முதல்தர பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான தொடரின் இன்று ஆரம்பமாகிய போட்டிகள் சிலவற்றில் இளம் வீரர்கள் பலர் தமது துடுப்பாட்ட திறமையின் மூலம் சதங்களையும், அரைச்சதங்களையும் குவித்துள்ளனர்.
ரோயல் கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி
இத்தொடரின் குழு Bயில் அங்கம் வகிக்கும் இவ்விரண்டு கல்லூரி அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஆனந்த கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியின் வெற்றிக்கு அமைய, ஆனந்த கல்லூரியின் அணித் தலைவர், தமது தரப்பை முதலில் களத்தடுப்பில் ஈடுபடுத்த தீர்மானித்தார். எனவே போட்டியில் முதலில் துடுப்பாடிய ரோயல் கல்லூரி அணிக்கு கவிந்து மதரசிங்க மற்றும் ஹேலித விதானகே ஆகியோர் துடுப்பாட்டத்தில் பங்களிப்பு வழங்க, அவ்வணி தமது முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கவிந்து சதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அவர் 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் துலீப ஜயலத் 4 விக்கெட்டுக்களையும், அசேல் சிஜேர 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த ஆனந்த கல்லூரி அணியினர் இன்றைய ஆட்ட நேர முடிவின்போது, விக்கெட் இழப்பேதுமின்றி 83 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ரோயல் கல்லூரி: 221 (78.1) – கவிந்து மதரசிங்க 93, ஹேலித விதானகே 46, துலீப ஜயலத் 4/70, அசேல் சிஜேர 3/38
ஆனந்த கல்லூரி: 83/0 (11) – சஹன் சுரவீர 43
திரித்துவக் கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி
இப்போட்டி புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற திரித்துவக் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி ஆடிய அவர்கள் சன்முகநாதன் (62), ட்ரெவொன் (55) ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் 72.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றது.
பந்து வீச்சில் ருஷிர ஏகனாயக மற்றும் ஹரீன் குரே ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
பின்னர் தமது முதல் இன்னிங்சிற்காக ஆடிய புனித ஜோசப் கல்லூரி அணியினர் 24 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய நாள் ஆட்டம் நிறைவிற்கு வந்தது.
அவ்வணியின் கமெரொன் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
திரித்துவக் கல்லூரி: 264 (72.4) – சன்முகநாதன் 62, ட்ரெவொன் 55, ருஷிர ஏகனாயக 4/51, ஹரீன் குரே 4/74
புனித ஜோசப் கல்லூரி – 124/1 (24) – கமெரொன் 63*, நிபுன் சமரசிங்க 48*
புனித தோமியர் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி
புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் அக்கல்லூரி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடியது.
அணி வீரர்களின் சிறந்த துடுப்பாட்ட பங்களிப்புடன் அவ்வணி தமது முதல் இன்னிங்சிற்காக 88.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 306 ஓட்டங்களைப் பெற்றது.
சிறந்த முறையில் துடுப்பாடிய ரொமேஷ் நல்லபெறும ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். எனினும் ஏனைய வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து சென்றமையினால் அவரது சதம் பெறும் வாய்ப்பு வீண் போனது.
பந்து வீச்சில் சிறந்த பங்களிப்பு வழங்கிய சகுன்த லியனகே மாத்திரம் வெஸ்லி கல்லூரின் சிறந்த பந்து வீச்சாக 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சிற்காக ஆடிய வெஸ்லி கல்லூரி, இன்றைய ஆட்ட நேர முடிவின்போது, ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
புனித தோமியர் கல்லூரி 306 (88.5) – ரொமேஷ் நல்லபெறும 97*, தினுர குனவர்தன 36, சகுன்த லியனகே 4/93
வெஸ்லி கல்லூரி 24/1 (6)
பன்டாரனாயக்க கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி
D குழுவிற்கான இந்தப் போட்டி டி மெசனொட் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டி மெசனொட் கல்லூரியினர், தமது தரப்பை முதலில் களத்தடுப்பில் ஈடுபடுத்தினர்.
எனினும், துடுப்பாட்டத்தில் சிறந்த முறையில் செயற்பட்ட பன்டாரனாயக்க கல்லூரியின் அரோச மதுஷானின் சதம் மற்றும் விசித மதனாயக்கவின் அரைச்சதம் என்பவற்றுடன் அவ்வணி 71.4 ஓவர்கள் நிறைவில் 263 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்து வீச்சில் ரோசித செனவிரத்ன 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஆடிய டி மெசனொட் கல்லூரி அணியினர் இன்றைய ஆட்ட நேர முடிவின்போது விக்கெட் இழப்பேதுமின்றி 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
பன்டாரனாயக்க கல்லூரி 263 (71.4) – அரோச மதுஷான் 108*, விசித மதனாயக்க 58, ரோசித செனவிரத்ன 4/82, மிதில கீத் 3/37
டி மெசனொட் கல்லூரி – 34/0 (9)
இந்த அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.