ஜனாதிபதி கல்லூரி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி

298

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுற்ற போட்டியொன்றில் அநுராதபுரம் மத்திய கல்லூரியை தோற்கடித்த கோட்டை ஜனாதிபதி கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றியை சுவீகரித்தது.

ஏனைய போட்டிகளில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகள் முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டன. பண்டாரநாயக்க கல்லூரி மற்றும் கேகாலை புனித மேரிஸ் கல்லூரிகளுக்கிடையிலான போட்டியின் முதல் நாள் நிறைவில் பண்டாரநாயக்க கல்லூரி முன்னிலையிலுள்ளது.

அநுராதபுரம் மத்திய கல்லூரி எதிர் கோட்டை ஜனாதிபதி கல்லூரி

இரண்டாம் நாள் தொடக்கத்தில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த அநுராதபுரம் மத்திய கல்லூரி 32.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. தனஞ்சய தம்மிட்ட 24 ஓட்டங்களையும் ஹேஷான் சேனார ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களையும் பெற்றனர். மீண்டும் அசத்தலான பந்துவீச்சில் ஈடுபட்ட றிபாஸ் மௌரூஸ் 37 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

44 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஜனாதிபதிக் கல்லூரி 7.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை தனதாக்கியது. சச்சித லியனகே ஆட்டமிழக்காது 26 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.  

முன்னர், தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அநுராதபுரம் மத்திய கல்லூரி 31 ஓவர்களில் 125 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. லஹிரு லியனகே அதிகபட்சமாக 28 ஓட்டங்களைப் பெற்றார். ஜனாதிபதி கல்லூரி சார்பாக அற்புதமாக பந்துவீசிய ரிபாஸ் மௌரூஸ் 34 ஓட்டங்களை வழங்கி 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜனாதிபதி கல்லூரி 47 ஓவர்கள் நிறைவில் 225 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. கனிது தெவ்மின அரைச்சதம் கடந்தார். ஹஷான் பிரியதர்ஷன 47 ஓட்டங்களைக் குவித்தார். அநுராதபுரம் மத்திய கல்லூரி சார்பில் பந்து வீச்சில் ரவிந்த பிரபாஸ்வர மற்றும் மதுரங்க சந்திரரத்ன ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

அநுராதபுர மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 125 (31) – லஹிரு லியனகே 28, ரிபாஸ் மௌரூஸ் 7/34

ஜனாதிபதிக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 225 (47) – கனிது தெவ்மின 50, ஹஷான் பிரியதர்ஷன 47, ரவிந்த பிரபாஸ்வர 4/38, மதுரங்க சந்திரரத்ன 4/42

அநுராதபுர மத்திய கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 143 (32.4) – தனஞ்சய தம்மிட்ட 24, ஹேஷான் சேனார 20*, ரிபாஸ் மௌரூஸ் 6/37, பிரமுக கயஷான் 2/32

ஜனாதிபதிக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 44/2 (7.5) – சச்சித லியனகே 26*

முடிவு: ஜனாதிபதிக் கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி.


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி

முதல் நாள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை பெற்றிருந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, மேலும் 32 ஓட்டங்கள் பெற்றால் முதல் இன்னிங்ஸ் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது. கீழ் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 67.5 ஓவர்களில் 242 ஓட்டங்களைக் குவித்தது.

முதல் நாள் லசித் குரூஸ்புள்ளே பெற்றுக் கொண்ட 67 ஓட்டங்களுக்கு மேலதிகமாக, சதீஷ பெரேரா 48 ஓட்டங்களையும்  கெவின் பெரேரா ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும் குவித்தனர். புனித ஜோசப் வாஸ் கல்லூரி சார்பில் மதுஷான் ரணதுங்க 3 விக்கெட்டுகளையும் தனஞ்சய பெரேரா மற்றும் கனிஷ்க நாணயக்கார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய புனித ஜோசப் வாஸ் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. மீண்டுமொருமுறை துடுப்பாட்டத்திலும் கைவண்ணத்தை காட்டிய தனஞ்சய பெரேரா 94 ஓட்டங்களையும் மதுஷான் ரணதுங்க 65 ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சிலும் சிறப்பித்த லசித் குரூஸ்புள்ளே 67 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகள் பெற்றுக் கொண்டார். பசிந்து மாதவ 60 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முன்னர், முதல் இன்னிங்சிற்காக புனித ஜோசப் வாஸ் கல்லூரி 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் தனஞ்சய பெரேரா 48 ஓட்டங்களையும் அஞ்சன ருக்மல் 43 ஓட்டங்களையும் குவித்தனர். மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி சார்பாக பந்து வீச்சில் லசித் குரூஸ்புள்ளே 3 விக்கெட்டுகளையும், சச்சிந்து கொலம்பகே மற்றும் சங்க பூர்ண ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 172 (59.3)- தனஞ்சய பெரேரா 48, அஞ்சன ருக்மல் 43, மதுஷான் ரணதுங்க 26, லசித் குரூஸ்புள்ளே 3/28, சச்சிந்து கொலம்பகே 2/14, சங்க பூர்ண 2/16

