19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளிற்கு இடையிலான ‘சிங்கர்’ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவடைந்த போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி அணி, டி மெசனோட் கல்லூரி அணியை தோற்கடித்து இன்னிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களினால் இலகு வெற்றியினை சுவீகரித்தது.

இன்று ஆரம்பமாகிய மஹிந்த கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான மற்றுமொரு போட்டியில் துடுப்பாட்டத்தில் சிறப்பாக  செயற்பட்ட பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது வலுவான நிலையினை நோக்கி நகர்ந்துள்ளது.

தர்ஸ்டன் கல்லூரி எதிர் டி மெசனோட் கல்லூரி

நேற்று ஆரம்பமாகியிருந்த குழு D இற்கான இந்த போட்டியில், டி மெசனோட் கல்லூரி அணி 100 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தமது முதல் இன்னிங்சினை நிறைவு செய்திருந்தது. இதனை தொடர்ந்து, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரி அணி 53 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் இருந்த போது நேற்றைய போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது.

இதனை அடுத்து இன்று தமது முதலாவது இன்னிங்சினை தொடர்ந்த தர்ஸ்டன் கல்லூரி அணியினர் 63.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, தங்களது முதல் இன்னிங்சிற்கான ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக தெரிவித்தனர். இன்றைய துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட சரண நாணயக்கார அரைச்சதம் கடந்து 51  ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார்.

பந்து வீச்சில், டி மெசனோட் கல்லூரி அணி சார்பாக மிதில கீத் 47 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதன் பின்னர், 162 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த டி மெசனோட் கல்லூரி அணியினர், 35.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற காரணத்தினால் இன்னிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களினால் தோல்வியை தழுவினர்.

இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் டி மெசனோட் கல்லூரி அணி சார்பாக சஷேன் தினேத் 49 ஓட்டங்களையும், அவிஷ்க இந்திராஜித் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில், அபாரமாக செயற்பட்ட தர்ஸ்ட்டன் கல்லூரி அணியின் நவீன் குணவர்த்தன 43 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, சவான் பிரபாஸ் மற்றும் இமேஷ் தில்ஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி இந்த இலகு வெற்றிக்கு வித்திட்டிருந்தனர்.

போட்டி சுருக்கம்

டி மெசனோட் கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்) : 100/10(35.5) – சங்கீத் தேஷன் 28, இரோஷ் டி சில்வா 26, இமேஷ் டில்சான் 4/7, நவீன் குணவர்த்தன 4/26

தர்ஸ்டன் கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்): 262/6d(63.5) – நிமேஷ் லக்ஷன் 85, சவான் பிரபாஸ் 76, சரண நாணயக்கார 51*, மிதில கீத் 3/47, அஷன் பெர்னாந்து 2/77

டி மெசனோட் கல்லூரி அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) : 103/10(35.3) – சஷேன் தினேத் 49, அவிஷ்க இந்திராஜித் 25, நவீன் குணவர்த்தன 6/43, சவான் பிரபாஸ் 2/12, இமேஷ் தில்ஷான் 2/16

போட்டி முடிவுதர்ஸ்டன் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களால் வெற்றி


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் மஹிந்த கல்லூரி

இன்று ஆரம்பமாகிய குழு B இற்கான மற்றுமொரு போட்டியில், மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியும் காலி மஹிந்த கல்லூரியும் மோதிக்கொண்டன.

மஹிந்த கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹிந்த கல்லூரி அணித்தலைவர் முதலில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதன்படி தங்களது முதலாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய பிரின்ஸ் ஓப் வேல்ஸ் கல்லூரி அணியினர் ஆரம்பம் முதலே சிறப்பாக செயற்பட்டு 59 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 367 ஓட்டங்களை பெற்றிருந்த போது தங்களது முதலாவது இன்னிங்சினை இடைநிறுத்திக்கொள்வதாக தெரிவித்தனர்.

துடுப்பாட்டத்தில் பிரின்ஸ் ஓப் வேல்ஸ் கல்லூரி அணிக்காக அதி சிறப்பாக செயற்பட்ட விஷ்வ சத்துரங்க சதம் கடந்து 146 ஓட்டங்களை பெற்றதோடு, அவருடன் இணைந்து திலான் நிமேஷ் 61 ஓட்டங்களையும், திலங்க மதுரங்க 48 ஓட்டங்களையும் பிரின்ஸ் பெர்னாந்து 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் மஹிந்த கல்லூரி அணி சார்பாக அஷன் கந்தம்பி, ரேஷன் கவிந்த, கெவின் கொத்திகொட ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து, தங்களது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த மஹிந்த கல்லூரி அணியினர், இன்றைய நாள் ஆட்ட நிறைவின் போது 36 ஓவர்களிற்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 54 ஓட்டங்களை பெற்றிருந்தனர். துடுப்பாட்டத்தில் மஹிந்த கல்லூரி அணி சார்பாக சஞ்சுல ஷெகான் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி : 367/8d(59) – விஷ்வா சதுரங்க 146, திலான் நிமேஷ் 61, திலன்க மதுரங்க 48, பிரின்ஸ் பெர்னாந்து 40, அஷன் கந்தம்பி  2/33, ரேஷான் கவிந்த 2/40, கெவின் கொத்திகொட 2/89

மஹிந்த கல்லூரி அணி : 54/3(36) – சஞ்சுல ஷெகான் 25*

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்