19 வயதுக்கு உட்டபட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரில், இன்று நிறைவடைந்த அனுராதபுர மத்திய மகாவித்தியாலம் மற்றும் கொழும்ப் புனித தோமியர் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டியில், பவித் ரத்னநாயக்க மற்றும் டிலோன் பீரிஸ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சின், மூலம் அனுராதபுர மத்திய கல்லூரி அணியினை இன்னிங்ஸ் மற்றும் 94 ஓட்டங்களால் புனித தோமியர் கல்லூரி அணி தோற்கடித்து வெற்றிவாகை சூடியுள்ளது.
அனுராதபுர மத்திய கல்லூரி எதிர் கொழும்பு புனித தோமியர் கல்லூரி
தமது முதல் இன்னிங்சிற்காக, நேற்றைய நாள் ஆட்ட நிறைவில் 26 ஓவர்களிற்கு 9 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை பெற்றிருந்த அனுராதபுர மத்திய கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்டத்தினை தொடர்ந்தது, இன்றைய நாளில் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் 106 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதல் இன்னிங்சினை நிறைவு செய்து கொண்டது.
பின்னர், அனுராதபுர மத்திய கல்லூரி அணி போதியளவான ஓட்டங்களை பெறாததன் காரணமாக, மீண்டும் துடுப்பெடுத்தாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது.
இதனால், தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த அனுராதபுர மத்திய கல்லூரி அணி, புனித தோமியர் கல்லூரி அணியின் பவித் ரத்னநாயக்க, மற்றும் டிலோன் பீரிஸ் ஆகியோரின் பந்து வீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல், 33.1 ஓவர்களில் 61 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இன்னிங்ஸ் மற்றும் 94 ஓட்டங்களினால் இப்போட்டியில் தோல்வியினை தழுவிக்கொண்டது.
இன்று மோசமான துடுப்பாட்டத்தினை ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வெளிக்காட்டியிருந்த நிலையில், அனுராதபுர மத்திய கல்லூரி அணியின் சார்பாக சவிந்து செத்ரச மாத்திரம் அதிகபட்சமாக 21 ஓட்டங்களினை பெற்றதோடு, பந்து வீச்சில் குறுகிய ஓட்டங்களுக்கு அனுராதபுர மத்திய கல்லூரியினை கட்டுப்படுத்த உதவியிருந்த பவித்ர ரத்னநாயக்க 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், டிலோன் பீரிஸ் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் புனித தோமியர் கல்லூரி சார்பாக கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
புனித தோமியர் கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 261(65.1) – துலித் குணரத்ன 82, ரொமேஷ் நல்லப்பெரும 69, ரவிந்து கொடிதுவக்கு 28, ரவிந்த பிரபாஸ்வர 7/76, தனன்ஞய தம்விட்ட 2/28
அனுராதபுர மத்திய கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 106/10(29.1) – திலான் லக்ஷித 27, மதுரங்க சந்தரரத்ன 31, கலன பெரேரா 4/16, தினுர குணவர்த்தன 2/12, டிலோன் பீரிஸ் 2/36
அனுராதபுர மத்திய கல்லூரி(இரண்டாம் இன்னிங்ஸ் f/o): 61/10(33.1) – சவிந்து செத்ரச 21, பவித் ரத்னநாயக்க 5/23, டிலோன் பீரிஸ் 4/19
போட்டி முடிவு – புனித தோமியர் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 94 ஓட்டங்களால் வெற்றி.
ஆனந்த கல்லூரி எதிர் தர்மசோக கல்லூரி அணி
நேற்று ஆரம்பமாகிய, இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தர்மசோக கல்லூரி அணி 156 ஓட்டங்களுடன் ஏற்கனவே தமது முதல் இன்னிங்சினை முடித்துக்கொண்ட நிலையில், பின்னர் தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த ஆனந்த கல்லூரி அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் நேற்றைய போட்டியின் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து, இன்றைய இரண்டாவது நாளில் தமது முதலாவது இன்னிங்சினை தொடர்ந்த ஆனந்த கல்லூரி அணி, சுப்புன் வரகொடவின் சதத்துடன்(100) 69.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களை பெற்ற வேளையில் தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது.
பந்து வீச்சில், தர்மசோக கல்லூரி சார்பாக லசித் குமார 3 விக்கெட்டுகளையும், உஷான் இமன்த, நிமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த தர்மசோக கல்லூரி அணி, 89.1 ஓவர்களில் 246 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது இரண்டாவது இன்னிங்சினை நிறைவு செய்த போது, இன்றைய நாளிற்குரிய ஆட்ட நேரமும் நிறைவிற்கு வந்தது, இதன் காரணமாக, இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.
துடுப்பாட்டத்தில், தர்மசோக கல்லூரி சார்பாக நிமேஷ் மென்டிஸ், சுபாஷ் லசங்க, ஹர்சஜித் ருஷான் ஆகியோர் அரைச்சதம் கடந்து முறையே 79, 62, 67 ஆகிய ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில், ஆனந்த கல்லூரி அணி சார்பாக இன்று ஏற்கனவே துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்டு பந்து வீச்சிலும் சிறப்பாக செயற்பட்ட அசல் சிகர 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, சம்மு அஷான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
போட்டியின் சுருக்கம்
தர்மசோக கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 156(44.2) – கவீஷ் குமார 48, ஹர்சஜித் ருஷான் 31, அசல் சிகர 4/12, சம்மு அஷான் 3/64
ஆனந்த கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 260/8d (69.1) – சுப்புன் வரகொட 100, அசல் சிகர 91, லசித் குமார 3/44, உஷான் இமன்த 2/92, நிமேஷ் மெண்டிஸ் 2/68
தர்மசோக கல்லூரி அணி(இரண்டாவது இன்னிங்ஸ்): 246(89.1) – நிமேஷ் மெண்டிஸ் 79, ஹர்சஜித் ருஷான் 67, அசல் சிகர 5/32
போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது, ஆனந்த கல்லூரி அணிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி.
ஸாஹிரா கல்லூரி எதிர் அலோசியஸ் கல்லூரி
ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய, மற்றுமொரு டிவிஷன் I இற்குரிய போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அலோசியஸ் கல்லூரி அணித் தலைவர் நவிந்து நிர்மல் முதலில், துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதன்படி, களமிறங்கிய அலோசியஸ் கல்லூரி அணி, 68.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 165 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சிற்காக பெற்றுக்கொண்டது.
அலோசியஸ் கல்லூரி சார்பாக, அதிகபட்சமாக பசிந்து நாணயக்கார அரைச்சதம் கடந்து 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில், சாஹிர கல்லூரி அணியின் நட்சத்திர வீரர், சஜித் சமீர 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது சிறப்பான பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்தார்.
இதனையடுத்து, தமது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, இன்றைய போட்டியின் ஆட்ட நேரம் முடிவிற்கு வந்தது.
இதனால், அலோசியஸ் கல்லூரியைவிட 98 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஸாஹிரா கல்லூரி இருக்கின்றது.
பந்து வீச்சில் இன்றைய ஆட்ட நிறைவு வரை அலோசியஸ் கல்லூரி சார்பாக நிதுக்க மல்சித் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
அலோசியஸ் கல்லூரி அணி: 165 (68.5) – பசிந்து நாணயக்கார 64, கிம்ஹான ஆசிர்வாத 27, சஜித் சமீர 5/42
ஸாஹிர கல்லூரி அணி: 67/5 (24) – நிதுக்க மாலிஷ் 3/24
போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.