பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் சமநிலையில் நிறைவுற்றுள்ளன.
புனித தோமியர் கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி
இன்றைய இரண்டாவது நாளில், 3 விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களை பெற்றிருந்தவாறு தமது முதல் இன்னிங்சிற்கான ஆட்டத்தினை தொடர்ந்த நாலந்த கல்லூரி அணியினர், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.
அவ்வணிக்காக ஏனையோர் பொறுப்பாக ஆடவில்லை எனினும் நேற்றிலிருந்து சிறப்பாக செயற்பட்டிருந்த லக்ஷித ரஞ்சன இன்று அரைச்சதம் கடந்து 84 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் தோமியர் கல்லூரியின் பவித் ரத்நாயக்க 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
அதன் பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த தோமியர் கல்லூரி, ரவிந்து கொடித்துவக்கு பெற்றுக்கொண்ட அரைச்சதத்தின் (55) உதவியுடன் 131 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது, தமது ஆட்டத்தினை நிறுத்திக் கொண்டது. பந்து வீச்சில் இன்றும் சிறப்பாக செயற்பட்டிருந்த லக்ஷித ரஞ்சன வெறும் 13 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இந்த இன்னிங்சில் கைப்பற்றியிருந்தார்.
பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 229 ஓட்டங்களினை பெற களமிறங்கிய நாலந்த கல்லூரி அணி, இன்றைய ஆட்ட நேர நிறைவு வரை 4 விக்கெட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றது.
இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. இன்றைய ஆட்டநேர நிறைவின் போது நாலந்தவின் அவிஷ்க பெரேரா 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்த அதேவேளை, தோமியர் கல்லூரிக்காக பவித் ரத்நாயக்க இரண்டு விக்கெட்டுக்களை இந்த இன்னிங்சிலும் கைப்பற்றியிருந்தார்.
முன்னதாக, துடுப்பெடுத்தாடியிருந்த தோமியர் கல்லூரி அணி, தமது முதல் இன்னிங்சுக்காக 263 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
புனித தோமியர் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 263 (74), ரொமேஷ் நல்லெப்பெரும 73, தினுர குணவர்தன 63, லக்ஷித ரசன்ஞன 6/76
நாலந்த கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 166 (55.5), லக்ஷித ரசஞ்சன 84, கலன பெரேரா 29, பவித் ரத்னநாயக்க 5/56
புனித தோமியர் கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 131/5d (41), ரவிந்து கொடித்துவக்கு 55, லக்ஷித ரசன்ஞன 4/13
நாலந்த கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 91/4 (24), அவிஷ்க பெரேரா 33*, பவித் ரத்னநாயக்க 2/25
போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது. புனித தோமியர் கல்லூரியிற்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி
றிச்மன்ட் கல்லூரி எதிர் திரித்துவக் கல்லூரி, கண்டி
காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நேற்று ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 92 ஓட்டங்களுடன் இருந்த திரித்துவக் கல்லூரி அணி, இன்று தனது முதலாவது இன்னிங்சினை தொடர்ந்தது.
இதில் திரேவோன் பெர்சிவேல் ஆட்டமிழக்காமல் விளாசிய சதத்தின்(100*) துணை மற்றும் பானுகோபன் பெற்றுக்கொண்ட 80 ஓட்டங்களின் துணை ஆகியவற்றால், திரித்துவக் கல்லூரி அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 348 ஓட்டங்களை குவித்துக்கொண்டது. இந்நிலையில் தமது முதலாம் இன்னிங்சினை திரித்துவக் கல்லூரி அணியின் தலைவர் நிறுத்தினார்.
பந்து வீச்சில் றிச்மன்ட் கல்லூரி அவ்வளவு பெரிதாக சாதிக்கவில்லை. எனினும் அவ்வணிக்காக ரவிஷ்க விஜயசிரி 124 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
இதனையடுத்து, 125 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த காலி றிச்மன்ட் கல்லூரி அணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 55 ஓட்டங்களினை பெற்றிருந்தபோது இறுதி நாளான இன்றைய ஆட்ட நேரம் நிறைவுற்றது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.
