இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (21) நடைபெற்றன. இந்த போட்டிகளுடன் தொடரின் குழுநிலை ஆட்டங்கள் முடிவுற்றதோடு எதிர்வரும் சனிக்கிழமை (23) கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மேல் மாகாண மத்திய அணியை மேல் மாகாண வடக்கு அணி எதிர்கொள்ளவுள்ளது.
கிழக்கு மாகாணம் எதிர் ஊவா மாகாணம்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மற்றும் ஊவா மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டதால் அந்த ஆட்டம் முடிவின்றி கைவிடப்பட்டது.
கடைசி போட்டியில் வட மாகாணத்திற்கு தோல்வி
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 45.4 ஓவர்களுக்கு 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இடது கை துடுப்பாட்ட வீரரான கவிந்து லக்ஷித சிறப்பாக ஆடி 48 ஓட்டங்களை குவித்தார்.
ஊவா மாகாணம் சார்பில் பந்துவீச்சில் ஷேதக்க தெனுவன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ரந்துனு கங்கானாத் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஊவா மாகாண அணி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறிக்கிட்டது. இதனைத் தொடர்ந்து போட்டியை தொடர முடியாத நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.
போட்டியின் சுருக்கம்
கிழக்கு மாகாணம் – 171 (45.2) – கவிந்து லக்ஷித்த 48, ஷேதக்க தெனுவன் 3/19, ரன்துனு கங்கானாத் 2/21
ஊவா மாகாணம் – 13/0 (2.1)
முடிவு – முடிவு இல்லை (No Result)
மேல் மாகாணம் மத்திய எதிர் தென் மாகாணம்
கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சம்பியன் தென் மாகாண அணியை 2 விக்கெட்டுகளால் போராடி வீழ்த்திய மேல் மாகாண மத்திய அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
எனினும் தென் மாகாண அணிக்காக சதுன் மெண்டிஸ் அபார துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி 80 ஓட்டங்களை பெற்றதோடு அவர் இந்த தொடர் முழுவதிலும் சோபித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென் மாகாண அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சதுன் மெண்டிஸ் தனது 80 ஓட்டங்களை பெற 94 பந்துகளுக்கு முகம்கொடுத்து 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார். இவரைத் தவிர, வினுர துல்சர 86 பந்துகளுக்கு முகம்கொடுத்து 44 ஓட்டங்களைப் பெற்றார்.
கொழும்பு நாலந்த கல்லூரியைச் சேர்ந்த வலதுகை வேகப்பந்து வீச்சாளர் சமிந்து விஜேசிங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அஷேன் டானியல் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
ஐ.சி.சியின் போட்டித் தடைக்கு எதிராக சந்திமால் மேன்முறையீடு
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேல் மாகாண மத்திய அணி முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் வெற்றி இலக்கை எட்ட போராட வேண்டி ஏற்பட்டது. கலண பெரேரா (33*) மற்றும் துனித் வெல்லாலகே (27*) கடைசி வரை போராடி மேல் மாகாண மத்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.
இதன் மூலம் அந்த அணி 48.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 198 ஓட்டங்களைப் பெற்றது.
இந்த வெற்றியுடன் மேல் மாகாண வடக்கு அணியுடனான இறுதிப் போட்டிக்கு மேல் மாகாண மத்திய அணி தெரிவானது.
போட்டியின் சுருக்கம்
தென் மாகாணம் – 197 (49.4) – சதுன் மெண்டிஸ் 80, வினுர துல்சர 44, நிபுன் மாலிங்க 26, சமிந்து விஜேசிங்க 4/44, அஷேன் டானியல் 3/37, சந்தூஷ் குணதிலக்க 2/14
மேல் மாகாணம் மத்திய – 198/8 (48.4) – சிதார ஹபுஹின்ன 31, கமில் மிஷார 25, பசிந்து சூரியபண்டார 31, ஷேனால் தங்கல்ல 24, கலண பெரேரா 33*, துனித் வெல்லாலகே 27*, சதுன் மெண்டிஸ் 33/3
முடிவு – மேல் மாகாண மத்திய 2 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<