கஜன், நியூட்டனின் பிரகாசிப்புகளுடன் இறுதிப்போட்டியில் யாழ். மத்தி!

U19 Schools Cricket 2022

722
U19 Schools Cricket 2022

பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் டிவிஷன் 3 ஐம்பது ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி அணி தகுதிபெற்றுள்ளது.

அரையிறுதிப்போட்டியில், மதுகம சென்.மேரிஸ் கல்லூரியை எதிர்த்தாடிய மத்தியக் கல்லூரி அணி ஆனந்தன் கஜனின் மற்றும் ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகியோரின் பிரகாசிப்புகளின் உதவியுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது.

>> ஆஸி.யின் இலங்கை சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா?

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.மேரிஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் அடிப்படையில் களமிறங்கிய சென்.மேரிஸ் கல்லூரி அணி, அணித்தலைவர் ஹிமேஷ மதுபஷனாவின் அரைச்சதம் மற்றும் யசித சத்சரவின் நிதானமான ஆட்டத்துடன் 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சென்.மேரிஸ் அணியை பொருத்தவரை ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்களுக்கும் இடையில் சிறந்த இணைப்பாட்டங்கள் பெறப்பட்டிருந்த போதும், வேகமாக ஓட்டங்களை குவிக்க தவறியதால் அவர்களால் பாரிய ஓட்ட எண்ணிக்கையை அடையமுடியவில்லை. இதில் யசித மற்றும் ஹிமேஷ ஆகியோர் 5வது விக்கெட்டுக்காக 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பகிர்ந்திருந்தனர்.

யாழ். மத்தியக் கல்லூரியின் பந்துவீச்சை பொருத்தவரை, ரஞ்சித்குமார் நியூட்டன் 4 விக்கெட்டுகளையும், சுதர்ஷன் அனுசாந்த் மற்றும் ஜெயதீஷ்வரன் விதுசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்தியக் கல்லூரி அணிக்கு நியூட்டன் சிறந்த ஆரம்பத்தை கொடுத்தாலும் விதுசன், சன்சயன், அஜய் மற்றும் சாரங்கன் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

நியூட்டன் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, 74 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த மத்தியக் கல்லூரி அணி, 5வது விக்கெட்டை 95 ஓட்டங்களுக்கு இழந்தது. எனினும் ஆனந்தன் கஜன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விநாயகசெல்வம் கவிதர்ஷன் மற்றும் சகாதேவன் சயந்தன் ஆகியோருடன் மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை கடந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

கவிதர்ஷன் மற்றும் கஜன் ஆகியோர் 6வது விக்கெட்டுக்காக 50 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், சயந்தன் மற்றும் கஜன் 7வது விக்கெட்டுக்காக 38 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். கஜன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று துடுப்பெடுத்தாடி 87 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதில், கவிதர்ஷன் 9 ஓட்டங்களையும், சயந்தன் 7 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இவ்வாறான துடுப்பாட்ட பிரகாசிப்புகளின் உதவியுடன் மத்தியக் கல்லூரி அணி 41 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவுசெய்தது. சென்.மேரிஸ் அணியின் பந்துவீச்சில் இசுரு தேஷான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்றுள்ள யாழ். மத்தியக் கல்லூரி அணி தங்களுடைய இறுதிப்போட்டியில் மொறட்டுவ மெதடிஸ்ட் உயர் கல்லூரியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

சென்.மேரிஸ் கல்லூரி – 178/10 (50), ஹிமேஷ 53, யசித 37, நியூட்டன் 32/4

யாழ். மத்தியக் கல்லூரி -183/6 (41) கஜன் 74*, நியூட்டன் 45, இசுரு 22/2

முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<