லசித் குருஸ்புள்ளேயின் அபார சதத்துடன் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்த மாரிஸ் ஸ்டெல்லா

317
Schools Cricket

19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் டிவிஷன் – I கிரிக்கெட் தொடரில், இன்று நிறைவடைந்த போட்டியொன்றில் சிறப்பான துடுப்பாட்ட வலிமையுடன் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி பண்டாரநாயக்க கல்லூரியினை இன்னிங்ஸ் மற்றும் 79 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. இன்று நிறைவடைந்த மற்றைய போட்டிகளில் தர்மசோக கல்லூரி மற்றும் மலியதேவ கல்லூரி அணிகள் வெற்றிகளை தம்வசப்படுத்தியிருக்கின்றன.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி

இன்றைய இரண்டாவது நாளில், தமது முதல் இன்னிங்சினை 165 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தவாறு தொடர்ந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி, லசித் குருஸ்புள்ளே எதிரணியின் பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்து பெற்றுக்கொண்ட 151 ஓட்டங்கள் மற்றும், துஷான் குருகே ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 67 ஓட்டங்கள் ஆகியவற்றின் துணையுடன் இன்றைய நாளில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் பறிகொடுத்து, 62 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது. பந்து வீசசில் ஹசிந்த திமல் மாத்திரம் ஏனையோரை விட ஓரளவு சிறப்பாக செயற்பட்டு, 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பண்டாரநாயக்க கல்லூரி  சார்பாக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தமது முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட 134 ஓட்டங்கள் காரணமாக, இரண்டாவது இன்னிங்சினை 184 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஆரம்பித்த பண்டாரநாயக்க கல்லூரி, வெறும் 105 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியிடம் இன்னிங்ஸ் மற்றும் 79 ஓட்டங்களினால் தோல்வியினை தழுவியது. பண்டாரநாயக்க கல்லூரி சார்பாக, பசிந்து பண்டார மாத்திரம் அதிகபட்மசமாக 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுன் இடது கை பந்து வீச்சாளரான பசிந்து உஸ்ஹெத்தி 5 விக்கெட்டுகளை மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி சார்பாக சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 134 (50.3) – ஹசிந்த திமல் 30, சசிரி அதிகாரி 24, சச்சிந்து கொலம்பகே 4/13, ரவிந்து பெர்னாந்து 3/26

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 318/6d (62) – லசித் குருஸ்புள்ளே 151, துஷான் குருகே 67*, ஹசிந்த திமல் 2/40

பண்டாரநாயக்க கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 105 (35.5) – பசிந்து பண்டார 20, பசிந்து உஸ்ஹெத்தி 5/39

போட்டி முடிவு – மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 79 ஓட்டங்களால் வெற்றி


அநுராதபுரம் மத்திய மகாவித்தியாலயம் எதிர் அம்பலங்கொடை தர்மசோக கல்லூரி

நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில், முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது 184 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த அனுராதபுர மத்திய மகாவித்தியாலய அணி, இன்றைய நாளில் தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்து, 47.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டது. நேற்று 70 ஓட்டங்களுடன் களத்தில் நின்றிருந்த தனன்ஜய தம்மித்த 91 ஓட்டங்களை மொத்தமாக இந்த இன்னிங்சில் அனுராதபுர கல்லூரிக்காக பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் தர்மசோக கல்லூரி சார்பாக ஹர்ஷஜித் ரோஷன், லசித் குமார, கவிந்து நதீஷன், நிமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை 99 ஓட்டங்கள் முன்னிலையில் ஆரம்பித்த தர்மசோக கல்லூரி அணியானது 34 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் தர்மசோக கல்லூரியின் தலைவர் உஷான் இமன்த 58 ஓட்டங்களை பெற்றதுடன், பந்து வீச்சில் ரவிந்திர பிரபாஷ்வர 78 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை அநுராதபுர மத்திய மகாவித்தியாலயத்திற்காக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், 286 என்கிற கடின வெற்றி இலக்கினை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த அனுராதபுர கல்லூரி அணி, 40 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் கடந்த போட்டியில் தோல்வியினை சந்தித்துக்கொண்ட தர்மசோக கல்லூரி அணி, இப்போட்டியில் மேலதிக 164 ஓட்டங்களினால் அபார வெற்றியீற்றிக்கொண்டது. தர்மசோக கல்லூரியின் இந்த வெற்றிக்கு வழிவகுத்திருந்த லசித் குமார 3 விக்கெட்டுகளையும், நிமேஷ் மெண்டிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