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 242 (67.5) – லசித் குரூஸ்புள்ளே 67, சதீஷ பெரேரா 48, கெவின் பெரேரா 47*, அஷான் பெர்னாண்டோ 25, மதுஷான் ரணதுங்க 3/47, தனஞ்சய பெரேரா 2/42, கனிஷ்க நாணயக்கார 2/53

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 205/8 (65) தனஞ்சய பெரேரா 94, மதுஷான் ரணதுங்க 65, பசிந்து மாதவ 4/60, லசித் குரூஸ்புள்ளே 4/67

முடிவு: சமநிலையில் முடிவடைந்தது. மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி.


நாலந்த கல்லூரி எதிர் இசிபதன கல்லூரி

146/9 என்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நாலந்த கல்லூரி 149 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அணித்தலைவர் தசுன் செனவிரத்ன 35 ஓட்டங்களையும் சுஹங்க விஜேவர்தன 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இசிபதன கல்லூரி சார்பாக பந்து வீச்சில் லஹிரு டில்ஷான் 3 விக்கெட்டுகளையும், ஹேஷான் பெர்னாண்டோ மற்றும் சஞ்சுல பண்டார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.

14 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய இசிபதன கல்லூரி சிறப்பாக துடுப்பெடுத்தாடி 272 ஓட்டங்களைக் குவித்தது. அதிரடியாக ஆடிய அயன சிறிவர்தன 130 பந்துகளில் 7 பௌண்டரிகள் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 120 ஓட்டங்கள் விளாசினார்.

கலன பெரேரா 41 ஓட்டங்களையும் லேஷான் அமரசிங்க 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். கவீஷ் மதுரப்பெரும 4 விக்கெட்டுகளையும் லக்ஷித ரசஞ்சன 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அத்துடன் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.  

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய இசிபதன கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. கலன பெரேரா 47 ஓட்டங்களையும் மனீஷ ரூபசிங்க 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். சிறப்பாகப் பந்து வீசிய இடது கை சுழற்பந்து வீச்சாளரான கவீஷ் மதுரப்பெரும 10 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 135 (36.1) – கலன  பெரேரா 47, மனீஷ ரூபசிங்க 44, சஞ்சுல பண்டார 23, கவீஷ் மதுரப்பெரும 5/10, உமேஷ்க டில்ஷான் 2/16

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 149 (51) – தசுன் செனவிரத்ன 35, சுஹங்க விஜேவர்தன 33, அஷான் பெர்னாண்டோ 25, லஹிரு டில்ஷான் 3/44, சஞ்சுல பண்டார 2/8, ஹேஷான் பெர்னாண்டோ 2/28

இசிபதன கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 272 (71.1) – அயன சிறிவர்தன 121, கலன  பெரேரா 41, லேஷான் அமரசிங்க 35, கவீஷ் மதுரப்பெரும 4/71, லக்ஷித ரசஞ்சன 3/37

முடிவுசமநிலையில் முடிவடைந்தது. நாலந்தா கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி.


பண்டாரநாயக்க கல்லூரி எதிர் புனித மேரிஸ் கல்லூரி

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பண்டாரநாயக்க கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. சாசிரி அதிகாரி அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் லசித் உடஹகே 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய புனித மேரிஸ் கல்லூரியும் துடுப்பாட்டத்தில் பெரிதாக சோபிக்கவில்லை. எதிரணி பெற்றுக் கொண்ட ஓட்ட எண்ணிக்கையை அவ்வணி நெருங்கி வந்த போதிலும், துரதிஷ்டவசமாக 137 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ராஜித கொட்டுவகொட 39 ஓட்டங்களையும் மாஸ் ரஹீம் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.  

பண்டாரநாயக்க கல்லூரி சார்பாகப் பந்து வீச்சில் தசுன் பண்டார 3 விக்கெட்டுகளையும், சிசித்த மதநாயக மற்றும் ஹிமத் ஜயவீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி – 138 (48.1) – சாசிரி அதிகாரி 39, கயாஷான் ஹெட்டியாராச்சி 25, லசித் உடஹகே 4/48, சஞ்சய் ரஞ்சித் 2/15, மாஸ் ரஹீம் 2/18

புனித மேரிஸ் கல்லூரி – 137 (35) – ராஜித கொட்டுவகொட 39, மாஸ் ரஹீம் 28, தசுன் பண்டார 3/11, சிசித்த மதநாயக 2/22, ஹிமத் ஜயவீர 2/37

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.