பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட முதல்தர அணிகளுக்கான (டிவிஷன் 1) இவ்வருட கால்பந்து சம்பியன்சிப் தொடரின் முக்கிய போட்டிகளில் மாரிஸ் ஸ்டெல்லா, கொழும்பு புனித ஜோசப் மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

புனித பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதல் இறுதி வரை மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.

போட்டி ஆரம்பித்து 10 நிமிடங்கள் கடந்த நிலையில், மாரிஸ் ஸ்டெல்லா அணியின் தத்ஸர பெர்ணான்டோவின் நீண்ட தூர உதையின் மூலம் அவ்வணி தமக்கான முதல் கோலைப் பெற்றுக் கொண்டது.

போட்டியின் புகைப்படங்கள்

அதன் பின்னர் இரு அணிகளும் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் மேலதிக கோல்கள் பெறப்படாத நிலையில், முதல் பாதி நிறைவடைய இருந்த இறுதி நேரத்தில் போட்டியின் 40ஆவது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா அணியின் பல வீரர்கள் பந்தை சிறந்த முறையில் பரிமாற்றி எதிரணி வீரர்கள் பலரைக் கடந்து வந்து இறுதியாக ஷதுர புவனெகவிற்கு வழங்க, அவர் அதனை கோலாக மாற்றி முதல் பாதி நிறைவடையும்பொழுது மேலும் ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.

முதல் பாதி: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 02 – 00 புனித பெனடிக்ட் கல்லூரி

பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது பாதியிலும் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் ஆதிக்கமே இருந்தது. போட்டியில் சிறந்த திறமையை வெளிக்காட்டி வந்த அஞ்ஜன குனவர்தன 44ஆவது நிமிடத்தில் தனது முதலாவது கோலைப் பெற, அது அணியின் மூன்றாவது கோலாக உயர்ந்தது.

அதனைத் தொடர்ந்து போட்டியின் இறுதி கோல் 74ஆவது நிமிடத்தில் இசுரு பெர்ணான்டோ மூலம் பெறப்பட்டது.

மறுமுனையில் பெனிடிக்ட் கல்லூரி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகியே போனது.  அணியில் ஒரு சிறந்த தொடர்பாடல் முறைமை இல்லாமை அவர்களது தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்

இப்போட்டியின் இரண்டு பாதிகளும் தலா 40 நிமிடங்கள் விளையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 04 – 00 புனித பெனடிக்ட் கல்லூரி

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – அஞ்ஜன குனவர்தன (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி)

கோல் பெற்றவர்கள்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி- தத்ஸர பெர்ணான்டோ (10’), ஷதுர புவனெக(40’), அஞ்ஜன குனவர்தன(44’), இசுரு பெர்ணான்டோ (74’)


புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கட்டுனேரிய புனித செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் முதல் 15 நிமிடங்களிலும் ஜோசப் கல்லூரி வீரர்கள் காட்டிய ஆபார ஆட்டத்தினால், குறித்த நேரத்திலேயே அவ்வணி தமது முதல் 3 கோல்களையும் பெற்று முன்னிலையடைந்தது.

போட்டியின் 8ஆவது நிமிடத்தில் அசேல மதுஷானும், 12ஆவது நிமிடத்தில் ஜசொன் பெர்ணான்டோவும், 14ஆவது நிமிடத்தில் அமில தனன்ஜயவும் தலா ஒரு கோலினைப் போட, அது செபஸ்டியன் அணியினருக்கு மிகப்பெரிய அழுத்தமாக மாறியது.

போட்டியின் புகைப்படங்கள்

எனினும், போட்டியின் 21ஆவது நிமிடத்தில் ஜோசப் அணியின் கோல்காப்பாளர், பெனால்டி பெட்டியினுள் வைத்து எதிரணி வீரர் தனன்ஜய பெர்னான்டோவுடன் முறையற்ற விதத்தில் மோதினார். எனவே செபஸ்டியன் அணிக்கு பெனால்டி உதைக்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்பில் அவ்வணி வீரர் ஹர்ஷ மதுரங்க தமது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 03 – 01 புனித செபஸ்டியன் கல்லூரி

இரண்டு கோல்கள் முன்னிலையில் உள்ள வேளையில் போட்டியின் இரண்டாவது பாதியை ஆரம்பித்த ஜோசப் கல்லூரிக்கு 59ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோல் கிடைக்கப்பெற்றது. அவ்வணியின் சஷின்த மதுரங்க சிறந்த முறையில் கோல் நோக்கி பந்தை வேகமாக உதைந்து, அந்த கோலைப் பெற்றார்.