முன்னதாக, அனுராதபுர சமதி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில், தர்மசோக கல்லூரி அணி, ரவிந்து ரஷன்தவின் அபார சதத்துடன் தமது முதல் இன்னிங்சிற்காக, 310 ஓட்டங்களை பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

போட்டியின் சுருக்கம்

தர்மசோக கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 310 (56.5) – ரவிந்து ரஷந்த 116, உஷான் இமன்த 56*, சிதும் நிலுமிந்த 5/95, மதுரங்க சந்திரரத்ன 2/75

அனுராதபுர மத்திய மகா வித்தியாலயம்(முதல் இன்னிங்ஸ்): 211 (47.1) – தனஞ்ஜய தம்மித்த 91, சித்ரக்க சிரன்த 35, ஹர்ஷஜித் ரோஷன் 2/22

தர்மசோக கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 196 (34) – உஷான் இமன்த 58, ரவிந்திர பிரபாஷ்வர 6/78, சிதும் நிலுமிந்த 4/80

அனுராதபுர மத்திய மகா வித்தியாலயம்(இரண்டாவது இன்னிங்ஸ்): 131 (40) – லசித் குமார 3/26, நிமேஷ் மெண்டிஸ் 2/18

போட்டி முடிவு – தர்மசோக கல்லூரி அணி 164 ஓட்டங்களினால் வெற்றி


ஜனாதிபதி கல்லூரி எதிர் குருநாகல் மலியதேவ கல்லூரி

புளும் பீல்ட்  மைதானத்தில் நேற்று தொடங்கியிருந்த இப்போட்டியின் இரண்டாவது நாளினை 197 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தவாறு, மலியதேவ கல்லூரி அணி இன்று தொடர்ந்து, நேற்று அரைச்சதம் கடந்திருந்த தமித்த சில்வா ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 110 ஓட்டங்களின் துணையுடன், 64.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை குவித்திருந்த போது, தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது. இன்று மோசமான பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்த ஜனாதிபதி கல்லூரி சார்பாக தனுல சமோத் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை 145 ஓட்டங்கள் பின்தங்கியவாறு  தொடங்கிய, ஜனாதிபதி கல்லூரி அணி 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து நிறைவு செய்து கொண்டது. ஜனாதிபதி கல்லூரிக்காக சச்சித்த லியனகே 47 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்றிருந்த வேளையில், மலியதேவ கல்லூரி சார்பாக நேற்று பந்து வீச்சில் அசத்தியிருந்த சன்ஜீவன் பிரியதர்ஷன 80 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி கல்லூரி அணி, இரண்டாவது இன்னிங்சில் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் காரணமாக, 69 ஓட்டங்கள் வெற்றியிலக்காக மலியதேவ கல்லூரிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை பெறுவதற்கு களமிறங்கிய மலியேதவ கல்லூரி அணி, 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 15.5 ஓவர்களில் 69 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கினை அடைந்தது.

