சொஹான், ருக்மால் அசத்த ஜோசப் வாஸ் கல்லூரிக்கு முதல் இன்னிங்சில் இலகு வெற்றி

334

சிங்கர் கிண்ண 19 வயதுக்குப்பட்ட டிவிசன் 1க்கான இரண்டு நாட்களை கொண்ட நான்கு போட்டிகள் இன்றைய தினம் ஆரம்பமாகின. முதல் சுற்றுக்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் A, B மற்றும் D குழுக்களில் அங்கம் வகிக்கும் அணிகள் பங்குபற்றின.

இதில் ஜனாதிபதி கல்லூரிக்கு எதிராக புனித ஜோசப் வாஸ் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி பெற்று, 13௦ ஓட்டங்களால் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. ஏனைய மூன்று போட்டிகள் தீர்மானம் மிக்கதாக இருக்கின்றன.

தர்ஸ்டன் கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, முதலில் தர்ஸ்டன் அணியை துடுப்பாடுமாறு பணித்தது.

அந்த வகையில் களமிறங்கிய தர்ஸ்டன் அணி முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களை, கமல் நாணயக்காரவின் நேர்த்தியான பந்து வீச்சில் சொற்ப ஓட்டங்களுக்கு இழந்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய சரண நாணயக்கார நிதானமாக துடுப்பாடி அரைச்சதம் கடந்தார். அவருடன் இணைந்தாடிய ஜனுஷ பெர்னாண்டோ 33 ஓட்டங்களை பெற்று அணியை மீட்டெடுத்தார்.

இறுதியில் தர்ஸ்டன் அணி 56.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி சார்பாக அதிரடியாக பந்து வீசிய காமல் நாணயக்கார முன்வரிசை விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்சுக்காக 37 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். திலான் நிமேஷ் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் முதல் இரண்டு விக்கெட்டுக்களை சகலதுறை ஆட்டக்காரர் சரண நாணயக்கார சொற்ப ஓட்டங்களுக்கு வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

அவ்வணி இன்றைய நாள் ஆட்டம் நிறைவின்போது, 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி : 171 (56.3) – சரண நாணயக்கார 51, ஜணுஷா பெர்னாண்டோ 33, சவான் பிரபாஷ் 29, இமேஷ் வியங்க 26, திலான் நிமேஷ் 4/48, காமல் நாணயக்கார 5/37

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி : 26/2 (9) – சரண நாணயக்கார 2/12


வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி எதிர் காலி றிச்மன்ட் கல்லூரி

சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி வீரர்கள் றிச்மன்ட் கல்லூரியின் அதிரடி பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

எனினும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்க தரிந்து அரைச்சதம் பெற்றார். அணியின் ஓட்டங்களை ஓரளவுக்கு உயர்த்திய அவர் துரதிஷ்டவசமாக 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்து சென்றார்.

எனவே, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது புனித அந்தோனியர் கல்லூரி அணி 68 ஓவர்களுக்கு 138 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது.

றிச்மன்ட் கல்லூரி சார்பாக பந்து வீசிய தனஞ்சய லக்க்ஷான் எதிரணியின் ஓட்டங்களை மட்டுப்படுத்தி 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். அத்துடன் திலங்க உதேஷன 34 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி அந்தோனியர் கல்லூரிக்கு மேலும் நெருக்கடி கொடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியர் கல்லூரி (வத்தளை) : 138/9 (68) – அவிஷ்க தரிந்து 54, திலங்க உதேஷன, 3/34, தனஞ்சய லக்க்ஷான் 3/05


வெஸ்லி கல்லூரி எதிர் காலி மஹிந்த கல்லூரி

கொழும்பு வெஸ்லி கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்லி கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தமது சொந்த மைதானத்தில் களமிறங்கிய வெஸ்லி கல்லூரி அணி முதல் இன்னிங்சுக்காக கூடிய ஓட்டங்களை பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவ்வணி 58.3 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து பெரும் ஏமாற்றம் அளித்தது.

அவ்வணி சார்பாக திசுறக்க அக்மீமன 37 ஓட்டங்களையும், ஹசித் பெரேரா 36 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். அதேவேளை வெஸ்லி கல்லூரியின் ஓட்டங்களை கட்டுப்படுத்திய பிரமித் ஹன்சிக்க 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பதம் பார்த்தார். அவருடன் இணைந்து அணிக்கு சிறப்பாகப் பங்காற்றிய கவிந்து எதிரிவீர 38 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய மஹிந்த கல்லூரி அணி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 43 ஓட்டங்களை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் வெற்றி பெறுவதற்கு எட்டு விக்கெட்டுக்கள் கையிருப்பில் உள்ள நிலையில் இன்னும் 95 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் அவ்வணி உள்ளது.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி : 138 (58.3) – திசுறக்க அக்மீமன 37, ஹசித் பெரேரா 36, பிரமித் ஹன்சிக்க 4/28, கவிந்து எதிரிவீர 3/38, கே கே கெவின் 2/20

மஹிந்த கல்லூரி : 43/2 (23)


ஜனாதிபதி கல்லூரி எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி

இத்தொடரில் முதல் சுற்றுக்காக D குழுவில் அங்கம் வகிக்கும் இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி அல்பர்ட் எஃப் பெரிஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜனாதிபதி கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

வலிமைமிக்க ஜோசப் வாஸ் கல்லூரி அணியினரின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஜனாதிபதி கல்லூரி அணி 23.5 ஓவர்களில் 1௦9 ஓட்டங்களுக்கே சுருண்டது.

ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து செல்ல, தனியொருவராக துடுப்பாடிய சமோத் விக்ரமசூரிய நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச்சதம் கடந்தார். இறுதியில் அவர் 6௦ ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார்.

மறு முனையில், ஜோசப் வாஸ் அணி சார்பாக சொஹான் அனுருத்த 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன் பின்னர் முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய ஜோசப் வாஸ் அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது 56 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை பெற்றுள்ளது.

எனவே அவ்வணி, 13௦ ஓட்டங்களுடன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கின்றது. அதற்காக அணிக்கு வலு சேர்த்த அஞ்சன ருக்மால் 64 ஓட்டங்களையும், நிரஞ்சன் ரொட்ரிகோ ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி : 109 (23.5) – சமோத் விக்கிரமசூரிய 60, சொஹான் அனுருத்த 3/34

புனித ஜோசப் வாஸ் கல்லூரி : 239/8 (56) – அஞ்சன ருக்மால் 64, நிரஞ்சன் ரொட்ரிகோ 40*, கிஹான் அபேரத்ன 33, சந்தருவன் பெர்னாண்டோ 21, சசிக்க லியனகே 3/19

இந்த அனைத்து போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் நானை தொடரும்