புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குபட்ட சிங்கர் கிண்ணத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், குருநாகல் மலியதேவ கல்லூரியை 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய காலி ரிச்மண்ட் கல்லூரி அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
நாலந்த கல்லூரியை வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது தர்ஸ்டன் கல்லூரி
முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரிச்மண்ட் கல்லூரி அணித் தலைவர் கமிந்து மென்டிஸ், மலியதேவ கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தார். சிறந்த இலக்கு மற்றும் சிறந்த நுட்பத்துடன் பந்து வீசிய ரிச்மண்ட் கல்லூரி அணியின் பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலிருந்தே எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
குறிப்பான அணித் தலைவர் கமிந்து மென்டிஸ் அதிரடியாகப் பந்து வீசி, முக்கியமான நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த வகையில் ரிச்மண்ட் கல்லூரியின் பந்து வீச்சில் சிக்குண்ட மலியதேவ அணி 49.2 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அணியை பாரிய வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்காக இருவராக நின்று போராடிய தினஞ்சய பிரேமரத்ன மற்றும் நிசஞ்சல ஹெட்டியாராச்சி அகியோர் அதிக பட்ச ஓட்டங்களாக முறையே 41 மற்றும் 34 என்ற பெறுமதியான ஓட்டங்களை பதிவு செய்தனர்.
அதனையடுத்து, இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரி சார்பாக, அவ்வணியின் முன்வரிசை வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
தமது இன்னிங்சின் முதல் பந்திலிருந்தே அதிரடியாக துடுப்பாடிய தனஞ்சயன் லக்சான் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உள்ளடங்கலாக 86 ஓட்டங்களை விளாசினார்.
அதேநேரம், இறுதிப் போட்டிக்கான பிரவேசத்தை தீர்மானிக்கும் இந்த முக்கிய ஆட்டத்தில் அணித் தலைவர் கமிந்து மெண்டிஸ் தனது பங்களிப்பாக ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைவதற்கு துணை புரிந்தார்.
அந்த வகையில் ரிச்மண்ட் கல்லூரி வீரர்கள் 21 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு, 160 ஓட்டங்களைப் பெற்று போட்டியை எட்டு விக்கெட்டுகளால் வெற்றி கொண்டனர்.
இலங்கை அணியில் குசலுக்குப் பதிலாக சிறிவர்தன
இந்த வெற்றியின்மூலம், ஏற்கனவே முன்னைய அரையிறுதியில் வெற்றி பெற்றுள்ள தர்ஸ்டன் கல்லூரி அணியை, ரிச்மண்ட் கல்லூரி அணி கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கான பலப்பரீட்சையான இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான சிங்கர் கிண்ணத்தின் இறுதிப் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு வெஸ்லி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
மலியதேவ கல்லூரி, குருநாகல்: 157/10 (49.2) தினஞ்சய பிரேமரத்ன 41, நிசஞ்சல ஹெட்டியாராச்சி 34, கமிந்து மெண்டிஸ் 4/24
ரிச்மண்ட் கல்லூரி, கால: 160/2 (21.4) தனஞ்சயன் லக்சான் 86, கமிந்து மெண்டிஸ் மெண்டிஸ் 58*
போட்டி முடிவு: ரிச்மண்ட் கல்லூரி அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி