19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுபெற்ற குழு ‘C’ இற்கான போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி மற்றும் புனித தோமையர் கல்லூரி அணிகள் மோதிக் கொண்டன.
ரோயல் கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகளுக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி
நேற்றைய தினம் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித தோமியர் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய ஸாஹிரா கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய நிலையில், ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர்.
எனினும் பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்ட சஜித் சமீர 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அதன்படி ஸாஹிரா கல்லூரி 8 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டதால் முதல் தினத்திற்காக போட்டி நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் ஸாஹிரா கல்லூரி தனது இறுதி இரண்டு விக்கெட்டுகளையும் ஓட்டமேதும் பெறாத நிலையில் இழந்தது. பந்து வீச்சில் ஷலின் டி மெல் 19 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக 142 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி அணி ஆரம்பம் முதலே வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. அபாரமாக பந்து வீசிய மொஹமட் நஜாத் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பதம்பார்க்க, புனித தோமையர் கல்லூரி 110 ஓட்டங்களுக்கே சுருண்டது. அவ்வணி சார்பாக ரொமேஷ் நல்லப்பெரும 38 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து சீரற்ற காலநிலை நிலவியதால் அத்துடன் போட்டி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்ததுடன் ஸாஹிரா கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டது.
போட்டியின் சுருக்கம்
ஸாஹிரா கல்லூரி – 141 (57.5) – சஜித் சமீர 38, ஷலின் டி மெல் 3/19
புனித தோமியர் கல்லூரி – 110 (49) – ரொமேஷ் நல்லப்பெரும 38, மொஹமட் இஷாக் 29, மொஹமட் நஜாத் 4/32
முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. ஸாஹிரா கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி