19 வயதிற்கு கீழான டிவிஷன் I கால்பந்து சுற்றுப்போட்டித்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெற்றியாளர்கள் மற்றும் மூன்றாம் இடத்தை பெறும் அணிகளை தீர்மானிப்பதற்கான போட்டிகள் இன்று புதன்கிழமை(21) ராஜகிரிய, மொரகஸ்முல்ல மைதானத்தில் நடைபெறவுள்ளது.
3ஆம் இடத்திற்கான போட்டி
அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மற்றும் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி இரண்டும் அதிர்ச்சி தோல்வி கண்டன.
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 2-1 என்ற கோல் கணக்கில் திருச் சிலுவை கல்லூரியிடம் தோல்வி கண்டது. முதலாவது பாதியில் 2 கோல்களை கொடுத்து பின்னிலையில் இருந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி இரண்டாவது பாதியில் ஒரு கோலினை அடித்தபோதிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.
அதேவேளை ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி பெனால்டி உதை வரை சென்று புனித ஜோசப் கல்லூரியிடம் தோல்வி கண்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தாததனால் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
மாரிஸ் ஸ்டெல்லா அணிக்காக தலைவர் அஞ்சன குணவர்தன மற்றும் நிசால் தரிந்த மற்றும் தத்சர பெர்னாண்டோ ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி நட்சத்திர வீரர்களான தலைவர் அமான் பைசர், நடுக்கள வீரர் மொஹமட் ரிஷான் மற்றும் பின்கள வீரர் மொஹமட் பாசில் ஆகியோரில் அதிகம் தங்கியிருக்கும்.
சென்ற வருடம் இரு அணிகளும் இதே போட்டித்தொடரின் இறுதி போட்டியில் மோதிய போது மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 2-0 என வெற்றி பெற்றது. ஆனால் இவ்வருடம் இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதனால் வெற்றி எவர்வசப்படும் எனக்கூற முடியாது.
முதலிடத்திற்கான போட்டி
இவ்வருடத்திற்கான டிவிஷன் I சுற்றுத்தொடரின் வெற்றியாளர்கள் கேடயத்திற்காக போட்டியிடும் இரு அணிகளும் தமது குழுக்களில் இரண்டாம் இடத்தினை பிடித்த அணிகளாகும்.
திருச் சிலுவை கல்லூரி இவ்வருடம் நடந்த போட்டித்தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாகும். இவரகள் சுற்றுப்போட்டிகளில் 14 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் நிறைவு செய்தனர். குறிப்பாக சாஹிரா கல்லூரியுடனான போட்டியை சமநிலையில் முடித்ததுடன் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியை 2-1 என்ற கணக்கில் வெற்றியீட்டியது. அரையிறுதியில் கடந்த வருட சம்பியன்களான மாரிஸ் ஸ்டெல்லா அணியை 2-1 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
புனித ஜோசப் கல்லூரி சுற்றுப்போட்டிகளில் 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது. மாரிஸ் ஸ்டெல்லா அணியிடம் தோல்வியடைந்த போதிலும் மற்றைய போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக விளையாடியமை குறிப்பிடத்தக்கது. ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியுடனான தீர்க்கமான அரையிறுதிப் போட்டியில் பெனால்டி வரை சென்று வெற்றியை தமதாக்கியது புனித ஜோசப் கல்லூரி.
இறுதிப்போட்டியில் திருச் சிலுவை அணிக்காக நிர்மல் உதார சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகிறார். மேலும் பின்களத்தில் அப்தல் உபாதையுடன் காணப்பட்டாலும் அரையிறுதியில் சிறப்பாக விளையாடினார். எனவே அவரிடமிருந்தும் சிறந்த ஒரு ஆட்டம் எதிர்பார்க்கப்படும்.
புனித ஜோசப் கல்லூரி அணிக்காக தலைவர் மயூரக பெரேரா தொடர்ந்து திறமையான ஆட்டத்தினால் அணியை வழிநடாத்தி வருகிறார். இவருக்கு பக்கபலமாக முன்களத்தில் சசிந்த மதுரங்க மற்றும் அசேல மதுஷான் ஆகியோர் விளையாடுவர்.
இறுதியாக இரு அணிகளும் கொத்மலை சொக்ஸ் கால்பந்து சுற்றுப்போட்டித்தொடரில் மோதிக்கொண்டன. இப்போட்டியில் திருச் சிலுவை கல்லூரி புனித ஜோசப் கல்லூரியை 1-0 என வீழ்த்தி அவர்களை தொடரிலிருந்து வெளியனுப்பியமை மட்டுமல்லாது தாம் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
இதற்கு பதிலடி கொடுக்குமுகாமாக புனித ஜோசப் கல்லூரி விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டாலும் திருச் சிலுவை கல்லூரியும் சளைக்காமல் விளையாடும் என்பதில் சந்தேகமில்லை.