19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமான போட்டிகளின் முதல் நாள் நிறைவில் ஆனந்த கல்லூரி, நாலந்த கல்லூரி மற்றும் புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகள் முன்னிலையிலுள்ளன.
ஆனந்த கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி
‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் ஆனந்த கல்லூரியை எதிர்த்து வெஸ்லி கல்லூரி போட்டியிட்டது. வெஸ்லி கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆனந்த கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆனந்த கல்லூரி அணியின் அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சஹன் சுரவீர (118) மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இலங்கை அணி வீரர் சம்மு அஷான் (106) ஆகியோர் சதம் கடந்தனர்.
மேலும், துஷான் ஹெட்டிகே 89 ஓட்டங்களையும், அசேல சிகர ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, ஆனந்த கல்லூரி 60.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 377 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
தொடர்ந்து களமிறங்கிய வெஸ்லி கல்லூரி 32.3 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்லி கல்லூரி சார்பில் சகுந்தக லியனகே அதிகபட்சமாக 52 ஓட்டங்களைக் குவித்தார். ஆனந்த கல்லூரி சார்பாகப் பந்துவீச்சிலும் அசத்திய சம்மு அஷான் 66 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். திலீப ஜயலத் 3 விக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டார்.
போட்டியின் சுருக்கம்
ஆனந்த கல்லூரி – 377/4d (60.5) – சஹன் சுரவீர 118, சம்மு அஷான் 106, துஷான் ஹெட்டிகே 89, அசேல சிகர 51*
வெஸ்லி கல்லூரி – 153 (32.3) – சகுந்தக லியனகே 52, சம்மு அஷான் 5/66, திலீப ஜயலத் 3/28
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
நாலந்த கல்லூரி எதிர் புனித மேரிஸ் கல்லூரி
இத்தொடரின் குழு ‘A’ இற்கான மற்றுமொரு போட்டியில் நாலந்த கல்லூரியும் புனித மேரிஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன. நாலந்த கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித மேரிஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
எனினும் அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், 24.4 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனியொருவராக போராடிய மாஸ் ரஹீம் 78 ஓட்டங்களைக் குவித்தார். நாலந்த கல்லூரி சார்பாகப் பந்துவீச்சில் சுஹங்க விஜேவர்தன மற்றும் கலன பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய நாலந்த கல்லூரி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. டில்ஹார பொல்கம்பொல (80) மற்றும் மலிங்க அமரசிங்க (60) ஆகியோர் அரைச்சதம் விளாச, நாலந்த கல்லூரி அணியினர் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
லக்ஷித ரசஞ்சன ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருந்தார். புனித மேரிஸ் கல்லூரி சார்பாகப் பந்துவீச்சில் லசித்த உடஹகே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
புனித மேரிஸ் கல்லூரி – 126 (24.4) – மாஸ் ரஹீம் 78, சுஹங்க விஜேவர்தன, 3/48, கலன பெரேரா 3/31
நாலந்த கல்லூரி – 260/4 (62) – டில்ஹார பொல்கம்பொல 81, மலிங்க அமரசிங்க 60, லக்ஷித ரசஞ்சன 49*, லசித்த உடஹகே 2/59
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
இசிபதன கல்லூரி எதிர் புனித பீட்டர்ஸ் கல்லூரி
இன்று இடம்பெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மற்றுமொரு கிரிக்கெட் போட்டியொன்றில் இசிபதன கல்லூரியும் புனித பீட்டர்ஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன. புனித பீட்டர்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இசிபதன கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இசிபதன கல்லூரி அணி சார்பில் அயன சிறிவர்தன 53 ஓட்டங்களையும், சஞ்சுல அபேவிக்ரம 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். புனித பீட்டர்ஸ் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் சிறப்பித்த மொஹமட் அமீன் 4 விக்கெட்டுகளையும் மற்றும் சதுர ஒபேசேகர 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த, இசிபதன கல்லூரி 190 ஓட்டங்களுக்கு சுருண்டது.
தொடர்ந்து களமிறங்கிய புனித பீட்டர்ஸ் கல்லூரி சார்பில் மானெல்க டி சில்வா (54) மற்றும் அனுஷ்க பெரேரா (50*) அரைச்சதம் கடந்தனர். அதன்படி, புனித பீட்டர்ஸ் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையிலுள்ளது. இசிபதன கல்லூரி அணி சார்பில் பந்துவீச்சிலும் தனது பங்களிப்பை வழங்கிய அயன சிறிவர்தன 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
இசிபதன கல்லூரி – 190 (43.1) – அயன சிறிவர்தன 53, சஞ்சுல அபேவிக்ரம 44, மொஹமட் அமீன் 4/37, சதுர ஒபேசேகர 3/53
புனித பீட்டர்ஸ் கல்லூரி – 156/4 (49) – மானெல்க டி சில்வா 54, அனுஷ்க பெரேரா 50*, அயன சிறிவர்தன 2/33
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.