யாழ். மத்தியின் வெற்றியை உறுதிசெய்த அனுசாந்த், கவிதர்ஷன், கஜன்

U19 Schools Cricket 2022

392

கொக்குவில் இந்துக் கல்லூரி அணிக்கு எதிராக நடைபெற்ற பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் டிவிஷன் 3 கிரிக்கெட் போட்டியில் ஆனந்தன் கஜன், சுதர்சன் அனுசாந்த் மற்றும் விநாயகசெல்வம் கவிதர்ஷன் ஆகியோரின் பிரகாசிப்புக்களின் உதவியுடன் யாழ். மத்தியக் கல்லூரி அணி 138 ஓட்டங்களால் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்துக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இலங்கை வரும் அவுஸ்திரேலிய அணி ; போட்டி அட்டவணை வெளியானது!

இந்துக் கல்லூரி அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மத்தியக் கல்லூரி அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது. அணியின் முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்க, முதல் 5 விக்கெட்டுகளையும் மத்திய கல்லூரி அணி 77 ஓட்டங்களுக்கு இழந்தது.

எனினும், இவ்வாறான பின்னடைவை தகர்த்து கஜன் மற்றும் கவிதர்ஷன் ஆகியோர் 6வது விக்கெட்டுக்காக 88 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளித்தனர். இதில் கஜன் 54 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களையும், கவிதர்ஷன் ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, மத்தியக் கல்லூரி அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ஓட்டங்களை குவித்தது. இந்துக் கல்லூரி சார்பாக சாந்தகுமார் தினேஷ்குமார் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்துக் கல்லூரி அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்ததுடன், ஓட்டவேகமும் குறையத்தொடங்கியது. மத்தியவரிசையில் ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்களும் ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதும், அவர்களால் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்ல முடியவில்லை.

எனவே தொடர்ச்சியாக குறைந்த ஓட்டங்களுக்கு துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழக்க, இந்துக் கல்லூரி அணி 41.5 ஓவர்கள் நிறைவில் 99 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்துக் கல்லூரி சார்பாக சாந்தன் கஜனாத் 18 ஓட்டங்களையும், பிரபாகரன் கீதபிரியன் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, மத்தியக் கல்லூரி சார்பாக சுதர்சன் அனுசாந்த் 4 விக்கெட்டுகளையும், திலீப்குமார் கௌதம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சுருக்கம்

யாழ். மத்தியக் கல்லூரி – 237/9 (50), கஜன் 64, கவிதர்ஷன் 50*, தினேஷ்குமார் 34/3

கொக்குவில் இந்துக் கல்லூரி – 99/10 (41.5), கஜனாத் 18, கீதபிரியன் 17, அனுசாந்த் 7/4, கௌதம் 25/3

முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி அணி 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<