இரண்டாவது இன்னிங்சில் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த சனோகீத் சன்முகநாதன் 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது, றிச்மண்ட் கல்லூரி அணி 223 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டிருந்தது.
போட்டியின் சுருக்கம்
றிச்மன்ட் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 223 (67.5), சமிக்கர ஹேவகே 57, அவிந்து தீக்ஷன 56, விமுக்தி நெத்துமல் 5/55, சனோகீத் சண்முகநாதன் 2/53
திரித்துவ கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 348/8d (102), திரேவன் பெர்சிவேல் 100*, P பானுகோபன் 80, ஹசிந்த ஜயசூரிய 39, ரவிஷ்க ஜயசூரிய 4/124
றிச்மன்ட் கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 55/3 (19), சமிகர ஹேவகே 37*, சனோகீத் சண்முகநாதன் 2/03
போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது, திரித்துவ கல்லூரி அணிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி
வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி எதிர் புனித ஏன்ஸ் கல்லூரி
குருநாகல் புனித ஏன்ஸ் கல்லூரியும், வத்தளை புனித அந்தோனியர் கல்லூரியும் மோதிக்கொண்ட இப்போட்டியானது, மலியதேவ மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித அந்தோனியர் கல்லூரி அணி, முதலில் துடுப்பெடுத்தாடி 75.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 176 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது.
அவ்வணிக்காக அதிகபட்சமாக அவிஷ்க தரிந்து 63 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டிருந்த இவ்வேளையில், புனித ஏன்ஸ் கல்லூரிக்காக ஆடியிருந்த புபுது கனேகம மற்றும் பியுமல் சிங்கவன்ஷ ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த புனித ஏன்ஸ் கல்லூரி அணியினர், இன்றைய ஆட்ட நேர நிறைவு வரை 3 விக்கெட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டிருந்தனர்.
போட்டிச் சுருக்கம்
புனித அந்தோனியர் கல்லூரி: 176 (75.4), அவிஷ்க தரிந்து 63, ஜோயேல் பின்டோ 39, பியுமல் சிங்கவன்ஷ 4/47, புபுது கனேகம 4/65
புனித ஏன்ஸ் கல்லூரி: 46/3 (17), வனிதா வன்னியன்கே 25*
போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.
றோயல் கல்லூரி எதிர் புனித அந்தோனியர் கல்லூரி, கண்டி
இன்று கண்டி புனித அந்தோனியர் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட றோயல் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தினைதெரிவு செய்தது.
இதன்படி களமிறங்கிய றோயல் கல்லூரி அணி, எதிரணியின் பந்து வீச்சாளர்களின் அபாரம் காரணமாக ஓட்டங்களை சேர்ப்பதில் இன்னல்களை அனுபவித்தது. இதனால் பலம் மிக்க பாடசாலை அணிகளில் ஒன்றான றோயல் கல்லூரி, 56.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 190 ஓட்டங்களினை மாத்திரம் முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டது.
றோயல் கல்லூரி சார்பாக தேவிந்து சேனாரத்ன மாத்திரம் 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில், றோயல் கல்லூரிக்கு அச்சுறுத்தலாக இருந்த சந்தருவன் தர்மரத்ன 4 விக்கெட்டுக்களையும், விராஜித ஜயசிங்க 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
அடுத்தாக, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த புனித அந்தோனியர் கல்லூரி அணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 95 ஓட்டங்களினை இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது பெற்றிருந்தது. இன்றைய ஆட்ட நேர நிறைவு வரை அந்தோனியர் கல்லூரிக்காக சுனேர ஜயசிங்க 46 ஓட்டங்களினை ஆட்டமிழக்காமல் பெற்று களத்தில் இருந்தார்.
போட்டி சுருக்கம்
றோயல் கல்லூரி: 190 (56.3), தேவிந்து சேனாரத்ன 33, கவிந்து மதுரசிங்க 32, சந்தருவன் தர்மரத்ன 4/57, விராஜ ஜயசிங்க 3/35
புனித அந்தோனியர் கல்லூரி: 95/4 (38), சுனேர ஜயசிங்க 46*
போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்