பலம் பொருந்திய பாடசாலை கால்பந்து அணிகள் முட்டி மோதிய 19 வயதிற்கு உட்பட்ட ‘டிவிஷன் I’ கால்பந்து போட்டித் தொடரின் குழு மட்டப் போட்டிகளின் முடிவில் ‘B’ குழுவில் அனைவராலும் எதிபார்க்கப்பட்ட ஸாஹிரா கல்லூரி தொடரில் இருந்து வெளியேறியது. இதன்படி, ஹமீட் அல் ஹுசைனி மற்றும் திருச் சிலுவைக் கல்லூரிகள் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளன.
கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி, கொழும்பு ஸாஹிரா கல்லூரி, களுத்துறை திருச் சிலுவைக் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு புனித பேதுரு கல்லூரி, கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் கொழும்பு லும்பினி கல்லூரி ஆகிய அணிகள் ‘B’ குழுவில் மோதிக் கொண்டன.
இத்தொடரில் ஸாஹிரா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டாலும் அவர்களால் அரையிறுதிக்குகூட முன்னேற முடியாமற் போனது.
அடிக்கடி காலமாற்றம் செய்யப்பட்ட நேர அட்டவணை காரணமாக ஸாஹிரா கல்லூரிக்கு குறிப்பிட்ட 6 நாட்களுக்குள் 4 போட்டிகளில் விளையாட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை காணப்பட்டமையால் அவர்கள் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரிக்கெதிராக விளையாட மறுத்தனர். இதனால் நேரடி வெற்றி ஹமீட் அல் ஹுசைனி கல்லூரிக்கு வழங்கப்பட்டது. எனவே, ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி மற்றும் திருச் சிலுவைக் கல்லூரி அணிகள் சந்தித்துக்கொண்ட போட்டி B குழுவின் முக்கிய போட்டியாக அமைந்தது.
ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி
ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி சென்ற வருடம் இதே போட்டித்தொடரில் இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்ட அணியாகும். எனினும் மாரிஸ் ஸ்டெல்லா அணியுடனான இறுதிப்போட்டியில் இவர்களால் வெற்றி பெற முடியாமல் போனது.
ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி இவ்வருடத்தில் குழு B யின் வெற்றியாளர்களாக முதல் சுற்றுப்போட்டிகளை முடித்தனர். இவர்கள் தாம் விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்து 15 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றனர். ஸாஹிரா கல்லூரியுடன் கிடைக்கப் பெற்ற நேரடி வெற்றியும் இதில் அடங்கும்.
சுற்றுப்போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி, லும்பினி கல்லூரி மற்றும் ஆனந்த கல்லூரிகளை முறையே 6-1 மற்றும் 4-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தினர். மேலும் புனித பேதுரு கல்லூரி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டனர்.
எனினும் இவர்கள் இறுதிப் போட்டியிலே 2-1 என்ற கோல்கள் கணக்கில் திருச் சிலுவைக் கல்லூரி அணியிடம் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.
அவ்ணிக்காக அதிக கோல்களை நட்சத்திர வீரரும் அணியின் தலைவருமான மொஹமட் அமான் அடித்தார். இவர் ஒரு ஹட்ரிக் கோல் உட்பட மொத்தமாக 5 கோல்களை அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Hameed Al Husseinie College v St.Joseph’s College – U19 Division 1 Semi Finals 2016
Live from Moragasmulla Grounds on 19th of December 4.00 pm onwards.
திருச் சிலுவைக் கல்லூரி
களுத்தறை திருச் சிலுவைக் கல்லூரி கடந்த சில வருடங்களில் பாடசாலை மட்ட கால்பந்து போட்டிகளில் சிறப்பான ஒரு அணியாக உருவாகியுள்ளது. இவ்வருட கொத்மலே கிண்ண கால்பந்து போட்டித்தொடரில் காலிறுதி வரை முன்னேறியிருந்தமை அவ்வணியின் முன்னேற்றத்திற்கு ஒரு சான்றாக இருக்கின்றது.
திருச் சிலுவைக் கல்லூரி 14 புள்ளிகளுடன் B குழுவில் இரண்டாவது நிலையைப் பெற்றது. இதனால் இவர்கள் ஸாஹிரா அணியை பின்தள்ளி அரையிறுதி வாய்ப்பை தம்வசப்படுத்தினர். இவ்வணி வீரர்கள் தாம் சந்தித்த 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்ததுடன் 2 போட்டிகளை சமநிலையில் முடித்தனர்.
போட்டிகளும், புள்ளி அட்டவணையும்
திருச் சிலுவைக் கல்லூரி, அனந்த கல்லூரியை 6-0 என வெற்றியீட்டியதுடன் புனித பேதுரு கல்லூரியை போராடி 2-1 என வெற்றியீட்டியது. கொழும்பு றோயல் கல்லூரியுடனான போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
எனினும் சிறப்பான தடுப்பாட்டம் காரணமாக ஸாஹிரா அணியுடனான போட்டியை அவர்களது சொந்த மண்ணில் சமப்படுத்தினர். அவ்வணி குழு மட்டத்திலான தமது இறுதிப்போட்டியில் பலம் பொருந்திய ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியை 2-1 என தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
சுற்றுப்போட்டியின் முடிவில் சாஹிரா கல்லூரி மற்றும் றோயல் கல்லூரிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக்கொண்டன. ஆனந்த கல்லூரி இறுதி இடத்தை பெற்றுக்கொண்டது.
தீர்க்கமான போட்டிகள்
திருச் சிலுவைக் கல்லூரி 1-1 ஸாஹிரா கல்லூரி
திருச் சிலுவைக் கல்லூரி 2-1 ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி