பாடசாலை அணிகள் பங்குபற்றும் 19 வயதிற்கு உட்பட்ட டிவிஷன் I கால்பந்து போட்டித்தொடரில் இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட களுத்துறை திருச் சிலுவைக் கல்லூரி அணி இவ்வருடத்திற்கான இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
அரையிறுதிக்கு இலகுவாக நுழைந்த மாரிஸ் ஸ்டெல்லா, புனித ஜோசப் கல்லூரிகள்
அரையிறுதிப் பலப்பரீட்சைகள் மொறகஸ்முல்ல விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன. ஏற்கனவே இடம்பெற்று முடிந்த குழு மட்டப் போட்டிகளின் நிறைவில் A குழுவில் முதல் இடத்தினைப் பெற்ற நடப்புச் சம்பியன் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியும், B குழுவில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற களுத்துறை திருச் சிலுவைக் கல்லூரி அணியும் இன்றைய முதலாவது அரையிறுதியில் மோதின.
இப்போட்டி நீண்ட நேரம் தாமதித்து ஆரம்பிக்கப்பட்டமையினால் முழு நேரம் 80 நிமிடங்களுக்குக் குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போட்டி ஆரம்பமாகி இரண்டாவது நிமிடத்திலேயே நடப்புச் சம்பியனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியின் பின்கள வீரர் ஒருவரின் கையில் பந்து பட்டமையினால் எதிரணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று வழங்கப்பட்டது. அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி, நேரடியாக கோல் கம்பங்களுக்குள் உதைந்த திருச் சிலுவைக் கல்லூரி அணியின் கெவின் நிர்மால், தனது அணியை போட்டியின் ஆரம்பத்திலேயே முன்னிலையடையச் செய்தார்.
அதன் பின்னர், 14ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோணர் உதையை மாரிஸ் ஸ்டெல்லா அணியின் கோல்காப்பாளர் உமேஷ் சஞ்ஜேய் சிறந்த முறையில் தடுத்து பிடித்தார்.
போட்டியின் 17ஆவது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா வீரர் நிசல் தரிந்த பல வீரர்களைக் கடந்து பந்தைக் கொண்டு சென்று கோல் கம்பங்களுக்குள் உதைந்தார். எனினும் அது கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.
‘டிவிஷன் I’ அரையிறுதிச் சுற்று
எனினும் 18ஆவது நிமிடம் திருச் சிலுவைக் கல்லூரி அணி வீரர் நிர்மால் உதார, தனக்கு கிடைத்த பந்தை மிகவும் வேகமாக தனியே எடுத்துச் சென்று கோல் கம்பங்களுக்குள் செலுத்த, அது அவ்வணியின் இரண்டாவது கோலாக மாறியது.
இந்த கோலின் மூலம் நிர்மால் உதார இத்தொடரில் அதிக கோல்களைப் பெற்றவர்கள் வரிசையில் (10 கோல்கள்) முதல் இடத்தைப் பெற்றார்.
அதன் பின்னர் முதல் பாதி முடியும்வரை இரு தரப்பினரும் கோலுக்கான பல முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அவை சிறந்த பலன்களை கொடுக்கவில்லை.
முதல் பாதி: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (00) – (02) திருச் சிலுவைக் கல்லூரி
அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் மிகப்பெரிய அழுத்தத்துடன் விளையாட வேண்டிய நிலைமை நடப்புச் சம்பியன் மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கு இருந்தது.
போட்டியின் 47ஆவது மற்றும் 50ஆவது நிமிடங்களில் திருச் சிலுவைக் கல்லுரி அணி வீரர்கள் நேரடியாக பந்தை கோல் கம்பங்களுக்குள் செலுத்தி மற்றொரு கோல் வாய்ப்பை பெறுவதற்கான நீண்ட தூர உதை முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அவை வெற்றியளிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியின் பந்துப் பரிமாறல்கள் முதல் பாதியை விட மோசமாகவே இருந்தது. அதனை எதிரணி வீரர்கள் சாதகமாகவே பயன்படுத்தினர்.
இவ்வாறான ஒரு நிலையில், போட்டியின் 74ஆவது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணிக்கு ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அந்த உதையை தனது தலையால் முட்டி, அணித் தலைவர் அஞ்சன குனவர்தன கோலாக மாற்றினார்.
அதன் பின்னர், அவ்வணி வீரர்கள் திடீர் என்று விறுவிறுப்பாகினர். போட்டி நிறைவடைய குறைந்த நிமிடங்களே இருந்தமையினால் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தும் நோக்கில் அவர்கள் தீவிரமாக செயற்பட்டனர்.
அது போன்றே அவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் பல வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் அவற்றினால் மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் இரண்டாவது கோலைப் பெறவில்லை.
முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (01) – (02) திருச் சிலுவைக் கல்லூரி
Thepapare.com இன் ஆட்ட நாயகன் : நிர்மால் உதார (திருச் சிலுவைக் கல்லூரி)
கோல்கள் பெற்றவர்கள்
திருச் சிலுவைக் கல்லூரி
கெவின் நிர்மால் 2’, நிர்மால் உதார 18’
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி
அஞ்சன குனவர்தன 74’
போட்டியில் நிறைவில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் Thepapare.com இடம் கருத்து தெரிவிக்கும்பொழுது, ”இன்று எமது வீரர்கள் மோசமான ஒரு விளையாட்டையே வெளிப்படுத்தினர். எதிரணியின் முதல் கோலின் பின்னரே எமக்கு கோல்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தனே. அதுபோன்றுதான் அணித் தலைவர் அஞ்சனவுக்கு உதவிக்காக யாரும் சிறந்த முறையில் ஆடவில்லை. குறிப்பாக மத்தியகள வீரர்கள் தமது வழமையான விளையாட்டை வெளிப்படுத்தவில்லை” என்றார்.
அதேபோன்று திருச் சிலுவைக் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் கருத்து தெரிவிக்கும்பொழுது, ”எமது வீரர்கள் வெளிப்படுத்திய சிறந்த திறமையின் வெளிப்பாடே இந்த வெற்றி. அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயற்பட்டனர். இதே நம்பிக்கையுடன் இறுதிப் போட்டியை எதிர்கொள்ளவும் நாம் தயாராக உள்ளோம்” என்றார்.