நவீன் குணவர்தன 10 விக்கெட்டுகள்: தர்ஸ்ட்டன் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

1038
Naveen Gunawardena

19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரில் இன்று நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றில் குருகுல கல்லூரி இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்துள்ளதுடன், மற்றைய போட்டிகளில் ஆனந்த கல்லூரி, மாரிஸ் ஸ்டெல்லா ஆகிய கல்லூரிகள் வெற்றிபெற்றிருக்கும் இந்நிலையில், தர்ஸ்டன் கல்லூரிக்கும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரிக்கும் இடையிலான போட்டி சமநிலையில் நிறைவுற்றுள்ளது.

ஸாஹிரா கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

நேற்று ஆரம்பமாகியிருந்த இந்த போட்டியில், ஸாஹிரா கல்லூரி அணி 117 ஓட்டங்களுடன்  தமது முதல் இன்னிங்சினை நிறைவு செய்து கொண்ட பின்னர் துடுப்பெடுத்தாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களினை பெற்றிருந்த போது நேற்றைய போட்டியின் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.

பின்னர், இன்று தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியினர், இன்றைய நாளில் 28 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 9 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களினை பெற்றிருந்தவாறு தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டனர். மொஹம்மட் மஹ்தி 49 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை ஸாஹிரா கல்லூரி அணி சார்பாக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், ஸாஹிரா கல்லூரி, ஏனைய வீரர்கள் பெரிதாக பிரகாசிக்காத நிலையில் மொஹமட் ஸக்கி பெற்றுக்கொண்ட 39 ஓட்டங்களுடன், தமது இரண்டாவது இன்னிங்சிற்காக 45 ஓவர்களிற்கு 113 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது. இவ்வேளையில் பந்து வீச்சில் ஸாஹிராவிற்கு அச்சுறுத்தல் ஆக இருந்த, வலது கை சுழற்பந்து வீச்சாளர் ரவிந்து பெர்னாந்து 31 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுகளை பதம் பார்த்திருந்தார்.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 101 ஓட்டங்களினை பெறுவதற்கு களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா அணியினை, மீண்டும் மஹ்தி பந்து வீச்சில் மிரட்டியிருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் அவ்வணி 77 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஏனைய வீரர்களின் முயற்சியினால் மாரிஸ் ஸ்டெல்லா 42.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கினை அடைந்தது. இன்றைய போட்டியில் மீண்டும் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட மொஹமட் மஹ்தி 38 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இவ்வேளையில், சசிந்து கொலம்பகே 35 ஓட்டங்களை பெற்று மாரிஸ் ஸ்டெல்லா அணியின் வெற்றிக்கு வழிவகுத்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 117 (48.2) – முஹம்மட் ஷமாஷ் 37, முஹம்மட் நகாஷ் 35, சங்க பூர்ன 5/15, பசிந்து மாதவ 3/30

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 130/9d (38.5) – லசித் குருஸ்புள்ளே 50, ரொஷன் பெர்னாந்து 45, மொஹமட் மஹ்தி 5/49, சஜித் சமீர 2/35

ஸாஹிரா கல்லூரி அணி(இரண்டாவது இன்னிங்ஸ்): 113 (45) – முஹம்மட் ஸக்கி 39, ரவிந்து பெர்னாந்து 6/31

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி(இரண்டாவது இன்னிங்ஸ்): 102/6 (42.5) – சசிந்து கொலம்பகே 35, மொஹமட் மஹ்தி 5/38

போட்டி முடிவு – மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 4 விக்கெட்டுகளால் வெற்றி


குருகுல கல்லூரி எதிர் மொரட்டுவை வித்தியாலயம்

மொரட்டுவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில், தேஷன் மலிந்த ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட சதத்தின் துணையுடன்(103), குருகுல கல்லூரி 7 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களினைப் பெற்று தமது முதல் இன்னிங்சினை நேற்றைய ஆட்ட நிறைவில் நிறுத்திக்கொண்டது.

இதனையடுத்து, 163 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இன்று தமது இரண்டாவது இன்னிங்சினை தொடர்ந்த மொரட்டுவ கல்லூரி அணி, ஆரம்பம் முதல் தடுமாறி, 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களினைப் பெற்று 67 ஓட்டங்களினால் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக நிஷன் மதுஷ்க மாத்திரம் 32 ஓட்டங்களை குவித்த இவ்வேளையில், துஷான் மலித் குருகுல கல்லூரி சார்பாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

முன்னதாக, மொரட்டுவை வித்தியாலய அணி தமது முதல் இன்னிங்சிற்காக 78 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

மொரட்டு வித்தியாலயம்(முதல் இன்னிங்ஸ்): 78 (22.4) – இசுரு உதயங்க 25, மலிந்து விதுரங்க 4/30, பிரவின் நிமேஷ் 3/29

குருகுல வித்தியாலயம்(முதல் இன்னிங்ஸ்): 241/7d (67)- தேஷான் மலிந்த 103*, லசிந்து அரோஷ 62, ஷெஹான் ஜீவன்த்ஸ் 2/50