முன்னதாக, மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த, ஜனாதிபதி கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சிற்காக, 155 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 155 (50) – ஷாலக பண்டார 37, றிபாஸ் மஹ்ரூப் 33, சன்ஜீவன் பிரியதர்ஷன 6/21

மலியதேவ கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 300/7d (64.2) – தமித சில்வா 110*, கவீன் பண்டார 35, தனுல சமோத் 3/67

ஜனாதிபதி கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 213 (56.5) – சச்சித்த லியனகே 47, மாலக டி சில்வா 37, சன்ஜீவன் பிரியதர்ஷன 5/80

மலியதேவ கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 69/2 (15.5) – துலாஜ் ரணதுங்க 31*

போட்டி முடிவு – மலியதேவ கல்லூரி அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி


இசிபதன கல்லூரி எதிர் லும்பினி கல்லூரி

நேற்றைய முதலாம் நாள் நேர ஆட்டத்தில் இசிபதன கல்லூரி அணி, முதல் இன்னிங்சிற்காக 281 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்த போது, இப்போட்டியின் ஆட்டநேரம் நிறைவிற்கு வந்தது.

இதனால், இன்று தமது முதல் இன்னிங்சினை ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்த லும்பினி கல்லூரி, தமது முதல் இன்னிங்சில் வெறும் 117 ஓட்டங்களை மாத்திரம் குவித்து இன்னிங்சை முடித்துக்கொண்டது. லும்பினி கல்லூரி சார்பாக அதிகபட்சமாக வினு ஹேமல் மாத்திரம் 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட இவ்வேளையில், இடது கை சுழல் பந்து வீச்சாளரான லஹிரு தில்ஷான் 5 விக்கெட்டுகளை 34 ஓட்டங்களுக்கு இசிபதன கல்லூரி சார்பாக சாய்த்திருந்தார்.

பின்னர், லும்பினி கல்லூரி பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் குறைவு என்பதால், மீண்டும் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்டு, 65 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை பெற்றிருந்த போது, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேரம் நிறைவிற்கு வந்தது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. லும்பினி கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் வினு ஹேமல் 56 ஓட்டங்களையும் தனுக்க தாபரே 55 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் முன்னைய இன்னிங்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த லஹிரு தில்ஷான் இந்த இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 281 (91.3) – சஞ்சுல அபேவிக்ரம 88, அயன சிறிவர்தன 56, ஹர்ஷ ரத்னாயக்க 39, தனுக்க தாபரே 5/56, விமுக்தி குலதுங்க 3/88

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 117 (38.4) – வினு ஹேமால் 20, லஹிரு தில்ஷான் 5/34, சஞ்சுல பண்டார 3/14

லும்பினி கல்லூரி f/o(இரண்டாவது இன்னிங்ஸ்): 224/9 (65) – வினு ஹேமால் 56, தனுக்க தாபரே 55, லஹிரு தில்ஷான் 3/57

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது, இசிபதன கல்லூரி முதல் இன்னிங்ஸில் வெற்றி


புனித செபஸ்டியன் எதிர் பன்னிபிட்டிய தர்மபால கல்லூரி

இன்று ஆரம்பமாகிய, குழு A இற்கான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த தர்மபால கல்லூரியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்து கொண்டனர்.

இதன்படி களமிறங்கிய அவர்கள், எதிரணி வீரர்களின் பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் திணறி 47 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களினை மாத்திரம் முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டனர். அவ்வணியின் சார்பாக அதிகபட்சமாக கிம்ஹான் குணசிங்க 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இவ்வேளையில், பந்து வீச்சில் அபாரம் காட்டிய தஷிக் பெரேரா மற்றும் தருஷ பெர்னாந்து ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை தொடங்கிய புனித செபஸ்டியன் கல்லூரி அணி, துலாஜ் சனில்க அரைச்சதம் கடந்து பெற்ற 64 ஓட்டங்கள், மலிந்த பீரிஸ் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 50 ஓட்டங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இன்றைய ஆட்டநேர நிறைவின் போது, 5 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போது இன்றைய நாள் போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 131 (47) – கிம்ஹான் குணசிங்க 30, தஷிக் பெரேரா 3/10, தருஷ பெர்னாந்து 3/29

புனித செபஸ்டியன் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 189/5 (46) – துலாஜ் சனில்க்க 64, மலிந்த பீரிஸ் 50*

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.