புனித அலோசியஸ் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி : தர்மாசோக கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

316
Schools U19 Cricket
සාන්ත ඇලෝසියස් විදුහලට පූර්ණ ජයක්.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுற்ற போட்டியொன்றில் மொரட்டுவ மகா வித்தியாலயத்தை  தோற்கடித்த புனித அலோசியஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களினால் இலகு வெற்றியை பெற்றுக் கொண்டது.

இன்று நிறைவுற்ற ஏனைய போட்டியில் நூலிழையில் தோல்வியை தவிர்த்துக் கொண்ட குருகுல கல்லூரி, தர்மாசோக கல்லூரியுடனான போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

புனித அலோசியஸ் கல்லூரி எதிர் மொரட்டுவ மகா வித்தியாலயம்

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘C’ இற்கான போட்டியொன்றில் மொரட்டுவ மகா வித்தியாலய அணியும் புனித அலோசியஸ் கல்லூரி அணியும் மோதிக்கொண்டன. முதல் நாள் நிறைவில் புனித அலோசியஸ் கல்லூரி தமது முதல் இன்னிங்சிற்காக விக்கெட் இழப்பின்றி 5 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்திற்காகக் களமிறங்கிய அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அஷென் பண்டார (67), கிம்ஹான  ஆஷிர்வாத  (65), நவிந்து நிர்மால் (59*), நிலுக்ஷ துல்மின (53) ஆகிய நான்கு வீரர்கள் அரைச்சதம் கடக்க, புனித அலோசியஸ் கல்லூரி 4 விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

120 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மொரட்டுவ மகா வித்தியாலயம் மீண்டும் துடுப்பாட்டத்தில் சொதப்பியது. அற்புதமான பந்து வீச்சில் ஈடுபட்ட ஹரின் வீரசிங்க 6 விக்கெட்டுகளை வீழ்த்த, மொரட்டுவ மகா வித்தியாலயம் 80 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன்படி புனித அலோசியஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களினால் இலகு வெற்றியை பெற்றுக் கொண்டது.

முன்னர், தமது முதல் இன்னிங்சிற்காக மொரட்டுவ மகா வித்தியாலயம் 163 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நிஷான் மதுஷ்க 76 ஓட்டங்களைக் குவித்தார். பந்து வீச்சில் ஹரின் வீரசிங்க 4 விக்கெட்டுகளையும் கவிஷ்க டில்ஷான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

மொரட்டுவ மகா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) 163 (72.5) நிஷான் மதுஷ்க 76, இசுரு உதயங்க 24, ஹரின் வீரசிங்க 48/4, கவிஷ்க டில்ஷான் 35/3

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 283/4 (58) – அஷென் பண்டார 67, கிம்ஹான  ஆஷிர்வாத  65, நவிந்து நிர்மால் 59*, நிலுக்ஷ துல்மின 53

மொரட்டுவ மகா வித்தியாலயம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 80 (32.3)  – ஹரின் வீரசிங்க 6/21

முடிவு: புனித அலோசியஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களினால் வெற்றி


குருகுல கல்லூரி எதிர் தர்மாசோக கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘C’ இற்கான மற்றுமொரு போட்டியில் குருகுல கல்லூரியை எதிர்த்து தர்மாசோக கல்லூரி போட்டியிட்டது. முதல் நாள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்றிருந்த தர்மாசோக கல்லூரி, இன்று 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ரவிந்து ரொஷாந்த 71 ஓட்டங்களையும் கசுன் மதுரங்க 43 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். குருகுல கல்லூரி சார்பில் சச்சிந்த சமித்  4 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.

105 ஓட்டங்கள் பின்னிலையில், தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த குருகுல கல்லூரி ஒன்றன் பின் ஒன்றாக விக்கெட்டுகளை இழந்தது. எனினும் உதார ரவிந்து மற்றும் கீழ் வரிசை துடுப்பாட்ட வீரர்களின் முயற்சியின் பயனாக, அவ்வணி தோல்வியிலிருந்து தப்பியது.

உதார ரவிந்து ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, குருகுல கல்லூரி 135 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 30 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக் கொண்டது. அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்தது. தர்மாசோக கல்லூரி சார்பாக உஷான் நிமந்த 4 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 180  – (58.2) உதார ரவிந்து 95, அசிந்த மல்ஷான் 21, கலிந்து நதீஷான் 13/3, உஷான் நிமந்த 13/2

தர்மாசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 285 (65.5) ரவிந்து ரொஷாந்த 71, கசுன் மதுரங்க 43, சச்சிந்த சமித் 92/4

குருகுல கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 135 (40) – உதார ரவிந்து 52*, உஷான் நிமந்த 4/39

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. தர்மாசோக கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


புனித ஜோசப் கல்லூரி எதிர் தர்ஸ்டன் கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் புனித ஜோசப் கல்லூரியும் தர்ஸ்டன் கல்லூரியும் மோதிக்கொண்டன. தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற புனித ஜோசப் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

எனினும் புனித ஜோசப் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் சரண நாணயக்காரவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அவர் 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 8 விக்கெட்கள் வீழ்த்த, சற்றும் எதிர்பாராதவிதமாக புனித ஜோசப் கல்லூரி 23 ஓட்டங்களுக்கு சுருண்டது.

தொடர்ந்து களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி சிறப்பாக துடுப்பெடுத்தாடி  227 ஓட்டங்களைக் குவித்தது. யேஷான் விக்ரமாராச்சி 69 ஓட்டங்களையும் நிபுன் லக்ஷான் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் ஜெஹான் டேனியல் 81 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமது இரண்டாவது இனிங்சிற்காக களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களை பெற்றிருந்தது. தினேஷ் மதுராவல ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருந்தார். மீண்டுமொருமுறை பந்துவீச்சில் சிறப்பித்த சரண நாணயக்கார 37 ஓட்டங்களுக்கு 3 விக்கட்களை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி  (முதல் இனிங்ஸ்) – 23 (13.5) – சரண நாணயக்கார 8/15

தர்ஸ்டன் கல்லூரி  (முதல் இனிங்ஸ்) – 227 (46) – யேஷான் விக்ரமாராச்சி 69, நிபுன் லக்ஷான் 38, சரண நாணயக்கார 20, ஜெஹான் டேனியல் 5/81

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 84/4 (23) – தினேஷ் மதுராவல 29*, ஜெஹான் டேனியல் 21, சரண நாணயக்கார 3/37

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


புனித செபாஸ்டியன் கல்லூரி எதிர் ரிச்மண்ட் கல்லூரி

இத்தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் பாடசாலைகள் கிரிக்கெட்டில் பிரபல அணிகளான மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியும் காலி ரிச்மண்ட் கல்லூரியும் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற புனித செபஸ்டியன் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதிரடியாக ஆடிய டெபியன் பைசர் 129 ஓட்டங்களையும் தரூஷ பெர்னாண்டோ 83 ஓட்டங்களையும் விளாச, புனித செபஸ்டியன் கல்லூரி 60.1 ஓவர்களில் 340 ஓட்டங்களைக் குவித்தது. பந்துவீச்சில் சந்துன் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் கவீஷ அபிஷேக் 2 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.

அடுத்து களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரியும் சிறப்பான துடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆட்ட நேர முடிவின் போது அவ்வணி 2 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றிருந்தது. தனஞ்சய லக்ஷான் 70 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களை பெற்று களத்திலிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி – 340 (60.1) – டெபியன் பைசர் 129, தரூஷ பெர்னாண்டோ 83, நுவனிது பெர்னாண்டோ 31, சந்துன் மெண்டிஸ் 117/3, கவீஷா அபிஷேக் 28/2

ரிச்மண்ட் கல்லூரி – 124/2 (23) – தனஞ்சய லக்ஷான் 70, கமிந்து மெண்டிஸ் 44*

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


மலியதேவ கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான மற்றுமொரு போட்டியில் மலியதேவ கல்லூரியை எதிர்த்து டி மெசனொட் கல்லூரி போட்டியிட்டது. நாணய சுழற்சியில் வென்ற டி மெசனொட் கல்லூரி, எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய மலியதேவ கல்லூரி 41.3 ஓவர்களில் 167 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனஞ்சய பிரேமரத்ன அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். டி மெசனொட் கல்லூரி சார்பாக தேஷான் பெர்னாண்டோ (5) மற்றும் ரோஷித செனவிரத்ன (5) தமக்கிடையே அனைத்து விக்கெட்டுகளையும் பங்கிட்டுக் கொண்டனர்.

பதிலுக்கு களமிறங்கிய டி மெசனொட் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டது. அற்புதமாக துடுப்பெடுத்தாடிய கிரிஷான் சஞ்சுல ஆட்டமிழக்கது 171 ஓட்டங்களை பெற்று அசத்தினார். மலியதேவ கல்லூரி சார்பாக தமித சில்வா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

போட்டியின் சுருக்கம்

மலியதேவ கல்லூரி – 167 (41.3) தனஞ்சய பிரேமரத்ன 51, தமித சில்வா 27, தேஷான் பெர்னாண்டோ 39/5, ரோஷித செனவிரத்ன 42/5

டி மெசனொட் கல்லூரி – 232/7 (51) கிரிஷான் சஞ்சுல 171*, தமித சில்வா 56/4

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.