஸ்த்ராலயா அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹெசித அனுஹஸ் அரைச்சதத்தை (53) பெற்றுக்கொடுத்து சிறந்த ஆரம்பத்தை தந்தார். மறுமுனையில் மத்தியவரிசை வீரர் நுவான் தினேத் 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர்கள் இருவரைத்தவிர்த்து ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்கத்தவறிய நிலையில், 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து ஆனந்த சாஸ்த்ராலயா அணி 211 ஓட்டங்களை பெற்று 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சை பொருத்தவரை எஸ். சவுசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

  • புனித பத்திரிசியார் கல்லூரி – 231/5 (50), எஸ்.சமிந்தன் 69, டி அபிலாஷ் 53, ஆர்.சியான்ஸன் 41, தீக்ஷன பிரீஸ் 20/2
  • ஆனந்த சாஸ்த்ராலயா கல்லூரி – 211/10 (50), நுவான் தினெத் 81, ஹெசித அனுஹஸ் 53, எஸ். சவுசன் 32/4

முடிவு – புனித பத்திரிசியார் கல்லூரி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

யாழ். மத்தியக் கல்லூரி எதிர் வயம்ப றோயல் கல்லூரி

நாரம்மல பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வயம்ப றோயல் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் யாழ். மத்தியக் கல்லூரி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மத்தியக் கல்லூரி அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரஞ்சித்குமார் நியூட்டன், ஜெயதீஸ்வரன் விதுசன் மற்றும் மதீஷ்வரன் சஞ்சயன் ஆகியோர் ஓரளவு ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தபோதும் அணிக்கு தேவையான துடுப்பாட்ட பங்களிப்பை வழங்க தவறினர்.

எனினும், மத்தியவரிசையில் களமிறங்கிய ஆனந்தன் கஜன், சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச்சதம் (53) கடந்திருந்தபோதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பின்மையால் மத்தியக் கல்லூரி அணி 33.2 ஓவர்கள் நிறைவில் 159 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் ஓசத கௌஷல்ய மற்றும் திமிர பாலசூரிய ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வயம்ப றோயல் கல்லூரி அணியை பொருத்தவரை களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் ஒவ்வொருவரும் துடுப்பாட்டத்தில் சராசரியான பங்களிப்பை வழங்க, அந்த அணி 39 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

வயம்ப றோயல் அணியில் அதிகபட்சமாக மதீஷ பன்கஜ 35 ஓட்டங்களையும், சுப்ரமணியன் பிரதீபன் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் விக்னேஷ்வரன் பாருதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  • யாழ். மத்தியக் கல்லூரி – 159/10 (33.2), ஆனந்தன் கஜன் 55, ரஞ்சித்குமார் நியூட்டன் 29, மதீஷ்வரன் சன்ஜயன் 29, ஓசத கௌஷல்ய 2/3, திமிர பாலசூரிய 40/3
  • வயம்ப றோயல் கல்லூரி – 160/4 (39), மதீஷ பன்கஜ 35, சுப்ரமணியன் பிரதீப் 27, விக்னேஷ்வரன் பாருதி 37/2

முடிவு – வயம்ப றோயல் கல்லூரி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<