மொரட்டு வித்தியாலயம்(இரண்டாவது இன்னிங்ஸ்): 96 (49.1) – நிஷான் மதுசங்க 32, துஷான் மலித் 3/07

போட்டி முடிவு – குருகுல வித்தியாலயம் இன்னிங்ஸ் மற்றும் 67 ஓட்டங்களினால் வெற்றி


ஆனந்த கல்லூரி எதிர் தர்மபால கல்லூரி

இன்று, 190 ஓட்டங்களுடன் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்திருந்தவாறு தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த ஆனந்த கல்லூரி அணி, 27.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களினை பெற்ற போது தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது. அவ்வணி சார்பாக நேற்று அதிரடியாக ஆடிய சஹான் சூரவீர 109 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இன்று ஆனந்த கல்லூரியில் பறிபோன விக்கெட்டினை தர்மபால கல்லூரியின் மஹிம வீரக்கோன் கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை தொடர்ந்த தர்மபால கல்லூரி அணி, இன்னிங்ஸ் தோல்வியினை தழுவும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த போதும் கனிஷ்க ஜயசுந்தரவின் (32) ஓரளவு சிறப்பான ஆட்டத்துடன் 44.2 ஓவர்களில் 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, ஆனந்த கல்லூரியினைவிட 1 ஓட்டம் முன்னிலை வகித்தது. ஆனந்த கல்லூரி அணி சார்பாக இன்றைய நாளில் பிரமோத் பெரேரா மற்றும் கவிஷ்க அஞ்சுல ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், வெற்றி இலக்கான இரண்டு ஓட்டங்களை பெற களமிறங்கிய ஆனந்த கல்லூரி அணி, போட்டியின் இரண்டாவது பந்தில் பவுண்டரி ஒன்றினை விளாசி வெற்றியிலக்கினை அடைந்து கொண்டது.

ஏற்கனவே, தர்மபால கல்லூரி அணி திலீப ஜயலத்தின் அபார பந்து வீச்சினால் தமது முதல் இன்னிங்சிற்காக  98 ஓட்டங்களுடன் மடக்கப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 98 (59) – அமில தயன்க 21, திலீப ஜயலத் 5/16

ஆனந்த கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 229/4d (27.3) – சஹான் சூரவீர 109, கவிந்து கிம்ஹான 63, கவிஷ்க அஞ்சுல 41, சமிந்து சமரசிங்க 2/07

தர்மபால கல்லூரி அணி(இரண்டாவது இன்னிங்ஸ்): 132 (44.2) – கனிஷ்க ஜயசுந்தர 33, பிரமோத் பெரேரா 2/07, கவிஷ்க அஞ்சுல 2/20

ஆனந்த கல்லூரி அணி(இரண்டாவது இன்னிங்ஸ்): 4/0 (0.2)

போட்டி முடிவு – ஆனந்த கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி


தர்ஸ்ட்டன் கல்லூரி எதிர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி

தர்ஸ்ட்டன் கல்லூரி அணி, சரண நாணயக்கார பெற்றுக்கொண்ட சதத்துடன் (108) 8 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களிற்கு தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டு, பின்னர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி அணி 4 ஓட்டங்களினை பெற்றிருந்தவாறு நேற்றைய ஆட்டம் நிறைவிற்கு வந்திருந்தது.

பின்னர், இன்று தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் தர்ஸ்ட்டன் கல்லூரி அணியின் இடது கை சுழல் பந்து வீச்சாளர் நவீன் குணவர்த்தனவின் சுழலில் ஆட்டமிழக்க, 51.5  ஓவர்களில் டி.எஸ் சேனநாயக்ட கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சிற்காக பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக துடுப்பாட்டத்தில், செஷாட் அமீன் மாத்திரம் 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை தொடர்ந்த தர்ஸ்ட்டன் கல்லூரி அணி, இமேஷ் விரங்கவின் அரைச்சதத்துடன்(51), 40 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களினை பெற்றிருந்த போது, இன்றைய போட்டியின் ஆட்ட நேரம் நிறைவடைந்தது இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற முதல் இன்னிங்ஸ் புள்ளிகள் அடிப்படையில் தர்ஸ்ட்டன் கல்லூரி அணி வெற்றிபெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்ட்டன் கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 206/8d (72.4) – சரண நாணயக்கார 108, சவன் பிரபாஷ் 23, டில்சான் லஹீர் 3/47

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 125 (51.5) – செஷாட் அமீன் 33, முதித லக்ஷன் 32, நவீன் குணவர்த்தன 10/36

தர்ஸ்ட்டன் கல்லூரி அணி(இரண்டாவது இன்னிங்ஸ்): 146/4 (40) – இமேஷ் விரங்க 51, யெஷான் விக்கிரமராச்சி 31*, தில்ஷான் லஹீர் 2/37, விஹான் குணசேகர 2/37

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது, தர்ஸ்ட்டன் கல்லூரி அணிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி