மகத்தான வெற்றியை சுவைத்த நாலந்த கல்லூரி

449
Singer U19 Cricket

இன்று  நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், அவிஷ்க பெரேரா மற்றும் லசித்த ரன்ஜன ஆகியோரின் சிறப்பான ஆட்டத்துடன், நாலந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 37 ஓட்டங்களால் பன்னிபிடிய தர்மபால கல்லூரி அணியினை வீழ்த்தி வெற்றியினை சுவைத்துள்ளது.

நாலந்த கல்லூரி எதிர் தர்மபால கல்லூரி

ஆறு விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தினை தர்மபால கல்லூரி அணி தொடர்ந்தது. மஹிம வீரக்கோன் அரைச்சதம் கடந்து பெற்ற 60 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்சிற்காக 60.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து அவ்வணி 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.  

இவ்வணியினை குறைவான ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்த உதவிய லசித்த ரஞ்சன 5 விக்கெட்டுக்களை நாலந்த கல்லூரி சார்பாக கைப்பற்றி தனது சிறந்த பந்து வீச்சினை வெளிப்படுத்தினார்.

தர்மபால கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் போதாது என்பதால், பலோவ் ஒன் முறையில் துடுப்பெடுத்தாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், இரண்டாவது இன்னிங்சினை மீண்டும் தொடர்ந்த தர்மபால கல்லூரி 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சுருண்டது. இதன் காரணமாக அவ்வணி இன்னிங்ஸ் மற்றும் மேலதிக 39 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.

தர்மபால கல்லூரி சார்பாக, இன்றைய துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக கனிஷ்க ஜயசுந்தர 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில், குறுகிய ஓட்டங்களுக்குள் தர்மபால கல்லூரி அணியினை கட்டுப்படுத்த உதவியிருந்த சுஹங்க விஜயவர்தன 3 விக்கெட்டுக்களை நாலந்த கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 307/6 dec (65) – அவிஸ்க பெரேரா 109, தசுன் செனவிரத்ன 48, கசுன் சந்தருவன் 45*,  மலிங்க அமரசிங்க 35, மஹிம வீரக்கோன் 3/89

தர்மபால கல்லூரி அணி(முதல் இன்னிங்ஸ்): 162/10 (60.2) – மஹிம வீரக்கோன் 60, லசித்த ரஞ்சன 5/37, கலன பெரேரா 2/39, மலிங்க அமரசிங்க 2/35

தர்மபால கல்லூரி அணி(இரண்டாவது இன்னிங்ஸ்): 108/10(47.3) – கனிஷ்க ஜயசுந்தர 39, சுஹங்க விஜயவர்த்தன 3/9, மதுசான் ஹஸரங்க 2/27, கலன பெரேரா 2/27

போட்டி முடிவு – நாலந்த கல்லூரி 37 ஓட்டங்களால் வெற்றி


ஆனந்த கல்லூரி எதிர் தர்மசோக கல்லூரி

இத்தொடரின் மற்றுமொரு போட்டியாகிய இதில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆனந்த கல்லூரியின் தலைவர் கவிஷ்க அஞ்சுல தர்மசோக கல்லூரிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை வழங்கினார். இதன்படி, களமிறங்கிய தர்மசோக கல்லூரி அணி, 44.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்சிற்காக 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில், தர்மசோக கல்லூரி சார்பாக கவிஷ் குமார 48  ஓட்டங்களை பெற்ற அதேவேளை, தமது சுழல் மூலம் சிறப்பான பந்து வீச்சினை காண்பித்த அஷல் சிகெர, சம்மு அஷான் ஆகியோர் தர்மசோக கல்லூரியின் முக்கிய ஆட்டக்காரர்களை குறுகிய ஓட்டங்களுக்குள் மடக்க உதவியிருந்தனர்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த ஆனந்த கல்லூரி அணி அஷல் சிகெரவின் சிறப்பான 91 ஓட்டங்கள் மற்றும் சுபுன் வரகொடவின் 82 ஓட்டங்களுடன் இன்றைய ஆட்ட நேர நிறைவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்றைய பந்து வீச்சில், தர்மசோக கல்லூரி சார்பாக சிறப்பாக செயற்பட்ட லசித் குமார 29 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

தர்மசோக கல்லூரி அணி: 156/10(44.2) கவீஷ் குமார 48, ஹர்ஷஜித் ருசான் 31, ரவிந்து ரசந்த 20, அசல் சிகெர 4/12, சம்மு அஷான் 3/64

ஆனந்த கல்லூரி அணி: 219/7(55),  சுபுன் வரகொட 82*, அசலு சிகெர 91, லசித் குமார 3/29, உசான் இமான்த 2/80

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்


புனித தோமியர் கல்லூரி எதிர் அநுராதபுர மத்திய கல்லூரி

தோமியர் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அனுராதபுர மத்திய கல்லூரி அணியின் தலைவர், முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை புனித தோமியர் கல்லூரிக்கு வழங்கினார்.

இதன்படி களமிறங்கிய தோமியர் கல்லூரி அணி, துலித் குணரத்ன அரைச்சதம் கடந்து பெற்ற 82 ஓட்டங்களின் உதவியுடன்  தமது முதல் இன்னிங்சிற்காக 261 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.  மறுமுனையில் தனது பந்து வீச்சில் முழுத் திறமையினையும் வெளிக்காட்டியிருந்த அனுராதபுர மத்திய கல்லூரியின் ரவிந்த பிரபேஷ்வர 7 விக்கெட்டுக்களை தனது கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், அனுராதபுர மத்திய கல்லூரி அணி வீரர்கள் தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி, 9 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களினை பெற்றபோது இன்றைய ஆட்ட நேரம் முடிவிற்கு வந்தது.

இன்றைய ஆட்டத்தில், அனுராதபுர மத்திய கல்லூரி சார்பாக ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சொதப்பிய நிலையில், தில்ஷான் லக்சித மாத்திரம் அதிகபட்சாமக 27 ஓட்டங்களினை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட கலன பெரேரா 3 விக்கெட்டுக்களை தோமியர் கல்லூரி சார்பாக கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி அணி: 261/10(65.1), துலித் குணரத்ன 82, ரொமேஷ் நல்லபெரும 69, ரவிந்து கொடித்துவக்கு 28, ரவிந்த பிரபாஸ்வர 7/76, தனஞ்சய தம்வித்த 2/28

அனுராதபுர மத்திய கல்லூரி அணி: 106/9(26), தில்ஷான் லக்சித 27*, மதுரங்க சந்தரரத்ன 25*, கலன பெரேரா 3/16, தினுர குணவர்த்தன 2/12

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்