19 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு II பாடசாலை அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, களுத்துறை திருச்சிலுவை கல்லூரி அணியினை 36 ஓட்டங்களால் வீழ்த்தி திரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>> சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு முதல் தோல்வி
தமது கடைசி மோதலில் களுத்துறை வித்தியாலய அணியிடம் தோல்வியினை தழுவிய யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, களுத்துறை திருச்சிலுவை கல்லூரி அணியை எதிர்கொண்ட போட்டி ஞாயிற்றுக்கிழமை (20) களுத்துறை திஸ்ஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றுக்கொண்டனர். அதன்படி, அவ்வணி தமது இன்னிங்ஸிற்காக 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 101 ஓட்டங்களை எடுத்தது.
சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அந்தோனிப்பிள்ளை சுகேதன் 28 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, திருச்சிலுவை கல்லூரி அணிக்காக ஆகாஷ் தேவ்மின வெறும் 09 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.
>> காலி அணிக்காக சதமடித்த சங்கீத், பபசர
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 102 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய, களுத்துறை திருச்சிலுவை கல்லூரி அணி எதிரணி வீரர் அன்டன் அபிஷேக்கின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 20.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 65 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து, போட்டியில் தோல்வியினை தழுவியது.
களுத்துறை திருச்சிலுவை கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் நதீர தேஷான் 28 ஓட்டங்கள் பெற்றிருக்க, அன்டன் அபிஷேக் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், யோகதாஸ் விதுஷன் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும் தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் – 101 (34.5) அந்தோனிப்பிள்ளை சுகேதன் 28, ஆகாஷ் தேவ்மின 5/09, ஹன்சஜ பிரேயான் 2/21, நிலக்ஷ கசுன் 2/27
திருச்சிலுவை கல்லூரி, களுத்துறை – 65 (20.2) நதீர தேஷன் 28, அன்டன் அபிஷேக் 5/26, யோகதாஸ் விதுஷன் 3/19
முடிவு – யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி 36 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<