இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் டிவிஷன் 3, 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டி லா சால் கல்லூரியை எதிர்கொண்டு அபார வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி அணி காலிறுதிக்கு தகுதிபெற்றது.
நேற்று நடைபெற்ற (03) காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (இரண்டாவது சுற்று) யாழ். மத்திய கல்லூரி அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய கொக்குவில் இந்து, யாழ். மத்தி அணிகள்
அதன்படி, அவ்வணி தகுதாஸ் அபிலேஷின் 42 ஓட்டங்கள் என்ற சிறந்த ஆரம்பத்துடன் ஓட்டங்களை குவிக்கத்தொடங்கியது. இவரின் ஆரம்பத்துடன் யாழ். மத்தியக் கல்லூரி அணிக்கு தொடர்ந்தும் தங்களுடைய பிரகாசிப்புகளை வழங்கிவரும் ஆனந்தன் கஜன், ஸ்ரீதரன் சாரங்கன் மற்றும் ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகியோர் அரைச்சதங்களை விளாசினர்.
கஜன் அதிகபட்சமாக 76 ஓட்டங்களை குவிக்க, நியூட்டன் 71 ஓட்டங்களையும், சாரங்கன் 65 ஓட்டங்களையும் குவித்தனர். இவர்களின் இந்த ஓட்டக்குவிப்புகளின் பங்களிப்புடன் யாழ். மத்தியக் கல்லூரி அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களை குவித்தது. டி லா சால் கல்லூரி சார்பாக இமேஷ் பெரேரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டி லா சால் கல்லூரி அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஓரளவு ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதும், சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
மத்தியவரிசையில் ஜேரம் திலின அற்புதமாக ஆடி வெறும் 33 பந்துகளில் 50 ஓட்டங்களை குவித்த போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பின்மையால் 45.2 ஓவர்கள் நிறைவில் 187 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் தோல்வியடைந்தது.
Embed video – https://www.youtube.com/watch?v=6WjE4fCmAAQ
மத்தியக் கல்லூரியின் பந்துவீச்சில் ஆனந்தன் கஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, விநாயகசெல்வம் கவிதர்ஷன் மற்றும் ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதேவேளை, இந்த போட்டியில் 131 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்த யாழ். மத்தியக் கல்லூரி அணி தங்களுடைய காலிறுதிக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
யாழ். மத்தியக் கல்லூரி – 318/6 (50), கஜன் 76, நியூட்டன் 71, சாரங்கன் 65, இமேஷ் பெரேரா 3/63
டி லா சால் கல்லூரி – 187/10 (45.2), ஜேரம் திலின 50, கஜன் 3/21
முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி அணி 131 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<