கஜன், சுபர்ணனின் பிரகாசிப்புகளுடன் யாழ்.இந்துவுக்கு இலகு வெற்றி

U19 Schools Cricket 2022

507

பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் டிவிஷன் 3 கிரிக்கெட் தொடரில் நேற்று (25) நடைபெற்ற யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு எதிரான போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.

ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

யாழ். மத்தியின் வெற்றியை உறுதிசெய்த அனுசாந்த், கவிதர்ஷன், கஜன்

தங்களுடைய தீர்மானத்தின்படி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்துக் கல்லூரி அணியின் ஆரம்ப வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், மத்தியவரிசையில் ஆடிய M.கஜன் அற்புதமாக ஆடி அரைச்சதம் கடக்க (55), B.சுபர்ணன் 22 ஓட்டங்களையும், L.பிரியந்தன் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இதன்மூலம் இந்துக் கல்லூரி அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் N.சஜிகுமார் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதய கல்லூரி சார்பாக துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவிக்கத்தவறிய நிலையில், 30.3 ஓவர்கள் நிறைவில் 87 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது ஸ்கந்தவரோதய கல்லூரி தோல்வியை சந்தித்தது.

ஸ்கந்தவரோதய கல்லூரி சார்பாக K.சீலரன் 19 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, இந்துக் கல்லூரி சார்பாக சுபர்ணன் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எனவே, இந்தப்போட்டியில் இந்துக் கல்லூரி அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

சுருக்கம்

யாழ். இந்துக் கல்லூரி – 219/10 (49), கஜன் 55, சுபர்ணன் 22, பிரியந்தன் 22, சஜிகுமா் 3/16

ஸ்கந்தவரோதய கல்லூரி – 87/10 (30.3), சீலரன் 19, சுபர்ணன் 5/30

முடிவு – யாழ். இந்துக் கல்லூரி அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<