19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இளையோர் அணியுடன் இன்று (19) நடைபெற்ற தீர்மானமிக்க இறுதி லீக் போட்டியில் 3 விக்கெட்டுக்களால் தோல்வி அடைந்த இலங்கை இளையோர் அணி, இம்முறை இளையோர் உலகக் கிண்ண தொடரிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.
இதன்படி, ஆசிய இளையோர் சம்பியனான 19 வயதுக்கு உட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி D குழுவில் இருந்து முதல் அணியாக உலகக் கிண்ண காலிறுதிக்குத் தகுதிபெற்றுக் கொண்டதுடன், இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்திய பாகிஸ்தான் அணி 2ஆவது அணியாக காலிறுதிக்குத் தகுதியைப் பெற்றுக்கொள்ள, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறது.
நியூசிலாந்தின் வங்கராய் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவர் ஹசன் கான் இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
இங்கிலாந்து இளையோர் அணியில் விளையாடி வரும் இலங்கை வீரர் சவீன்
இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணிக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதல் நெருக்கடி கொடுக்க, 6 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதல் விக்கெட்டையும் இழந்தது.
இதில், அயர்லாந்துக்கு எதிராக சதம் பெற்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனஞ்சய லக்ஷான் 16 ஓட்டங்களுடனும், நிபுன் தனஞ்சய 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய மத்திய வரிசை வீரர்களும், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்ததுடன், 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்கு முன் முதல் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தது.
எனினும், ஜெஹான் டேனியல் மற்றும் அஷேன் பண்டார ஜோடி 6ஆவது விக்கெட்டுக்காக 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.
இலங்கை அணிக்கு இத்தொடர் முழுவதும் நம்பிக்கை கொடுத்து, சிறப்பாக ஆடிவந்த உதவித் தலைவரான ஜெஹான் டேனியல் 70 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அவருக்கு பக்க பலமாக ஓட்டக் குவிப்பில் ஈடுபட்ட அஷேன் பண்டார 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வந்த பின்வரிசை வீரர்களும் சோபிக்க தவறிய நிலையில் எஞ்சிய 4 விக்கெட்டுகளும் 40 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட, இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 48.2 ஓவர்களில் 188 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணிக்கு ஆரம்பம் முதல் அச்சுறுத்தலைக் கொடுத்த சுலைமான் சப்காத் 3 விக்கெட்டுக்களையும், சஹீன் ஷா அப்ரிடி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்நிலையில், 189 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய பாகிஸ்தான் இளையோர் அணி 6 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதில், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் திசரு ரஷ்மிக்க பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரொஹைல் நசீரை முதல் ஓவரிலேயே வீழ்த்தி நம்பிக்கை தந்தார்.
திசரு ரஷ்மிக்க மற்றும் நிபுன் மாலிங்கவின் அபார பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி 57 ஓட்டங்களுக்குள் முதல் 3 விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாறியது.
எவ்வாறாயினும் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அலி சர்யப் அஸீப் மற்றும் மொஹமட் தாஹா ஆகியோர் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை கொடுத்திருந்தனர்.
நிதானமாக விளையாடிய அலி சர்யப் அஸீப் 94 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். எனினும், போட்டியின் 25ஆவது ஓவரின் பிறகு பாகிஸ்தான் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாற போட்டியின் வெற்றி இரு அணிகளுக்குமிடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.
எனினும் 8ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித் தலைவர் ஹசன் கான் ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களையும், மற்றும் மொஹமட் மூசா ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் பெற்று அவ்வணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர்.
2017 இல் இருந்து இலங்கை அணி மீண்டு வர மஹேல ஜயவர்தன ஆதரவு
இறுதியில் 39 பந்துகள் மீதிமிருக்க பாகிஸ்தான் இளையோர் அணி, 43.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதன்போது இலங்கை இளையோர் அணி ஏழு பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தாலும், பாகிஸ்தான் இளையோர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து காலிறுதிக்குத் தகுதிபெற்றது.
இலங்கை அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளரான திசரு ரஷ்மிக்க 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதில் ஆப்கான் அணிக்காக அதிக ஓட்டங்களைப் பெற்ற அலி சர்யப் அஸீப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, 2004 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் இளையோர் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, இம்முறையும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கில் காலிறுதிக்குத் தகுதிபெற்றுக்கொண்டது. அதேநேரம், பிரபல ஆப்கானிஸ்தான் இளையோர் அணியும் இரண்டாவது தடவையாக உலகக் கிண்ண காலிறுதிக்குத் தகுதிபெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை இளையோர் அணி – 188 (48.2) – ஜெஹான் டேனியல் 53, அஷேன் பண்டார 37, சுலைமான் சப்காத் 3/29, சஹீன் ஷா அப்ரிடி 2/41
பாகிஸ்தான் இளையோர் அணி – 190/7 (43.3) – அலி சர்யப் அஸீப் 59, மொஹமட் செய்ட் அலாம் 28, ஹசன் கான் 24*, மொஹமட் தாஹா 24, திசரு ரஷ்மிக்க 3/47
முடிவு – பாகிஸ்தான் இளையோர் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி