இலங்கையின் 19 வயதின்கீழ்ப்பட்ட டிவிஷன் – II பாடசாலை அணிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (16) நடைபெற்ற போட்டியில் களுத்துறை வித்தியாலய அணி, யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
>>புனித பேதுரு கல்லூரியினை வீழ்த்திய சென்.ஜோன்ஸ் கல்லூரி
அதேநேரம் இந்த தோல்வி சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு டிவிஷன்-II ஒருநாள் தொடரில் இந்தப் பருவகாலத்தில் கிடைத்த முதல் தோல்வியாகவும் மாறியிருக்கின்றது.
இரு அணிகளும் மோதிய போட்டி யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினைத் தெரிவு செய்திருந்தனர்.
அதன்படி முதலில் துடுப்பாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி ஆரம்பம் முதலே தடுமாற்றம் காட்டியிருந்ததோடு, 28.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 89 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் வீரர்கள் எவரும் 20 ஓட்டங்களை கூட தாண்டியிருக்காத நிலையில், களுத்துறை வித்தியாலய அணி சார்பில் விஷ்மிக்க கோஸ்டா 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க, சவின் அனுக்க மற்றும் ஹேசன் சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>சன்சஜன், சாரங்கனின் அரைச்சதங்களுடன் மத்திய கல்லூரிக்கு வெற்றி
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 90 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய களுத்துறை வித்தியாலய அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்து 90 ஓட்டங்களுடன் அடைந்தது.
களுத்துறை வித்தியாலய அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றிக்கு உதவியிருந்த பவான் சந்தீப்ப அரைச்சதம் தாண்டி 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
சென்.ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் – 89 (28.1) விஷ்மிக்க கோஸ்டா 5/22, சவீன் அனுக்க 2/11, ஹேசான் சில்வா 2/29
களுத்துறை வித்தியாலயம் – 90/2 (15.2) பவான் சந்தீப்ப 52*
முடிவு – களுத்துறை வித்தியாலயம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<