19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவடைந்த போட்டிகளில் கொழும்பு மஹாநாம கல்லூரி மற்றும் மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி அணிகள் முறையே, கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி அணிகளை முதல் இன்னிங்சில் தோற்கடித்தன.
மஹாநாம கல்லூரி எதிர் ரோயல் கல்லூரி
தொடரின் குழு ‘B’ இற்கான போட்டியொன்றில் மஹாநாம கல்லூரியை எதிர்த்து ரோயல் கல்லூரி போட்டியிட்டது. முதல் நாள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 361 ஓட்டங்களை பெற்றிருந்த மஹாநாம கல்லூரி இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது. நேற்றைய தினம் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களை பெற்றிருந்த எஷான் ஹெட்டியாரச்சி சதம் கடந்த நிலையில் 102 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
Photos : U19 Cricket – Royal College vs Mahanama College
அதன்படி மஹாநாம கல்லூரி 89 ஓவர்களில் 398 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. நேற்று அபாரமான ஆட்டத்தில் ஈடுபட்ட மலிந்து மதுரங்க 115 ஓட்டங்களை விளாசியதுடன் கவிந்து முனசிங்க 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் கனித் சந்தீப 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரோயல் கல்லூரி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொண்டது. தொடக்க வீரர் ரொனுக ஜயவர்தன 95 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவரை தவிர ஹெலித விதானகே 43 ஓட்டங்களை குவித்ததுடன், மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்கத் தவறியதால் ரோயல் கல்லூரி 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது. பந்து வீச்சில் ஹஷான் சந்தீப 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
165 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட மஹாநாம கல்லூரி ரோயல் கல்லூரியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய ரோயல் கல்லூரி, போட்டி நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 45 ஓட்டங்களை பெற்றிருந்தது. 3 விக்கெட்டுகளையும் ஹஷான் சந்தீப வீழ்த்தியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 398(89) – மலிந்து மதுரங்க 115, எஷான் ஹெட்டியாரச்சி 102, கவிந்து முனசிங்க 53, கனித் சந்தீப 3/51
ரோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 233 (73.2) – ரொனுக ஜயவர்தன 95, ஹெலித விதானகே 43, ஹஷான் சந்தீப 3/65
ரோயல் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 45/3 (11) – ஹஷான் சந்தீப 3/13
முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மஹாநாம கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.
மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி
‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘A’ இற்கான இப்போட்டியில் முதல் நாள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களை பெற்றிருந்த புனித அந்தோனியார் கல்லூரி முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுவதாயின் மேலும் 124 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.
அசத்தலாக பந்து வீசிய தருஷ பெர்னாண்டோ 30 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை பதம்பார்க்க, புனித அந்தோனியார் கல்லூரி 150 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பில் எரங்க மதுஷான் அதிகபட்சமாக 32 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
ஏற்கனவே நேற்றைய முதல் நாளில் தமது முதல் இன்னிங்சில் 195 ஓடடங்களைப் பெற்றிருந்தமையினால் புனித செபஸ்டியன் கல்லூரி அணி 45 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டது.
இந்நிலையிலேயே இன்று புனித செபஸ்டியன் கல்லூரி இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிமேஷ் பண்டார 132 ஓட்டங்கள் குவிக்க, புனித செபஸ்டியன் கல்லூரி அணி போட்டி நிறைவுறும் நேரத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களை குவித்திருந்தது. தருஷ பெர்னாண்டோ (74) மற்றும் டி பைசர் (51) ஆகியோர் அரைச்சதம் கடந்தனர்.
போட்டியின் சுருக்கம்
புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 195 (56) – தாஷிக் பெரேரா 49, துலாஜ் சில்வா 44, தருஷ பெர்னாண்டோ 37, கவீஷ துலஞ்சன 4/54, கவிந்து ஹெட்டியாரச்சி 4/64
புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 150 (65) – எரங்க மதுஷான் 32, தருஷ பெர்னாண்டோ 4/30
புனித செபஸ்டியன் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 318/7 (50.5) – நிமேஷ் பண்டார 132, தருஷ பெர்னாண்டோ 74, டி பைசர் 51, கவிந்து ஹெட்டியாரச்சி 3/72
முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித செபஸ்டியன் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.