எனினும் அதன் பின்னர் போட்டியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இரு அணியினரும் அதிரடியாகவும் தடுப்பு முறையிலும் விளையாடவே, போட்டியின் இறுதி 30 நிமிடங்களில் எந்த அணியினராலும் கோல்களைப் பெறுவதற்கு முடியாமல் போனது. எனினும் இரு அணிகளுக்கும் கோல்களுக்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

எனினும் இரண்டாவது பாதியில் மதுரங்கவின் கோல் மாத்திரமே ஒரே ஒரு கோலாக அமைந்தது.

முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 04 – 01 புனித செபஸ்டியன் கல்லூரி

ThePapare.com  இன் ஆட்ட நாயகன் – அமில தனன்ஜய (புனித ஜோசப் கல்லூரி)

கோல் பெற்றவர்கள்

புனித ஜோசப் கல்லூரி – அசேல மதுஷான்(08’), ஜசொன் பெர்ணான்டோ(12’), அமில தனன்ஜய(14’), சஷின்த மதுரங்க(59’)

புனித செபஸ்டியன் கல்லூரி – ஹர்ஷ மதுரங்க(21’)


ஸாஹிரா கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி

பலரது எதிர்பார்ப்பிற்கும், ஆவலுக்கும் மத்தியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் மிகப் பெரிய ஒரு போராட்டத்திற்கு மத்தியிலேயே ஸாஹிரா அணி வெற்றி கொண்டது.

போட்டி ஆரம்பித்தவுடன், ஸாஹிரா அணியின் பொதுவான செயலான எதிரணியின் திசைக்கு நீண்ட தூர பாஸ்களை வழங்கும் முறையை அவ்வணி மேற்கொண்டது. எனினும் பேதுரு அணியின் பின்கள வீரர்கள் அதனை தடுத்து ஆடினர். எனவே, ஸாஹிரா அணியினருக்கு எதிரணியின் பின்கள வீரர்கள் ஒரு அழுத்தமாக இருந்தனர்.

போட்டியின் புகைப்படங்கள்

பின்கள வீரர்கள் தடுப்பை மேற்கொண்டு அணிக்கு பங்களிப்பு வழங்க, அதற்கு பரிகாரமாக பேதுரு அணியின் முன்கள வீரர்களும் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தினர். எனினும் கோல்கள் பெறப்படவில்லை.

எனவே, முதல் பாதி கோல்கள் எதுவும் இன்றி முடிவுறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், 45ஆவது நிமிடத்தில் ஸாஹிரா அணியின் தலைவர் பரூட் பாயிஸ் சிறந்த முறையில் முர்ஷீதிற்கு பந்தை வழங்க, அதனை அவர் கோலாக மாற்றி முதல் பாதியை முன்னிலைப்படுத்தி முடித்தனர்.

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 01 – 00 புனித பேதுரு கல்லூரி

போட்டியை சமப்படுத்தல் அல்லது இரண்டு கோல்களைப் பெற்று வெற்றி பெறுதல் என்ற நோக்குடன் இரண்டாவது பாதியை ஆரம்பித்த பேதுரு கல்லூரி வீரர்கள், முதல் பாதியை விட ஒரு வித்தியாசமான, அபாரமான ஆரம்பத்தினை வெளிப்படுத்தினர்.

மறு முனையில் கோல்களை எதிரணிக்கு வழங்கக் கூடாது என்ற நோக்குடன் இருந்த ஸாஹிரா அணியின் பின்கள வீரர்களும் சிறந்த முறையில் விளையாடினர்.  பேதுரு கல்லூரியின் முன்கள வீரர்கள் தமது திசைக்கு பலமுறை கொண்டுவந்த பந்தை அவர்கள் தடுத்து ஆடினர்.

அதேவேளை, ஸாஹிரா அணியின் முன்கள வீரர்கள் எதிரணியின் கோல் கம்பங்கள் வரை கொண்டுசென்ற பந்துகளை, இறுதி நேரத்தில் கோல் அடிக்காமல் தமக்கிருந்த வாய்ப்புகளை வீணடித்தனர். குறிப்பான இரண்டாவது பாதியில் ஸாஹிரா அணியினர் முன்னிலையில் இருந்தாலும் ஒரு அழுத்தத்தை முகம்கொடுத்து விளையாடுவது போன்றே விளையாடினர்.

போட்டியின் இறுதி நேரத்தில் பேதுரு கல்லூரி வீரர்களுக்கு சில ப்ரீ கிக் வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் அவற்றின் மூலமும் அவர்கள் பயன் பெறாத நிலையில் போட்டி நிறைவடைந்தது.

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 01 – 00 புனித பேதுரு கல்லூரி

ThePapare.com  இன் ஆட்ட நாயகன் – இஷான் தனுஷ்க (புனித பேதுரு கல்லூரி)

கோல் பெற்றவர்கள்

ஸாஹிரா கல்லூரி – மொஹமட் முர்ஷீத்(08’)