2016/17ஆம் ஆண்டுக்கான 19 வயதுகுட்டபட்ட சிங்கர் கிண்ண, டிவிசன் 1 போட்டிகளில் குருநாகல மலியதேவ கல்லூரி மற்றும் மகாநாம கல்லூரிகள் முதல் இன்னிங்ஸ் வெற்றியினை பதிவு செய்தன.
மகாநாம கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி
ப்ளூம் பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வலிமைமிக்க ஆனந்த கல்லூரியை, மாஹாநாம கல்லூரி அணித் தலைவர் மலிந்து மதுரங்க மற்றும் பவன் ரத்னாயக்க ஆகிய இருவரின் சதத்தின் உதவியுடன் முக்கியமான முதல் இன்னிங்சில் வெற்றி கொண்டது.
வலது கை துடுப்பாட்ட வீரர் மலிந்து மதுரங்க 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 101 பந்துகளுக்கு முகம்கொடுத்து 112 ஓட்டங்களை விளாசினார். அதே நேரம், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவன் ரத்னாயக்க ஆட்டமிழக்காமல் 414 நிமிடங்கள் களத்தில் நின்றதோடு 374 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். தனது சொந்த மைதானத்தில் விளையாடிய மகாநாம கல்லூரி 7 விக்கெட் இழப்பிற்கு 409 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தமது துடுப்பாட்டத்தினை இடைநிறுத்தியது.
அதற்கு முதல்நாள், ஆனந்த கல்லூரி 217 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. இடது கை துடுப்பாட்ட வீரர் சஹான் சுரவீர மற்றும் அனுபவ வீரர் சம்மு அஷான் ஆகியோர் அதிரடியாக அரைச்சதங்களை விளாசியிருந்தனர். நேற்றைய ஆட்ட நேர நிறைவின் போது இரண்டாம் இன்னிங்சுக்காக ஆனந்த கல்லூரி 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. மீண்டுமொருமுறை சிறப்பாக துடுப்பாடிய சம்மு அஷான் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்.
போட்டியின் சுருக்கம்
ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 217 (58) – சஹன் சுரவீர 55, சம்மு அஷான் 50, அஷான் பியுமல் 2/40, மஹேல டி சில்வா 2/44.
மகாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 409/7d (130.3) – மலிந்து மதுரங்க 111, பவன் ரத்நாயக்க 102 *, எஷான் நிலக 99, கவிந்து முனசிங்க 48, அசேல் சிகேரா 3/28
ஆனந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 63/3 (14) சம்மு அஷான் 34.
மலியதேவ கல்லூரி எதிர் பண்டாரநாயக்க கல்லூரி கம்பஹா
மலியதேவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி மற்றும் மலியதேவ கல்லூரியினதும் அணித் தலைவர் தமித் சில்வா சகல துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்த, அவ்வணி பண்டாரநாயக்க கல்லூரி அணியை முதல் இன்னிங்சில் வெற்றி கொண்டது.
இடது கை துடுப்பாட்ட வீரர் தமித் சில்வா 10 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 109 பந்துகளில் 108 ஓட்டங்களை விளாசிய அதேநேரம், முதல் நாள் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி பண்டாரநாயக்க கல்லூரியை 19௦ ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினார். பண்டாரநாயக்க அணி சார்பாக அணித் தலைவர் சசிரி அதிகாரி மற்றும் ஹசித்த தாமல் ஆகியோர் அரைச் சதங்களை பெற்றுக்கொண்டனர்.
3௦௦ ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தினை இடைநிறுத்திய மலியதேவ அணி, பண்டாரநாயக்க அணியை துடுப்பாடுமாறு பணித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பண்டாரநாயக்க அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இறுதிவரை சிறப்பாக துடுப்பாடிய சிசித மதனாயக்க ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அதேவேளை, தமித் சில்வா 76 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
பண்டாரநாயக்க கல்லூரி – 190 (43.3) : ஹசித தாமல் 67, சசிரி அதிகாரி 61, தமித சில்வா 4/49, சஞ்ஜீவன் பிரியதர்ஷன 2/24.
மலியதேவ கல்லூரி – 300/9 d (64): தமித சில்வா 108, துலாஜ் ரணதுங்க 62, தனன்ஜய பிரேமரத்ன 33, தில்ஷான் கொல்லூர் 29, அரோஷ மதுஷான் 2/32, ஜனிந்து ஜயவர்தன 2/33, இமத் ஜயவீர 2/59.
பண்டாரநாயக்க கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 164 (41.3): சிசித மதநயக்க 77*, தமித சில்வா 5/76, சஜீவன் பிரியதர்சன 2/19.
புனித பேதுரு கல்லூரி எதிர் புனித மரியார் கல்லூரி, கேகாலை
கம்பஹா, விக்ரமபா மைதானத்தில் A பிரிவிற்காக இடம்பெற்ற இப்போட்டியில், முதலாம் நாளில் மிப்ளால் அமீன், சதுரங்க ஒபேசேகர மற்றும் சச்சின் சில்வாவின் சிறந்த பந்து வீச்சின் காரணமாக மரியார் கல்லூரி 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பை தெரிவு செய்த புனித பேதுரு கல்லூரி சிறப்பான சுழல்பந்து வீச்சின்மூலம் எதிரணியின் 10 விக்கெட்டுக்களையும் மிக வேகமாக வீழ்த்தியது. இடதுகை சுழல்பந்து வீச்சாளர் மிப்ளால் அமீன் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அதேநேரம் சதுரங்க ஒபேசேகர மற்றும் சச்சின் சில்வா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பாடிய பேதுரு கல்லூரி, முதல் நாள் ஆட்ட நேர நிறைவின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 98 ஓட்டங்களை பெற்றிருந்தது. சிறப்பாக துடுப்பாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்தோஷ் 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த அதேநேரம், சலித் பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
புனித மரியார் கல்லூரி – 151 (50.4): கஜித கோட்டவேகோட 33, மிப்ளால் அமீன் 4/41, சத்துர சதுரங்க ஒபேசகர 3/46, சச்சின் சில்வா 3/19.
புனித பேதுரு கல்லூரி – 98/3 (34.5) : சந்தோஷ் குணதிலக 28, சலித் பெர்னாண்டோ 46 *